அருண் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அருண் |
இடம் | : Dubai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 710 |
புள்ளி | : 7 |
இந்நாவலில் ஆசிரியர் பல்வேறு சுவாரசியமான விடுகதைக் குறிப்புகள், சித்திரப்புதிர், கணித சூத்திரம், சங்க இலக்கிய வெண்பாக்கள் ஆகியவற்றைக் குறிச்சொற்களாக்கி, புதிர்களாக அமைத்து பரபரப்புக் குறையாமல் நகர்த்திச் செல்கிறார்.
லெமூரிய கண்டத்தில் தொடங்கி, பிரமிடு, பிரம்மி எழுத்துகள், கோலங்கள், வடிவக் கணக்கியல், ஸ்பெக்ட்ரோமீட்டர், விண்கற்கள், செயற்கைக்கோள், சீலகந்த் மீன்கள், ஹர்ஷத் எண், கேப்ரிகர் எண், லோனார் ஏரி, படிகங்கள் (crystal), ஆனைக்கொன்றான் பாம்பு (Anaconda), இந்தியக் கடற்படைப் போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல், விமானப் படை, கணிதக் குறியீடுகள், ஆகம விதிகள், மண்டுக மாண்டலம், மியான்மார் பகோடா என்று சாதாரண வாசகனுக்கு முற்றிலும் பழக்கமில்லாத, ஆனால் சுவாரசியமான அறிவியல் களஞ்சியங்களை உள்ளடக்கியப் புதினத்திற்குள் மூச்சிடுவதற்கும் நேரமளிக்காமல் வாசகர்களை இழுத்துச் செல்கிறார். ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும்போதும் ஆசிரியர் இதற்கான ஆராய்ச்சிகளுக்காக அதிகம் மெனக்கெட்டிருப்பதை உணர முடிகிறது.
தமிழ்ப் பெண்களிடும் சாதாரணக் கோலத்தையும் அதனுடன் ஃபிபனாக்கி எண்களை ஒளித்திருப்பது வியப்பாக இருந்தது. வியப்பு குறைவதற்குள் தொடர்ச்சியான புதிர்களை அடுக்கடுக்காக அமைத்து வாசகர்களுக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது.
கணிதவியலில் இந்தியர்களின் பங்காற்றலை கேப்ரிகர் மற்றும் ஹர்ஷத் எண்கள் பற்றிய புதிர்களில் அழகாக இணைத்திருப்பது கவனத்திற்குரியது.
"தன்னிலே பிரிந்துகூடிப் பின் பகுக்க
தன்னை இயல் தோற்றும் தசம் ஆதி
ஆதியின் முதல்வர்க்கம் சூடிய அறைதனிலே
சீரிய கட்டமதில் தடயம் காண்"
ஹர்ஷத் எண், எ.கா. 18 -> 1 + 8 = 9 ; 18/9 = 2
21 -> 2+1 = 3 ; 21/3 = 7
"தலைவால் நேராகி தன்வாலே தலையாகி
தன்னிலே தான் கழிய தானேயாய் நின்றிடுமே
நல்லார வட்டத்துக்குள் நாலே எண்ணாம்"
கேப்ரிகர் எண், எ.கா. 1897
1897 -> 9871 (reverse order) - 1789 = 8082
-> 8820 - 0288 = 8532
-> 8532 - 2358 = 6174
கதை மாந்தர்களை அமைத்த விதமும், அவர்களுக்குள் நடைபெறும் உரையாடல்களும் சுவாரசியத்தை சிறிதுக் குறைப்பதாக உணர்ந்தேன். கதையின் தொடக்கமும், முடிவுப் பகுதியும் வாசிப்பில் சிறிது தொய்வை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் புதிர்கள் மற்றும் அதற்கான விடைகளை எளிமையாக அமைத்த விதம் பாராட்டப்படக்குரியது. முதல் வாசிப்பில் நாவலின் முழுமையை நிச்சயம் அடைய முடியாது, குறைந்தது இரண்டாவது முறை வாசிக்கும்போது முழுமையடையும் என்பது என் கருத்து.
வாசிப்பின் முடிவில் National treasure: Book of Secret & Dan Brown படங்களைப் பார்த்தது போன்ற உணர்வு எழுவதை மறுக்க இயலாது. தமிழ் எழுத்துலகில் இதுபோன்ற அறிவியல் சார் புனை நாவல்கள் உருவாக இந்நாவல் ஒரு அடிக்கல்லாக அமையும்.
ஒவ்வொரு பக்கங்களிலும் நாவலின் சுவை குன்றாமல், அடுக்கடுக்காக புதிர்களை அமைத்து, வாசிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டி, நாவலில் வரும் குறியீட்டுச் சொற்களைப் பற்றிய தேடலை நம்முள் விளைவிக்கிறார். வாசித்த பின் வாசகர்களாகிய நாம் கூகிளின் துணை கொண்டு குறிச்சொற்களைத் தேடிப் பயணிப்பதே இந்நாவலின் வெற்றியாக நான் உணர்கிறேன்.
ஆதவனின் கதிர்கள் அகன்று அந்தி சாயும் வேளையில், அருவி நீருடனான என் காதல் கலவரமின்றித் தொடர்கிறது. காதல் மோகத்தில் இலயித்திருந்த உடலும், மனமும் பயமென்ற போர்வையைக் கலைத்து மெல்லத் தவழ்கிறது.
மனம் உள்ளூர இன்பம் கொண்டிருந்த வேளையில், அதோ அப்பாறையின் பிளவிலிருக்கும் இரு கண்கள் இப்பூவுடலை சல்லடையாய்த் துளைக்கிறது. அந்த முயலின் கூர்மையான பார்வை, பருவக் களிப்பை எதிர்நோக்கி திணவுடன் நிற்கும் ஆடவனின் பார்வையாக உள்ளது. அடிப்பெண்ணே, இதென்ன பொய் வெட்கம், தொடரட்டும் நீருடனான உன் ஆலிங்கனம் !
இந்நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி அவர்கள். இவரை சமீப கால தமிழ்த் திரைப்படங்களில் அதிகம் பார்க்க முடியும். எழுத்துலகில் மட்டுமின்றி நடிப்பிலும் தன்னுடைய திறமையை நன்கு வெளிபடுத்தி வருகிறார்.
நாவலில் கிளைக்கதையாக வரும் வஜ்ராயினி, நாகமுனி, ஹஷார் தினார் அவர்களின் பகுதிகள் ஏனோ மனதில் ஒட்டவில்லை. பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி எனும் ஆயுதத்தை (பூமராங்) நினைவுபடுத்தி இருக்கிறார்.
இந்நாவல் தமிழ் வாசகர்கள் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று.
ரவிதாஸா இன்னும் என்ன யோசனை! அன்று அமாவாசையின் மூன்றாம் நாள், தஞ்சைக் கோட்டையைச் சுற்றி எங்கும் காரிருள் சூழ்ந்திருந்தது. நடுசாமம் ஆனதால் காவலர்களின் ஓசை மெல்ல மெல்லக் குறைந்து, அனைத்து ஜீவராசிகளும் நித்திரா தேவியின் நிழலில் உறங்கிக் கொண்டிருந்தன அந்த நான்கு கண்களைத் தவிர. இன்று நிகழப் போகும் கொடூரத்தைக் காண விரும்பாத நிலவும் வெறுப்பினூடே மறைந்து நின்றது. அப்போது கோட்டைக்கு மிக அருகில் மரங்களடர்ந்தப் பகுதியிலிருந்து ஆந்தையின் ஓசை கேட்டது. மரப்புதர்களில் ஒளிந்து கொண்டிருந்த ரவிதாஸனின் காதில் அதில் இன்பகானமாக ஒலித்தது. அனைத்தும் ஒன்று கூடி வருவதாக எண்ணிக்கொண்டான்.
