எண்ணம்
(Eluthu Ennam)
ஆளைப் பார்த்து எடை போடாதீர்
விவேகானந்தர் காவி உடை, தலைப்பாகை அணிந்திருப்பார். ஒருமுறை ரயிலில் சென்ற போது அவருடன் இரண்டு ஆங்கிலேயர் பயணம் செய்தனர்.
அவருக்கு ஆங்கிலம் தெரியாதென நினைத்து, அவரது துறவுக்கோலத்தை கேலி செய்தனர்.
ஒரு ஸ்டேஷன் வந்தது. அங்கு நின்ற ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்த விவேகானந்தர் “குடிக்க தண்ணீர் எங்கே கிடைக்கும்?” என ஆங்கிலத்தில் கேட்டார்.
அந்த ஆங்கிலேயர்கள் அதிர்ந்து விட்டனர்.
“உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தும், நாங்கள் கேலி செய்த போது, நீங்கள் ஏன் பேசாமல் இருந்தீர்கள்?” என்றனர்.
“நான் முட்டாள்களிடம் பேசுவதில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை” என்றார் சுவாமி. ஆங்கிலேயர்கள் தலை குனிந்தனர். ஆளைப் பார்த்து யாருடைய திறமையையும் குறைத்து எடை போடக்கூடாது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.
வேண்டாம் தம்பட்டம்
“நான் சொல்வது தான் நிஜம். வேண்டுமானால் தலையில் அடித்து சத்தியம் செய்யட்டுமா?” என சிலர் சொல்வதுண்டு. ஆனால் இயேசு “உன் தலை ஒன்றும் சத்தியம் செய்யும் அளவுக்கு அவ்வளவு உயர்ந்ததல்ல” என்கிறார். “உன் சிரசின் பேரிலும் சத்தியம் பண்ண வேண்டாம். அதில் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கருப்பாக்கவும் உன்னால் கூடாதே (இயலாதே)” என்கிறார். நம்மை உயர்ந்தவர்கள் என தம்பட்டம் அடிப்பதைத் தவிர்க்க சொல்கிறார் அவர்.
உபரியானதைக் கொடுங்கள்
ஒருவனுக்கு நியாயமான உதவி தேவைப்படுகிறது என்றால் தர்மசிந்தனை உள்ளவர்கள் உதவ வேண்டும்.
ஒரேயடியாக சேர்த்து வைப்பதால் அதை வைத்திருப்பவர் வேண்டுமானால் திருப்திப்பட்டு கொள்ளலாம். ஆனால் இந்த உலகத்தில் ஏன் ஒருவருக்கு கூட உதவவில்லை என்ற ஆண்டவரின் கேள்விக்கு அவர்களால் பதில் தர முடியாது.
“காகங்களைப் பாருங்கள். அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை; அவைகளுக்கு பண்டகசாலையுமில்லை;
களஞ்சியமும் இல்லை; இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார். பறவைகளை விட நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாய் இருக்கிறீர்கள்” என்கிறார் இயேசு. எனவே எந்தளவு தேவையோ அதை வைத்துக் கொண்டு உபரியைக் கஷ்டப்படுவோருக்கு கொடுத்து உதவ வேண்டும்
எதிரியிடமும் அன்பு
சாலையில் நடந்து செல்கிறீர்கள். எதிரே வேண்டாத ஒருவன் வந்து உங்களை இடித்து விட்டான் என்றால் என்ன செய்வீர்கள்?
“ஏண்டா, கண்ணு தெரியலே! வேணுமினே இடிச்சுட்டு போறே. வம்பு இழுக்கிறியா?” என்று கேட்டு சண்டை போடுவீர்கள். சில சமயங்களில் கைகலப்பு கூட வந்து விடும்.
ஆனால், நபிகள் நாயகம் இதுபோன்ற சமயங்களில் பொறுமையாக இருப்பார்.
ஒருநாள் நாயகம் தெருவில் நடந்து சென்ற போது, எதிரி ஒருவன் வேகமாக வந்தான். நாயகத்தின் மீது மண்ணை வாரிஇறைத்தான். நாயகம் எதுவும் பேசவில்லை. அமைதியாக வந்து விட்டார். இதைக்கண்ட, அவரது மகள் பாத்திமா அம்மையார் மனம் கலங்கி, தந்தையின் உடலைப் பாசத்தோடு கழுவி விட்டார்.
“உங்களை எதிரிகள் என்ன செய்வார்களோ? தெரியவில்லையே,” என அழுதார்.
அப்போது நாயகம், “எதற்காக அழுகிறாய். உன் தந்தையை இறைவன் காப்பாற்றுவான்,” என்றார்.
தனக்கு துன்பம் செய்த எதிரியை நாயகம் திட்டக்கூட செய்யவில்லை. அந்தளவுக்கு பொறுமையாக நடந்து கொண்டார். தன் எதிரிகளை கவனிக்கும் பொறுப்பை இறைவனிடம் விட்டுவிட்டார்.
கடனை திரும்ப கொடுங்கள்
ஒரு வியாபாரியிடம் நபிகள் நாயகம் கடன் வாங்கி இருந்தார். அதைத் திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது.
ஒருநாள் கடைவீதிக்கு தன் தோழர் உமருடன் நாயகம் சென்றார். கடன் கொடுத்த வியாபாரி எதிரே வந்தார். கடனைத் திருப்பித் தராததற்காக வசைமாரி பொழிந்தார்.
உமருக்கு கோபம் வந்து விட்டது. வியாபாரியை அடிக்க போய்விட்டார். நாயகம் அவரைத் தடுத்து நிறுத்தினார். “நண்பரே! நீர் செய்தது கொஞ்சம் கூட சரியில்லை. வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் அவர் என்னை திட்டியது நியாயமே! கடனைக் கொடுக்காத என்னைத் தான் நீர் கண்டித்திருக்க வேண்டுமே தவிர, அவரை அடிக்கச் சென்றது எந்த வகையிலும் நியாயமில்லை,” என்றார்.
உமர் பெருமையுடன் நாயகத்தை பார்த்தார். கடன் கொடுத்த வியாபாரிக்கு கண்ணீரே வந்து விட்டது. நாயகத்தின் பெருந்தன்மையை எண்ணி நெகிழ்ந்தவாறே அவர் சென்றார்.
வாங்கிய கடனை உரிய காலத்தில் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். திருப்பிக் கொடுக்க முடியாவிட்டால், கடன் கொடுத்தவரிடம் சற்று காலஅவகாசம் தர அனுமதி பெற வேண்டும். இதைச் செய்யாவிட்டால் கடன் கொடுத்தவர் திட்டுவதை ஏற்கத்தான் வேண்டும்.