எண்ணம்
(Eluthu Ennam)
முகமது பின் துக்ளக் - திரைப்படம் எனக்கு ரொம்ப நாட்களாகவே முகமது பின் துக்ளக் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இந்த வாரம் தான் அதற்கான நேரமும் வாய்ப்பும் கிட்டியது. சிறுவயதில் அப்பாவுடன் சேர்ந்து தொலைக்காட்சியில் இத்திரைப்படத்தைப் பார்த்ததாக ஞாபகம்; அப்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் இன்று பார்க்கும் பொழுது தான் முழுப்படமும் புரிந்ததாகத் தோன்றுகிறது.
இத்திரைப்படம் பன்முக திறமை கொண்ட நடிகர், பத்திரிக்கை ஆசிரியர், வழக்கறிஞர் திரு. சோ ராமசாமி அவர்களின் எழுத்து, இயக்கத்தில் 1971ம் ஆண்டு வெளிவந்தது. ஏறக்குறைய இன்றுடன் 45 ஆண்டுகளாகியும் இன்றும் ரசிக்கும்படியாக உள்ளது. ஆண்டுதோறும் எத்தனையோ திரைப்படங்கள் வந்து சென்றாலும், அவற்றுள் ஒரு சில படங்கள் மட்டுமே காலத்தால் அழியாமல் மக்கள் மனதில் நிற்கிறது. அத்தகைய திரைப்படங்களுள் சோ அவர்களின் முகமது பின் துக்ளக் திரைப்படம் நிச்சயம் இருக்கும்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிக்கும்படியாக இருப்பதுதான் இப்படத்தின் தொடர் வெற்றியாக நான் உணர்கிறேன். சுல்தானாக வரும் சோ அவர்களின் அரசியல் நையாண்டி, கிண்டல், கேலி படம் முழுவதும் பயணிக்கிறது. படத்தின் மிகப் பெரிய பலம் அதில் வரும் வசனங்கள். முதலில் நகைச்சுவைப் படமாகத் தோன்றினாலும், அதில் கூறப்பட்டிருக்கும் அரசியல், சமூகம் சார்ந்த கருத்துகள் எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தி நிற்பதோடு நம்மை சிந்திக்கவும் வைக்கிறது.
நாட்டின் முக்கியப் பிரச்சனைகளான அரசியல், தேசிய மொழி பற்றிய குழப்பம், தேர்தல், அரசியல்வாதிகளின் தவறான போக்கு, மக்களின் முட்டாள்தனம், வரி விதிப்பு, வேலை வாய்ப்பின்மை (unemployment), லஞ்சம் (bribe) போன்றவற்றை அழகாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.
சோ அவர்களின் நடை, உடை, பாவனை போன்றவை அனைத்தும் பாராட்டத்தக்கது. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் வசனங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நாடித் துடிப்பைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். அதிகாரத் தோரணையில் யார் பேசினாலும் மக்கள் அடங்கிப் போய் அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள் என்பதை நேர்த்தியாகக் காட்டியுள்ளார்.
படத்தில் வரும் முக்கியக் காட்சிகளை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, வாசகர்களுக்கு எளிமையாக்கும் விதத்தில் இங்கு காணொளியாக இணைத்துள்ளேன்.
வரி விதிப்பைப் பற்றியும், அதை ஏன் தடுத்து நிறுத்த முடியாது என்பது பற்றியது:
நாட்டின் முன்னேற்றம், சரித்திரங்கள் சொல்வது, மாணவர்களும் அரசியலும், இந்தி தேசிய மொழியாவது பற்றியது:
(போலி) அரசியல்வாதிகளின் பொதறிவு, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், அவர்களின் போலி சமூக அக்கறை, தகுதியில்லாதவன் தலைவனாகிப் பதவிக்கு வருவது, அடுக்கு மொழிப் பேச்சுக்கள், ஓட்டு கேட்கும் முறை, மக்களின் முட்டாள்தனம்:
சர்வாதிகாரத்திற்கும் குடியாட்சிக்குமுள்ள வேறுபாடு:
மொழிப் பிரச்சனை (தேசிய மொழி பற்றிய குழப்பம்), பாராளுமன்றத்தின் நிலை:
கலவரத்தைத் தடுத்து நிறுத்தவதற்கு எடுக்கப்படும் தற்காலிக முடிவுகள் (நிரந்தரத் தீர்வுகள் என்றும் கிடையாது):
லஞ்ச ஒழிப்பு, மக்களின் அறியாமை, உணவுப் பிரச்சனைக்குத் தீர்வு, வேலையில்லாத் திண்டாட்டம்:
தலைவர்களின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம்:
செக்ஸ் கல்வி, வயோதிகத்திலும் ஆசை:
இப்படி சமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும், அரசியல்வாதிகளின் தவறுகளையும், மக்களின் முட்டாள்தனத்தையும் அழகாகவும், சுவாரசியமாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
படம் வெளிவந்து ஏறக்குறைய 50 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாமல், இன்னும் அதே நிலை தான் தொடர்கிறது. முகமது பின் துக்ளக் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.