இந்தச் சுரங்கப் பாதையைக் கண்டறிந்த தன் நுண்ணறிவை நினைத்துச் சிலாகித்துக் கொண்டான். இதுவரை மன்னர் மற்றும் முதன்மந்திரியான அநிருத்தப் பிரம்மராயரைத் தவிர வேறு யாரும் அறிந்திராத இந்நிலவறை ரகசியத்தை அறிந்து கொண்ட அவன் முகத்தில் கர்வம் நிறைந்திருந்தது. விகாரமான அவன் புருவங்கள் மேலெழுந்து, கண்கள் இன்னும் பெரிதாகி பழிதீர்க்கும் படலம் அவன் மனக்கண் முன் தோன்றியது.
அவனது இக்கர்வத்திற்கான காரணமும் இருந்தது, சோழ மன்னனின் பாதுகாப்பு அரணாக விளங்கும் பெரிய பழுவேட்டரையரும் அறிந்திராத அதிசயம்தான் கோட்டைக்குள் செல்லும் இச்சுரங்கப் பாதை.
கையிலிருந்த பந்தத்தில் நெருப்பை மூட்டி தாழ்வார வழியிலிருந்தப் படிக்கட்டுகளில் ஓசைபடாமல் இறங்கினான். படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட விதத்தை எண்ணி வியப்படைந்து, ``என்னதான் சோழர்கள் நமக்கு எதிரிகளாக இருந்தாலும், கட்டிடக்கலையில் அவர்களுக்கிருந்த அறிவைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்’’ என்றெண்ணி சிறிது வாய்விட்டுக் கூறினான்.
பந்தத்திலிருந்து வரும் வெளிச்சம் அங்கு மூலையில் குவிக்கப்பட்டிருந்த பிராணிகள், விலங்குகளின் எலும்புக்கூட்டில் விழுந்ததில் கொடூரனான ரவிதாஸனக்குள்ளும் சிறிது கிளியை ஏற்படுத்தியது. தொடர்ந்து செல்லச் செல்ல வளைவில் நடைபாதை குறுகி, சுவரின் ஓரத்தில் செங்குத்தானப் படிகள் இருப்பதைக் கண்டான். நிலவறைக் கதவுகளுக்கருகில் வந்துவிட்டதை எண்ணி பெருமூச்சுவிட்டான்.
இடது கையில் பந்தத்தைப் பிடித்துக் கொண்டு, சுவரிலிருந்த அந்த வாள் போன்றத் திருகைக் கீழ்ப்புறமாக அழுத்தி வெளிப்புறமாக இழுத்தான். மெல்ல மெல்ல நிலவறையின் கதவுகள் திறக்கும் சப்தம் கேட்டது, பந்தத்திலிருந்த நெருப்பை அணைக்கும் போது கதவிற்க்கருகில் ஒரு உருவம் நின்றிருப்பதைக் கண்டதில் அவன் மூச்சு முழுவதும் நின்றுவிடுவது போலிருந்தது.
வெளியிலிருந்த சோமன் சாம்பவனின் குரல் கேட்ட பின்னர் தான் மூச்சு சீராகி இந்த உலகத்திற்கு வந்தான். உள்ளிருந்த பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல், ``நீ இங்கு வந்து எவ்வளவு நேரமாகிறது?’’ என்று வினவினான்.
``நான் இங்கு வந்து வெகு நேரமாகிறது, நீ வர ஏன் இவ்வளவு கால தாமதமானது’’ என்று சோமன் சாம்பவன் கோபத்தில் கேட்டான்.
``நீ நினைப்பது போல் இங்கு வருவதென்பது எளிய காரியமா? நம் திட்டப்படி ஆந்தையின் குரல் கேட்ட பின்னர் தான் நான் வருவேனென்பது உனக்குத் தெரியாதா? இதுபோன்ற இராஜ்ஜிய சதிகாரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். சரி நம் சம்பாசனையை இன்னொரு நாளில் வைத்துக் கொள்ளலாம், இப்போது அந்தப் புலியிருக்கும் குகைக்குச் செல்லும் வழியைக் காட்டு’’ என்று கூறி அவனைத் தொடர்ந்தான்.
``ரவிதாஸா இதுதான் அருள்மொழிவர்மரின் சயன அறை. தாதிப் பெண்ணின் உதவியுடன் இரவு உணவில் தேவையான அளவு மயக்க மருந்தைக் கலந்து இருக்கிறேன். அவர் கண் விழிக்கக் குறைந்தது இன்னும் இரண்டு நாழிகைகளாகும்'' என்றான்.
``நல்லது, இவனிருக்கும் நிலையைப் பார்க்கும்போது, நீயளித்த மயக்கத்துளிகள் நன்று வேலை செய்திருப்பதாகத் தோன்றுகிறது`` என்ற ரவிதாஸனின் விழிகளில் ஏளனப் பார்வை இருந்தது.
ரவிதாஸன் உறையிலிருந்த விஷக்கத்தியை தடவிப் பார்த்து நிம்மதியடைந்தான். நம்முடைய கடும்உழைப்பு வீண்போகவில்லை; நாம் அளித்த நரபலிகளை அந்த மகாகாளி ஏற்றுக்கொண்டுவிட்டாள், இல்லாவிட்டால் தஞ்சையின் பொக்கிஷத்தை அழிக்கும் வாய்ப்பு இவ்வளவு எளிதில் கிட்டுமா? எல்லாம் காளியின் செயல். சோழ சாம்ராஜ்ஜியம் பாண்டிய நாட்டிற்கு இழைத்த அநீதிகளுக்கெதிராக பழிதீர்க்கும் நாள் வந்துவிட்டது. இன்று சோழ நாடு இருக்கும் நிலையில், அரச குடும்பத்தில் இரண்டாவது கொலை நிகழ்ந்தால் நாட்டில் புரட்சியும், குழப்பமும் இன்னும் அதிகமாகும். சிதறிக்கிடக்கும் நமது ஆபத்துதவிகளை ஒன்று திரட்டி, கோட்டைக்குள் வரவழைத்து அரச குடும்பத்தவர்களை ஒவ்வொருவராக பழி தீர்த்துக் கொள்ள இதுவே நல்ல சந்தர்ப்பம்.
அவன் கண் முன்னே வீரபாண்டியரின் கழுத்தும் முண்டமும் தனித்தனியே எழுந்து நின்றது; வீரபாண்டியனின் உதட்டிலிருந்து ஓசை வரவில்லை மாறாக குருதி படர்ந்த அக்கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிவது போல் தோன்றிற்று.
இன்றுடன் நாம்பட்ட துயரமெல்லாம் முடிந்து விடும், சோழ நாடு அழியும் நேரம் வந்துவிட்டது. தஞ்சைக் கோட்டையில் மீன்கொடி ஏறும் நாள் வெகுதொலைவில் இல்லை. சோழ நாடே `பொன்னியின் செல்வன்` என்று போற்றும் அருள்மொழிவர்மன் என் கண் முன்னே கிடக்கிறான். புலியின் குகைக்குள்ளேப் புகுந்து புலியை அழிப்பதுதான் வீரம். இந்நாள் பாண்டிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய நாள் என்று மனதில் எண்ணிக் கொண்டு அருள்மொழிவர்மன் முன் நின்றான்.
