எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோவை ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர...

 கோவை ஈஷா கோவை ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிலை அமைத்ததில் விதிமீறல்களா?- விழாவில் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ளது ஈஷா யோகா மையம். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்துக்கு உட்பட்ட இந்தப் பகுதி, மலைதள பாதுகாப்புக் குழுமத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதியாகும். இதனால், இப்பகுதியில் கட்டிட கட்டுமானம் மேற்கொள்ள அதிக விதிமுறைகள் உள்ளன.

இந்நிலையில், தற்போது உலகிலேயே மிகப்பெரிய திருமுகமாக 112 அடி உயர ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி இந்த சிலையை பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார். இந்த சிலை அமைத்ததில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளதாகவும், திறப்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்ளக் கூடாது என்றும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் சி.ஹெச்.பெரோஷ் பாபு கூறியதாவது: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதை அனுமதிக்கக் கூடாது. பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்துள்ளனர். யானைகளின் வழித் தடத்தை மறித்து, கட்டிடங்களைக் கட்டியுள்ளனர். இதுதவிர, தடையில்லா மின்சார இணைப்பு பெற்றுள்ளனர். தற்போது 112 அடி உயர சிலையை அமைப்பதற்காக ஏராளமான மரங்களை வெட்டியுள்ளனர்.

எனவே ஆதியோகி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதை பிரதமர் தவிர்க்க வேண்டும்.

நீதிமன்றத்தில் வழக்கு

இது தொடர்பாக, கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் பி.முத்தம்மாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இக்கரை போழுவம்பட்டி கிராமத்தில் 3 ஏக்கரில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை அமைக்க, விதிகளை மீறி கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. சிலைக்காக 300 சதுர மீட்டர் பரப்புக்கு விளைநிலங்களை மாற்ற ஆட்சியர் அனுமதித்துள்ளார். ஆனால் விதிகளை மீறியும், வனம், சுற்றுச்சூழல், நகர ஊரமைப்புத் துறைகளின் அனுமதி பெறாமலும் கட்டிடங்களை கட்டுகின்றனர். எனவே, கட்டுமானங்களுக்கு தடை விதித்து, சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று, வழக்கு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, இந்த விழாவில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று பல்வேறு சமூக அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

எனினும், எதிர்ப்புகளை மீறி இந்த விழாவில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

ஈஷா விளக்கம்

இதுகுறித்து ‘ஈஷா’ தரப்பில் கேட்டபோது, ‘‘ஈஷா யோகா மையம் எந்தவித சட்ட விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை. சிலை மற்றும் கட்டிடங்களுக்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது. குற்றம் சுமத்துவோர் நீதிமன்றத்தை நாடலாம். மேலும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், இதுகுறித்து பதில் அளிப்பது சரியாக இருக்காது. ஈஷா மீதான புகார்கள் முற்றிலும் தவறு’’ என்றனர்.




நாள் : 24-Feb-17, 7:45 pm

மேலே