தூரத்திலிருந்த தீபத்தின் ஒளி உறங்கிக் கொண்டிருக்கும் அருள்மொழிவர்மனின் திவ்விய முகத்தில் விழுந்தது. எதிரியின் முகத்தைப் பார்த்தான், அவன் கண்கள் கூசுவது போன்று இருந்தது. மீண்டும் உற்று நோக்கும்போது சாந்தமான குழந்தையின் முகத்தைப் பார்ப்பதுபோல தோன்றியது; நெஞ்சத்துனுள் இருந்த குரூரமும், வஞ்சமும் வெளிவராமல் அந்த வசீகர முகத்தில் ஒளிரும் பெரும் தீட்சை உணர்ந்தான். ரவிதாஸன் மெல்ல மெல்ல தன் சுயநினைவை இழப்பதுபோன்று பிரமையடைந்தான்.
அருகிலிருந்த சோமன் சாம்பவன் உரக்கக் குரலில், ``ரவிதாஸா இன்னும் என்ன யோசனை? உறையிலிருக்கும் விஷக்கத்தியை அவன் மார்பில் பாய்ச்சிக் கொன்றுவிடு! யோசிக்க நேரமில்லை, அரண்மனை வேலையாட்கள் விழிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. வந்த வேலையை சீக்கிரம் முடி, அவர்கள் கண்ணில் நாம்பட்டால் நிச்சயம் திரும்பிப் போக முடியாது, அத்துடன் நம் ஆயுள் முடிந்துவிடும்'' என்று பயத்துடன் கூறினான்.
சிலை போல நின்றுகொண்டிருந்த ரவிதாஸனின் காதுகளுக்கு அவன் சொன்ன எதுவும் எட்டவில்லை, திக்பிரமை பிடித்தது போல கல்லாக நின்றான்.
சோமன் சாம்பவனுக்குக் கோபம் தலைக்கேறியது, ``ரவிதாஸா நீ உயிருடன் தான் இருக்கிறாயா அல்லது உனக்கு சித்த பிரமைப் பிடித்துவிட்டதா?'' என்று உரக்கக் கத்தினான்.
சற்றே உரக்கக் கத்தியதில் ரவிதாஸன் தன் சியநினைவை அடைந்தான். தொலைவில் காவலாளிகள் நடந்துவரும் சத்தம் கேட்டது.
மீண்டும் சோமன் சாம்பவன், ``ரவிதாஸா உனக்கு ஞாபகம் இருக்கிறதா, அன்று நள்ளிரவில் கொடும்பாளூர் கோட்டையில் ஆதித்தகரிகாலனைப் பழிதீர்த்தது. அதன்பின் சுந்தர சோழனின் உடல்நிலை இன்னும் மோசமானது. இன்று நிகழப்போகும் இந்தக் கொடூரக் கொலையைக் கேள்விப்பட்டாலே அக்கிழவனின் உயிர் போய்விடுமென்று எனக்குத் தோன்றுகிறது. இன்னும் ஏன் தாமதம்? இன்று பாண்டிய நாட்டிற்கு நீ செய்யும் இப்பேருதவி, காலம் அழியும்வரை நிச்சயம் இருக்கும்''.
''அந்தப் பெண்புலியான குந்தவையின் கொட்டத்தை அடக்க வேண்டாமா? அளித்த மயக்கத்துளிகள் செயலிழக்கும் முன் நெஞ்சிலிருக்கும் குரோதத்தைக் கொட்டி அவனைக் கொன்றுவிடு. நம்மையே நம்பியிருக்கும் நந்தினிதேவிக்கும் வருங்கால இளவரசருக்கும் இதுவே நாம் செய்யும் நன்றிக்கடன். நம் அரசர் வீரபாண்டியரின் கழுத்தைக் கொய்து, தஞ்சைக் கோட்டையின் மதிலில் ஏற்றிய சோழர்களைப் பழிவாங்க வேண்டாமா? இன்னமும் தாமதிக்காதே, காவலர்கள் வரும் முன் விரைந்து செய்!'' என்று இரைந்தான்.
ரவிதாஸனுக்குள்ளிருந்த வெறி மிகுதியடைந்து, அவன் கண்கள் தீப்பிழம்பாகின. பாண்டிய நாட்டு மக்களின் குரல்கள் ஒன்றாகச் சேர்ந்து பேரிரைச்சலாக அவன் காதுகளுக்குக் கேட்டது. உறையிலிருந்த விஷக்கத்தியை கைகளில் ஏந்தி அருள்மொழிவர்மனின் மார்பை நோக்கி இறக்கினான்.
``என்னங்க, எத்தனை தடவ கத்தறது? தனவ் ஸ்கூலுக்குப் போகணும் டைம் ஆகுது. இன்னைக்கு பேரண்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங் இருக்கு, சீக்கிரமா வந்து இந்தக் காபியைக் குடிச்சிட்டு, குளிச்சிட்டு வாங்க. நான் அவனை ரெடி பண்றேன்''.
``ச்சே லீவு நாள் அதுமா உன் தொல்லை தாங்க முடியல! கரெக்டா அருள்மொழிவர்மனை கத்தியால குத்தவரும் போது டிஸ்டர்ப் பண்ணிட்ட. கனவுல என்ன நடந்துச்சுன்னு தெரியலையே?''.
''நான் இருக்கும் போது வேற யாரு உங்கள கத்தில குத்தவர்றாங்க! நீங்க தான் அருள்மொழிவர்மன்னு புனைப்பேர் வைச்சிட்டு இருந்தீங்க. இந்த வெட்டிப் பேச்ச கொஞ்சம் நிறுத்திட்டு, காபி ஆர்ரதுக்குள்ள பிரஷ் பண்ணிட்டு வாங்க, நான் இட்லி எடுத்து வைக்கறேன். தனவ் நீயும் உங்கப்பா மாதிரி கனவு காண்கறத நிறுத்திட்டு, டேபிள் மேல இருக்கற மில்க் எடுத்துக் குடி''.
ஹூம் கண்டிப்பா ராஜராஜ சோழன் தப்பிச்சிருப்பாரு.
லீவு நாள் வந்தாலே காலைல கனவுதான்!!!!
நா. முத்துகுமார் – மறைந்தும் ஒளிவீசும் சூரியன்
நாள் 14.8.2016 - தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமல்ல, தமிழ் இலக்கிய உலகிற்கும் ஒரு துக்கமான நாள். ஆனந்த யாழை மீட்டியவனும், எல்லாமே அழகுதான் என்று சிலாகித்துக் கொண்ட தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் நா. முத்துகுமார் இன்று நம்முடன் இல்லை. அவரது ரசிகர்கள் பலரும் இணையத்திலும் வலைப்பூக்களிலும் அவருக்காக இரங்கல் பாவை படித்துவிட்டனர். ஒரு நல்ல படைப்பாற்றல் மிக்க கவிஞனை நாம் இன்று இழந்து விட்டோம்.
இனி அவர் விட்டுச் சென்ற பாடல்களும், கவிதைகளும், அவர் பெற்றப் புகழும் மட்டுமே நிலைத்திருக்கப் போகிறது. 41 வயதில் இறப்பென்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று!
கவிஞர் கண்ணதாசன் இறந்த போது கவிஞர் வாலி அவருக்காக எழுதிய இரங்கல் பா பின்வருமாறு:
``உன் மரணத்தால்
ஒர் உண்மை புலனாகிறது
எழுதப் படிக்கத் தெரியாத
எத்தனையோ பேர்களில் –.
எமனும் ஒருவன்;
அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்’’.
அதே எமன் மீண்டுமொருமுறை நிருபித்துவிட்டான், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் அவனுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்கவில்லை என்று!!
வருங்காலத்தில் நிறையத் தமிழ்க் கவிஞர்கள் தோன்றுவார்கள் ஆனால் ஆனந்த யாழை மீட்டிய நா.முத்துகுமார் போல் வருவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. 1500க்கும் மேற்பட்ட பாடல்கள், 2 தேசிய விருதுகள், மாநில விருது, கலைமாமணி விருது, பிலிம்பேர் விருது என்று அவர் பெற்ற விருதுகளை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். திரைப்படப் பாடல்களை தமிழ்ப்புலமையுடன் புனைந்த ஒரு சிலரில் நா. முத்துகுமார் நிச்சயம் இடம் பெறுவார்.
அவர் திரைப்படத்துறையில் மட்டுமல்லாது தமிழ் இலக்கியத் துறையிலும் சாதித்தவர். கவிதை எழுதுவதில் அவருக்கிருந்த ஆளுமை, சாந்தமான முகம், அனைவருடனும் பழகும் சகோதரத்துவ பழக்கம் என்று நம் அனைவரையும் வசப்படுத்தியிருந்தார். வாழ்வில் தன்னுடைய உயர்விற்கும் முன்னேற்றத்திற்கும் அவர் அப்பாதான் காரணம் என்று பலமுறைக் கூறியுள்ளார்.
இன்று திரைப்படத் துறையில் பலரும் பாடலாசிரியர்களாக உள்ளனர், ஆனால் அவர்களுள் கவிஞர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம், விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அவரது எழுத்தில் வெளிவந்த பல பாடல்கள் எனக்கு பிடிக்கும், அதில் குறிப்பிட்ட ஒரு சில பாடலின் வரிகளை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
தங்கமீன்கள் படத்திலிருந்து:
``ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்! அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மழையின் அழகோ தாங்கவில்லை!
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி!
அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு? உனது புன்னகை போதுமடி
உன் முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி மேகத்தில் மறைந்தே பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம் கேட்க்குதடி அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லபடி! ‘’
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலிருந்து:
‘’ தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே!
தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகலல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னை கண்டேன்!
கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் உன்முகம்
காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன்முகம்
அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு அன்று சென்ற ஊர்வலம்
தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்
வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை…’’
ஜூலிகணபதி படத்தில் வரும்:
‘’எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?
மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்!!
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்!!
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்.
நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்!‘’
அவரின் மறைவை எண்ணி இரங்கல் கடிதம் வாசித்தாகிவிட்டது, இனி செய்ய வேண்டியது என்னவென்பதைப் பற்றிப் பார்ப்போம்.
சமீபத்திய பேட்டியொன்றில் திரைப்பட பாடலாசிரியர்களின் பொறுப்புணர்வைப் பற்றி அவர் கூறியது:
தமிழ் கவிஞராக விரும்புபவர்கள் ஏன் தொல்காப்பியம், நன்னூல், போன்றவற்றைப் படிக்க வேண்டும் என்பதைப் பற்றி அவர் கூறியது:-
அவரைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா கூறியது, ''நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கிவிடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்'' என்கிற வரிகளே அவரின் சாதனைக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசாக கருதுகிறேன்.
நமக்குக் கிடைத்த இன்னொரு சூரியனும் மறைந்துவிட்டது என்ற வருத்தமே நெஞ்சில் நிற்கிறது.
இங்கு காணொளிகளை இணைப்பதில் சிரமமாக உள்ளது. வாசகர்கள் கீழ்க்குறிப்பிடப்பட்ட எனது வலைப்பூவை வாசிக்க வேண்டுகிறேன்.
entamilpayanam.blogspot.com/2016/08/blog-post_88.html
``இன்னும் எவ்வளவு நேரந்தான் குடிச்சிட்டு இருப்ப, போதும் வீட்டுக்குப் போ''.
``இல்ல முருகா மனசு சரியில்ல; என்னைத் தொந்தரவு செய்யாதே. நீ கிளம்பு நான் பொறுமையா வர்றேன்''.
``நீ சொன்னாக் கேக்க மாட்ட, இனி உன் இஷ்டம்''.
இன்றும் தனபாலின் உள்ளம் சூறாவளியால் சீரழிந்த தோப்பைப் போன்று சிதறிக் கிடந்தது. தற்கொலைப் பற்றிய எண்ணமும் மெல்ல மெல்லத் தோன்றலாயிற்று. குடி என்பது எப்பேர்பட்ட நல்ல மனிதனையும் அழிக்கும் என்பதற்கு இதோ இந்த தனபாலுதான் சரியான உதாரணம்.
இன்று குடிகாரன் என்று ஏசும் இதே ஊர்தான், இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் `ஆம்பளைனா நம்ம தனபாலு மாதிரி இருக்கணும். எப்படி நல்லா வேலை செய்யறான்,
ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் எப்படி இருக்கிறது?
தமிழில் தொகைச் சொற்களைப் பற்றிய பதிவு பின்வருமாறு;
தொகைச் சொல் என்பது என்ன?
தொகுத்தல் அல்லது விரித்தெழுதுதல். அதாவது பல கூறுகளை உள்ளடக்கிய ஒரு சொல் தொகைச்சொல் என்பதாகும்.
ஒரு/ஒரே சொல்லின் கீழ் அடங்கும் வரையறுக்கப் பட்ட சில சொற்கள் தொகைச் சொற்கள் எனப்படும்.
தொகைச் சொற்களை எடுத்துக்காட்டுகளோடு இங்கு காண்போம்.
ஒன்று ஒருவன் - கடவுள்
இருமை (இரண்டு) இருவினை - நல்வினை, தீவினை / தன்வினை, பிறர்வினை இருதிணை - உயர்திணை, அஃறிணை / அகத்திணை, புறத்திணை இருசுடர் - சூரியன், சந்திரன் இருவகை அறம் - இல்லறம், துறவறம் இருபலன் - நன்மை, தீமை
மும்மை (மூன்று) முக்கனி - மா, பலா, வாழை மூவேந்தர் - சேரன், சோழன், பாண்டியன் முக்காலம் - நேற்று, இன்று, நாளை முத்தொழில் - ஆக்கள், அழித்தல்,காத்தல்
நான்கு நால்வர் ,சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் நாற்குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு (பெண்) / அறிவு,நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி (ஆண்) நாற்பயன் - அறம், பொருள், இன்பம், வீடு
ஐந்து ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை (பாலை - குறிஞ்சியும் முல்லையும் திரிந்து வெம்மையான நிலம்) ஐந்திலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஐம்பூதம் - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (வான்) ஐம்பெரும்காப்பியம் - சிலப்பதிகாரம், மனிகீகளை,சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஐம்புலன் - சுவை, ஒளி, ஊறு (தொட்டு), ஓசை, நாற்றம் ஐம்பொன் - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் ஐம்பெரும் பாதகம் - கொலை, களவு (கொள்ளை), கள், பொய், குருநிந்தை பஞ்சாங்கம் – திதி, வாரம், நாள், யோகம், கரணம்
ஆறு ஆறு(அரு)சுவை - இனிப்பு,கசப்பு (கைப்பு), உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு (காரம்)
ஏழு ஏழு பருவம் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் எழுபிறப்பு - தேவர், மனிதர் , விலங்கு, பறவை, ஊர்வன, பறப்பன, தாவரம்
எட்டு எட்டுத்திக்கு - கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஒன்பது நவதானியம் - நெல், கோதுமை, உளுந்து, கொள்ளு, எள், பயறு, கடலை, துவரை, அவரை நவரசம் - நகை, அழுகை, இளிவரல் (இழிவு) , மருட்கை (வியப்பு/குழப்பம்), அச்சம், வெகுளி (கபடமற்ற), பெருமிதம் (யோகம்), உவகை (மகிழ்ச்சி), அமைதி (சாந்தம்) நவரத்தினம் / நவமணி – வைரம், வைடூரியம், முத்து, மாணிக்கம், பவளம், கோமேதகம், இந்திரநீலம், மரகதம், புட்பராகம்
பத்து தசாவதாரம் – மீன், ஆமை, வராகம், நரசிங்கம், வாமனம், பரசிராமன், இராமன், பலதேவன், கண்ணன், கல்கி பத்தழகு - சுருங்கச் சொல்லல், விளங்கச் சொல்லல், நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல், ஓசையுடைமை, ஆழமுடைமை, உலகமலையாமை, முறையின் வைத்தல், விழுமியது பயத்தல், விளங்கு உதாரணந்து ஆகுதல்
குறிப்பு: வாசகர்களின் கவனத்திற்கு, வரலாறு என்று நான் இங்கு குறிப்பிடும் கருத்துக்கள் சாதி, மதம் சார்ந்தவைகளைப் பற்றியதல்ல. தமிழ் என்ற ஒரு மொழியைப் பின்பற்றும் ஒரு இனம் அதாவது தமிழன்(ர்) என்ற மரபு மற்றும் அவ்வினத்தாரின் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் ஆராயப்பட்ட கருத்துக்களாகும்.
வாசகர்கள் இப்பதிவின் நீளத்தைப் பார்த்து ஒதுக்குவார்களோ என்ற ஐயப்பாடு என்னுள் எழுகிறது. இருப்பினும் சொல்ல வந்த கருத்துகளைச் சொல்லியே தீரவெண்டும் என்ற உறுதியுடன் இங்கு பதிவிடுகிறேன்.
இன்றைய காலகட்டத்தில் நாமனைவரும் அறிவியலின் அசுர வளர்ச்சியில் இணைந்து பயணிக்கவே விரும்புகிறோம். ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் நடந்த வண்ணமுள்ளன. செங்கல்கட்டி போலிருந்த கைப்பேசி இன்று ஸ்மார்ட்ஃபோன் (சரியான தமிழ் பெயர் தெரியவில்லை) என்று வளர்ச்சியடைந்து பயனுள்ள பல நுட்பங்களுடன் உள்ளது. (மறுமுனையில் தொழில்நுட்பங்களால் நமது வாழ்வும் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது என்பது வேறு)
மாட்டுவண்டியில் சென்ற காலம் மறைந்து, பேருந்தில் சென்ற காலம் போய் இன்று புல்லட் ரயிலில் பயணிக்கும் காலத்தில் இருக்கின்றோம். குருகுலக் கல்வி, அரச மரத்தடியில் கல்வி, எழுத்துப் பலகை, பள்ளிக்கூடக் கல்வி என்ற நிலையிலிருந்து, இன்று இணையக் கல்வி என்று வளர்ந்துள்ளோம்.
மருத்துவத்துறையில் கண், காது, வாய், இருதயம், சிறுநீரகம், சர்க்கரை, புற்றுநோய் என்று பல்வேறு நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளோம். மரபணு சார்ந்த பல்வேறு வகையான ஆராய்ச்சிகளும் நடந்தவண்ணம் உள்ளன.
இந்த அவசர உலகத்தில் படித்துத் தெரிந்து கொள்ள பல பயனுள்ள விஷயங்கள் இருக்கும்பொழுது கடந்த காலத்தைக் கூறும் வரலாறு நமக்குத் தேவையா? பள்ளிக் குழந்தைகளிடத்திலும், மாணவர்களிடத்திலும் கணிதத்தையும், அறிவியலையும் கற்றுக்கொள்ளச் சொல்லாமல், வரலாற்றை ஒரு பாடமாகத் திணிப்பதில் நியாயமென்ன? இன்று பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் அதிகப் பாடசுமை உள்ளது, இதில் தேவையில்லாத இந்த வரலாற்றுப் பாடம் அவசியம்தானா? அப்படியே பள்ளித் தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் முதலிடம் பெற்றாலும் கிடைப்பதென்ன? இன்ஜிரியிங் கவுன்சிலிற்கும் மருத்துவ படிப்பிற்கும் போக முடியுமா, இல்லை விண்வெளி ஆராய்ச்சியாளனாகத்தான் ஆகமுடியுமா? இப்படி இருந்தால் வரலாற்றின் மீது நமக்கு வெறுப்புதான் வளரும்.
சரி ஓகே, நீங்கள் சொல்வதுபோல் வரலாற்றைத் தெரிந்துகொண்டால் விளையும் நன்மைதான் என்ன?
சோழர்கள் மரம் நட்டார்கள், சாலை அமைத்தார்கள், கோயில்களைக் கட்டினார்கள், குளம் வெட்டினார்கள், கப்பலோடிய தமிழன் வ.ஊ.சி/பாரதி/காந்திஜி சிறை சென்றார் என்று வரலாற்று வகுப்பில் எத்தனை முறைதான் இதைப் படிப்பது? சேர, சோழ, பாண்டியர்களுக்கிடையே எவ்விடத்தில்போர் நடந்தது? அப்போரில் யார் வெற்றி பெற்றார்? ராஜராஜ சோழன் யார்? அவன் அப்பா பெயர் என்ன? எத்தனை ஆண்டுகள் அவன் ஆட்சி செய்தான்? அவர்களின் முன்னோர்களின் வரலாறு என்ன?
தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவன் யார்? மாமல்லபுரம் சிற்பங்கள் எந்த அரசன் காலத்தில் உருவாக்கப்பட்டது? அன்றைய அரசர்களுக்கு எத்தனை மனைவியும் மக்களும் இருந்தனர் என்பதைப் பற்றிப் படிப்பதால், இன்று நமக்கு என்ன பயன்? போர் நடந்த வருடங்களை மனமம் செய்து தேர்வெழுதுவதில் என்ன பயன்? இதுபோன்ற செய்திகளும் கருத்துக்களும்தானே இன்று வரலாற்றுப் பாட புத்தகத்தில் உள்ளது.
இப்படி கற்கும் வரலாறு நமக்கு சோறு போடுமா? இல்லை நம் மொபைல் பில்லைதான் கட்ட உதவுமா? அலுவலகத்தில் வருமானம் பெருக்கி பதிவுயர்வு கிடைக்க வழி செய்யுமா?
இப்படி நாளை என்ன நடக்கும் என்பதை ஆராயாமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஷயங்களைப் பற்றி எண்ணுவதிலும் ஆராய்வதிலும் என்ன பயன்? வரலாற்றைத் தெரிந்து கொள்வதினால் நம் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுமா? அல்லது நம் தினசரி வாழ்வுக்குத் தான் வரலாறு உதவுமா?
மேற்குறிப்பிட்ட வினாக்களை ஆராயும்பொழுது, நம்மில் பெரும்பாலோனருக்கு வரலாறு அவசியமில்லை என்றே தோன்றும். ஆனால் என் பார்வையில் வரலாறு படிப்பது அவசியம் என்று தோன்றுகிறது.
என் ஆசான் பாரதி பாடியதுபோல், `பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நாம் எதிர்காலத்தில் பின்தங்கி நிற்போம் என்பது உறுதி (பழையன என்று இங்கு பாரதி குறிப்பிட்டது பழமையான மூடபழக்கவழக்கங்களை என்பதை நன்கறிவேன்). இப்படி நாளும் ஓடிக்கொண்டிருக்கும் நாம், நமது அடையாளங்களையும், பல உண்மைகளையும் தொலைத்துவிட்டோம் என்பதே என் குற்றச்சாட்டு.
வரலாறு முக்கியம் அமைச்சரே’ என்று வடிவேலு சினிமாவில் நகைச்சுவையாகச் சொல்வதுபோல், இன்று நம்மிடமிருப்பது பெரும்பாலும் மறைக்கப்பட்ட உண்மைகளின் பிம்பமே! வரலாறு என்பது பெரும்பாலும் வெற்றி பெற்றவர்களால் எழுதப்பட்டவையாகும். அதனால் இன்று நம்மிடம் வரலாறாக உள்ளவற்றை முற்றிலும் உண்மை என்று சொல்லிவிட முடியாது.
பொதுவான நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, மறைக்க வேண்டிய உண்மைகளை நீக்கி காலச் சுழற்சிக்குத் தகுந்தாற்போல் இயற்றப்பட்ட பல்வேறு தொகுப்புகளின் வெளியீடுகளே இன்று வரலாறாக உள்ளது. அதே நேரத்தில் நம்மிடம் இன்றிருக்கும் வரலாற்றுத் தகவல்களனைத்தும் புனைக்கப்பட்டது அல்லது திரிக்கப்பட்டது என்றும் கூறிவிட முடியாது.
இன்று பள்ளிகளில் வரலாற்றுப் பாடம் ஏன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் அலசுவோம். வரலாறு என்பது ஒரு பொதுவான ஒரு பாடம், ஒரு மனிதனின் வாழ்வு என்பது அவனைச் சுற்றியுள்ள சுற்றம் அதாவது சமூகத்தை உள்ளடக்கியது. அந்தச் சமூகத்தின் இன்றைய வளர்ச்சி, நேற்றைய வரலாற்று முடிவின் தொடர்ச்சியாகும். பண்பட்ட அல்லது பக்குவப்பட்ட வாழ்க்கை முறைக்கு, நாம் நம் சுற்றத்தைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. எனவே ஆரம்ப காலத்திலிருந்தே பள்ளிசெல்லும் குழந்தைகளிடத்தில் வரலாற்றுப் பாடம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு சிறுவயதில் தன்னைச் சுற்றியுள்ளச் சமூகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் குழந்தைகள், பின்னாளில் தனக்கு வேண்டிய துறையை அவர்களாகவே தேர்வு செய்ய உதவுகிறது. அறிவியல் அல்லாத வரலாற்றையும், வரலாறில்லாத அறிவியலும் சாத்தியமில்லை. வரலாறு என்ற தாய் இருந்தால்தான் வளர்ச்சி என்ற ஒரு குழந்தைப் பிறக்கும். முன்னர் என்ன நிகழ்ந்தது என்று தெரிந்தால்தான், இனி என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிரசவிக்கும்.
உதாரணத்திற்கு, வட்டமான கற்பாறைகள் உருண்டோடியதாலேயே சக்கரம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கற்களை உரசியாதால்தான் நெருப்பு உருவானது, இது தெரிந்திருக்காவிட்டால் உலகம் தோன்றிய நாட்களிலிருந்தே கேஸ் இருந்ததாக நம்பப்படும். இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகளே அடுத்த சந்ததியினரை சிந்திக்கத் தூண்டும் பொரியை ஏற்படுத்தும்.
எதுவும் அதுவாக நிகழவில்லை, கால மாற்றத்தாலும் வரலாற்று நிகழ்வுகளாலுமே ஏற்பட்டது என்பதை மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். அதுபோல நம் தமிழின வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்குக் கட்டாயமாகச் சொல்லித்தர வேண்டும். அது நமது கடமையாகும்.
அலுவலகத்தில் ‘ஆர்கனைஷேசன் ச்சார்ட்’ ஐயும், கம்பெனியின் MD, CEO, COO, GM, HOD, HEAD OFFICE & BRANCHES என்று அனைத்தையும் தெரிந்து வைத்துத்திருக்கும் நாம், நம் முந்தைய சந்ததியினரைப் பற்றி தெரிந்து வைத்திருப்போமா?
எதுக்கு நான் பாரதியையும், ஔவையாரையும், தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும்? நாளை இந்த பாரதியா என் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் கோட் எழுதித் தருவார்? எனக்கு இஷ்டமில்லை, தொந்தரவு செய்யாதீர்கள் என்று ஒதுங்குபவர்கள் தான் நாம்!
ஏழாம் அறிவு படத்தில் குறிப்பிடுவதுபோல், தொலைந்த குழந்தைக்கு தான் யார், தனது பெற்றோர் யார், வீடு எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்வது எவ்வளவு அவசியமோ. அதேபோல் தான் நாம் நம் வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. வரலாற்றை நாம் மறந்ததினால்தான் அறிவியலையும் மறந்துவிட்டோம். வெளியிலிருந்து வந்து இந்நாட்டை ஆண்ட பலர் நம் பொன் மற்றும் பொருளை மட்டும் எடுத்துச் செல்லவில்லை, நம்முடைய பொக்கிஷங்களாக இருந்த பல அரிய கலைகளையும், மருத்துவ நுட்பங்களையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். அத்தோடு நிற்காமல் பயனுள்ள பல தகவல்களையும் அழித்துவிட்டு சென்றனர்.
அறிவியலை மறந்ததால் இன்று வெளிநாட்டவரிடம் கையேந்தும் நிலையிலிருக்கிறோம். நம்முடைய வீரமும், பெருமையும் நமக்குத் தெரியக்கூடாது என்றெண்ணி நம்மை ஆண்ட ஒவ்வொருவரும் திட்டமிட்டு அழித்துவிட்டனர். தமிழர்களின் வரலாறு மற்றும் கண்டுபிடிப்புக்களை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான ஆபூர்வ புத்தகங்களும் ஓலைச் சுவடிகளும் இருந்த யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. மாமேதைகள், யோகிகள் வாழ்ந்த இம்மண்ணின் சிறப்பை நாம் உணரத் தவறிவிட்டோம்.
பிறநாட்டான் நம் சிறப்பை அழித்தது ஒருபுறமிருக்க, இங்கு நாமே நமக்கிடையில் மதமாற்றம், மொழிமாற்றம், இனமாற்றம் என்று பிரித்துக் கொண்டு ஒன்றுபட்ட தமிழினத்தையே அழித்துக் கொண்டிருக்கிறோம். தமிழர் மரபு மற்றும் வரலாறு என்பது இன்று சாதி, மத (இந்து, கிறித்துவர், இஸ்லாமியர்) அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டுள்ளது.
சாதி/மத வழியில் பல பயனுள்ள தகவல்களும் கண்டுபிடிப்புகளும் வேதம் என்று கூறப்பட்டு ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கே உரியது என்று பிரித்துவிட்டனர். அத்தகவல்கள் வெளிநபர்களுக்குக் கற்பிக்கப்படவில்லை.
உதாரணத்திற்கு எழுத்தாளர் பாலகுமாரன் உடையார் நாவலில் குறிப்பிட்டதுபோல், பெரிய கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கொல்லர் இனத்தைச் சார்ந்தவரை பாம்பு கடிப்பதும், அதற்கு மருத்துவம் பார்க்க அச்சாதியினர் பிராமணர்களை எதிர்பார்த்து நின்றனர். பிராமணரும் தன் இனம் வளரச் செய்வதற்காகவும், தன் இனத்தவர்கள் பெரியவர் என்பதை நிலைநடத்துவதற்காக விஷமுறிவு பற்றிய தகவல்களை வேற்று சாதியினருக்குச் சொல்லித்தருவதில்லை. இதனால் ஒரு குறிப்பிட்ட சாதியினரை/மதத்தினரை எதிர்பார்த்து நின்ற நிலை உருவானது. இவ்வாறு இரகசியமாகக் கற்றுத்தரப்பட்ட பல அறிய தகவல்கள், காலச்சுழற்சியால் அடுத்த தலைமுறையினருக்குச் சென்றடையாமல் அழிந்துவிட்டது.
பின் ஆரிய திராவிடம் என்ற வேற்றுமை நம்மை பிரித்து நின்றது.
தமிழ்மொழி ஒரு தனிமொழி, அது சமஸ்கிருதத்திலிருந்து பிரிந்ததல்ல. ஆந்திரா அல்லது கேரளாவில் அங்குள்ளவரிடம் உங்கள் தாய்மொழி தமிழ் மொழியின் ஒரு பிரிவுலிருந்து தோன்றியதாகக் கூறினால், மறுகணம் நம் கண்ணத்தில் பளார் என்று அறை விழும். எங்கள் மொழி ஆரியத்திலிருந்து அல்லது சமஸ்கிருதத்திலிருந்து வந்ததாகக் கூறுவர். அதுவே கொஞ்சம் கோபக்காரனாயிருந்தால் தமிழ் மொழி மலையாளத்திலிருந்து வந்தது என்பார். அப்படியே அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டால் நமக்கு குடியா முழுகிவிடும். தமிழ் என்பது எங்கிருந்து வந்தால்தான் என்ன? என் மூதாதையர்கள் போர்ச்சுக்கீசிரியர்களாக இருந்தால் எனக்கு என்ன பிரச்சனை?
இப்படியே எல்லா நிலைகளிலும் பிறர் சொல்வதை ஆராயாமல் ஏற்பதால் நாம் அவர்களுக்கு அடிமையாகும் நிலை உருவாகும். வடநாட்டான் உயர்ந்தவன், ஆரியமொழிதான் வேதமொழி அதுவே பெரியது. தமிழ் மொழி ஆரிய மொழியான சமஸ்கிருதத்திலிருந்து தான் உருவானது என்று நம்பி நம்மை அடக்கி ஆளமுற்படுவார்கள். வரலாறு தெரியாத நாமும் நம் அடையாளங்களைத் தொலைத்துவிட்டு திராவிட நாடோடிகளாகவே அடுத்துவரும் சந்ததியினரால் அறியப்படுவோம். அப்படியே அவர்களின் பண்பாட்டையும் பழக்கவழக்கங்களையும் பலவந்தமாக ஏற்க வேண்டிய சூழ்நிலை வரும். அவைமட்டுமில்லாது பிற்கால சந்ததியினரும் அடிமை மனப்பான்மையிலேயே வளருவார்கள். இப்படி நம் இனம் அல்லது முன்னோர்களின் சிறப்பை அறியாமல், காலப்போக்கில் அது நம் DNA விலிருந்து மறைந்துவிடும். பின் அடையாளமில்லாமல் அழிந்த இனம் அல்லது சமூகத்தில் தமிழனமும் அடங்கும்.
மஞ்சளை உடலில் பூசுவதும், வாசலில் தெளிப்பதும் சாமியல்ல அது அறிவியல் (நோய் எதிர்ப்பு Antibiotic) என்று இன்றைய தலைமுறையினருக்குச் சொல்லித்தர வேண்டும். மாட்டுச் சாணம் தெளிப்பது கிருமி வராமலிருப்பதை தடுக்கவே என்பதையும், வீட்டில் துளசி செடியும், வாசலில் வேப்பமரமும் வைப்பதன் காரணத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். சித்தர்கள் விட்டுச் சென்றது, ஆயுர்வேத மூலிகைகள், பிணிநீக்கி, நோய்கொல்லி பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்.
வரலாற்றை முறையாக பின்பற்றாததினால் இன்று மருத்துவம், விவசாயம் சார்ந்த பல எண்ணற்ற தகவல்களைத் தவறவிட்டுள்ளோம்.
நம்மை மூடியிருக்கும் சாதி அல்லது மதம் என்ற போர்வையை கிழித்தெறிந்து கோவிலில் தோப்புக்கரணம் போடுவது, கை கால்களை நீட்டி குப்புற விழுந்து தொழுவது, நமாஸ் செய்வதும் உடற்பயிற்சியே என்பதை சொல்ல வேண்டும்.
பழனியில் கர்ப கிரகத்திலுள்ள முருகன் சிலை நவபாஷானத்தால் ஆனதையும், அதன் மருத்துவ சிறப்பையும் விவரிக்க வேண்டும். கோயிலைச் சுற்றி வருவதும், காலையிலெழுந்து ஊருக்கு வெளியே உள்ள கோயிலுக்குச் செல்வதும் உடற்பயிர்ச்சியே என்பதை விளங்க வைக்கவேண்டும். அன்று நாம் உருவாக்கிய யோகாசனக் கலை, இன்று வெளிநாட்டிலிருந்து வந்து நமக்கே பயிற்றுவிக்கப்படுகிறது.
செல்போன், கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களுக்கு மதிப்பளிக்கும் நாம், நம் முன்னோர்கள் விட்டுவிட்டுச் சென்ற பல அரிய கலைகளை புறக்கணித்து/மறந்து உடல் உபாதைகளைப் பெறுகிறோம். பின் வைட்டமின் மாத்திரை, இரும்புச் சத்து, சோர்வு, சர்க்கரை, இதய நோய் போன்றவைகளுக்காக பல லட்சங்கள் செலவு செய்து சிகிச்சை செய்கிறோம்.
அடுத்த தலைமுறையினருக்குச் சொல்லித்தராததின் விளைவாக, பயனுள்ள பல அறிவியல் சூத்திரங்களும் கலைகளும் அழிந்துவிட்டன. இவற்றைப் பேணிக் காப்பாற்றத் தவறியதின் விளைவு, நம்மைவிட சிறிய நாடுகளின் வளர்ச்சியை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். உரத்திற்காகவும், மருந்துகளுக்காகவும் அவர்களின் இறக்குமதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பட்டப் படிப்பு மற்றும் மேனிலைப் படிப்பிற்கு வெளிநாட்டவரின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கா விசா தொகையை குறைத்துக்கொள்ள மாட்டானா என்று இறைவனிடம் வேண்டுகிறோம்.
இன்று பழந்தமிழ் வரலாறு நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதற்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, சமீபத்தில் சென்னையில் பெய்த மழையும் அதனால் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவும்! வரலாற்றை நாம் புறக்கணித்ததால் விளைந்த அழிவேயாகும். அழிவிற்கான காரணம்தெரியாமல் அஃறிணையான மழையின் மீது பழி சொல்கிறோம்.
இப்பேரழிவிற்கான விடையை வெளியில் தேடவேண்டிய அவசியமில்லை, அது நம் வரலாற்றிலேயே உள்ளது. ஆம் வரலாறாக நாம் படிக்க மறந்த `பழந்தமிழரின் நீர் மேலாண்மை` என்பதுதான் அது. அன்றைய அரசர்கள் மழை நீரைச் சேமிக்க ஆற்று நீரைத் தடுத்து எழுப்பிய அணைகள், ஏரிகள், கண்மாய்கள், கரனை, தாங்கல், ஏந்தல், ஊரணி, குளங்கள் மற்றும் குட்டைகள் உருவாக்கியதே ஆகும்.
எனவே வரலாறு என்பது திரும்பத் திரும்ப நம்மிடம் நிகழும் தவறுகளை தடுக்க உதவுகிறது. வரலாற்றைக் கற்பது அவசியமென்பதற்கான காரணங்களின் சுருக்கம்; தமிழ் மரபு மற்றும் பாரம்பரியத்தைக் காக்க தவறுகளைத் தடுக்க வாழ்விற்கு இன்றியமையாத, அன்றாடம் பழந்தமிழையும் பழந்தமிழரின் சிறப்பையும் அறிய மருத்துவம், அறிவியல் பற்றிய நம் சிந்தனையை மெற்கொண்டு செல்ல வரலாறு அவசியம் என்று ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், இங்கு வரலாறு என்ற பெயரில் சொல்லித்தரும் பாடங்களிலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களிலும் எனக்கு முழு உடன்பாடில்லை. ஆம், இன்று வரலாற்றுப் பாட புத்தகத்தில் இருப்பது உண்மைகள் மறைக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட நிகழ்வுகளின் ஒருசேர் பிம்பம்.
நமது அண்டை நாடான பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சனைப் பற்றியும், அதற்கான அடிப்படைக் காரணங்களென்ன என்பது வரலாற்றுப் பாடத்தில் கற்பிக்கப்படுகிறதா? சீனாப் போர் எதற்காக உருவானது, அதற்கான காரணங்கள் என்ன என்பது தெரியாவிட்டால் நாளை வடகிழக்கு மாநிலங்களனைத்தும் அவர்கள் வசம் செல்லும். நாமும் சந்தோஷமாக அதை ஏற்போம். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நம் நிலம் பிறருடையாதாகும்.
எனவே வரலாறு என்னவென்பதை நாம் அடுத்த தலைமுறையினருக்குக் கட்டாயமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்குமுன் எது சரியான வரலாறு என்பதை நாம் ஆராய்ந்து தெரிந்துகொண்ட பின்னரே பிழையின்றி அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
இவற்றைச் செய்யத் தவறினால், நம் பழந்தமிழரின் வரலாறாகவுள்ள கலை, இலக்கியம், மருத்துவம், வேளாண்மை, அறிவியல் என்று மிஞ்சியிருக்கும் ஒருசில தகவல்களும் பேப்பரிலேயே அழிந்துவிடும்.
வரலாற்றை தெரிந்து கொள்வதால் பண்பட்ட ஒரு மக்கள் சமுதாயதம் உருவாக வழிவகுக்கும். மேலும் அது மனிதனை சிந்திக்கத் தூண்டுவதோடு மட்டுமில்லாமல், நாம் யார் என்ற தேடலையும், தன்னம்பிக்கையையும் நிச்சயம் வளர்க்கும்.
`மாற்றமொன்றே நிலையானது`, மாற்றத்தை ஏற்க வேண்டியது அவசியம். அதேநேரத்தில் நம் வரலாற்றுச் சிறப்புகளை உதறித் தள்ளிவிட்டு பிறர் கூறுவதை ஏற்க வேண்டிய அவசியமில்லை. நாம் அடுத்த தலைமுறையினருக்கு பணம், பொருள் போன்ற சொத்துக்களை விட்டுச் சென்றால் அது அவர்களுக்குப் பயனளிக்காது.
இன்றைய சிறுவர்களின் சராசரி IQ திறன் அதிகரித்துள்ளதாகப் படிக்கிறோம். அவர்களிடத்தில் காரணமில்லாமல் ஒரு காரியத்தைச் செய்ய சொன்னால் அவர்கள் விரும்பிச் செய்யமாட்டார்கள். என்வே வரலாறு கற்றலின் இன்றியமையாமையை முறையான சான்றுகளோடு எடுத்துரைத்தால், நாளை அவர்களாகவே ஒவ்வொன்றையும் பிரித்தறிந்து, ஆராய்ந்து கால மாற்றத்திற்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுப்பர்.
வரலாறு என்பதை பள்ளியில் வெறும் நூறு மதிப்பெண்களுக்காகக் கற்றுக் கொடுக்கப்படும் பாடமாகக் கருதாமல், படித்தால் வருமானம் வருமா? வேலை கிடைக்குமா என்று தர்க்கம் பேசுவதையும் தவிர்த்து – கலைகள் மற்றும் வரலாறு என்பது நம் ஒவ்வொருவரின் அடையாளங்களாக எண்ணி அவற்றை அடுத்தடுத்த தலைமுறைக்கு விளக்கிச் சொல்வது நமது கடமை. சொந்த அடையாளத்தின் மீது மரியாதை இல்லாதவர்களுக்கு தன் மேலும் மரியாதை இருக்காது.
இதைப் பற்றி எழுத இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இவைசார்ந்த கருத்துக்களை இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.
வாசகர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.
தூரிகையில் தீ கொண்ட உன்
பெயரை எழுதினால் கூட
அவையும் தமிழ் மீது உனக்கு உள்ள
பற்றின் காரணமாக எழுதுகோலும்
தலைவணங்கும்
"பார(தீ)தி"என்ற உந்தன்
பெயரை எழுதும் போது
வளைந்த முதுகினை எழுதுகோலின் முனைகொண்டு எழ
வைத்தவன் யாருண்டு?
எழுதுகோலின் முனை கொண்டு
நீ எழுதிய வார்த்தைகள்
ஒவ்வொரு தமிழனையும்
விடுதலைக்கு தூண்டியவன் நீ !
இப்பொழுது ஏது நான்
சொல்ல என் விடுதலையில்
என் தமிழ் மொழியும்
அழியும் நிலைக்கு
கொண்டுவந்தவர்
யார் இங்கே? - நானே அது
என் தமிழனிடத்தில் தமிழில்
பேசிட தயக்கம் கொள்ளும்
நிமிடம் என் தாய்மொழியை
நானே கொல்லுகிறேன்
என்ன கொடுமை ?
இனி என் தாய்மொழியை
கா
மானத்தோடு பிழைக்கும் இவர்களை ஆதரிப்போம்.