எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன்னை எனக்கு அதிகம் பிடிப்பதில்லை, நாளும் ஒற்றன் போல்...

உன்னை எனக்கு அதிகம் பிடிப்பதில்லை, நாளும் ஒற்றன் போல் என்னைப் பின் தொடர்கிறாய். என்னை உனக்குப் பிடிக்குமா என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என்னைப் பற்றி உனக்கு முற்றிலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை (ம்ம்ம் சரி கொஞ்சமாகத் தெரிந்திருக்கலாம்...). ஆனாலும் நாமிருவரும் பிரிந்ததில்லை, அதில் எனக்கு எந்தவொரு வியப்புமில்லை – இது காலங்காலமாகத் தொடர்வதுதானே!  

அவளும் உன்னை வெறுக்கிறாள், உன் மீதுள்ள பொறாமையே அதற்குக் காரணம். நாம் நெருங்கியிருப்பதைச் சபிக்கிறாள், அதைப் பலமுறை என்னிடமே சொல்லிருக்கிறாள். அப்போதெல்லாம் சிரித்து மழுப்பிவிடுவேன். ஆனாலும் உன்னைச் சபிக்க என் மனம் முன் வருவதில்லை. 

நீ ஆடையின்றி நிர்வாணமாயிருப்பதை நான் ரசிக்கவில்லை, அதை என்னால் மாற்றமுடியாது. அது காண்பவர்களின் நிலையைப் பொறுத்தது – நாம் அச்சப்படத் தேவையில்லை. உனைப் பார்க்கும் எவர்க்கும் என் அகத்தைப் பற்றி அறிய வாய்ப்பில்லை, அதனால் தான் என் ஆழ்மனதின் பொருமலையும், கோபத்தையும், வெறுப்பையும் நான் வெளிக்காட்டுவதில்லை, அதில் ஒரு சில நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது.  

ஏன் இப்படிச் சிரித்து ஏளனம் செய்கிறாய்? இது என் மனதினுள் இருக்கும் அச்சத்தின் குறியீடாக இருக்கும் என்று சந்தேகிக்கிறாய்! அது தவறல்ல, உன் கற்பனா சக்தியை என்னால் கட்டுப்படுத்த முடியாது. இப்படிப் பல நேரங்களில் என்னைச் சிந்திக்க வைக்கிறாய். என்னுள் எழும் எண்ணங்களை உன்னிடமிருந்து மறைக்க முற்படும்போதெல்லாம் அனேகமாகத் தோல்வியைச் சந்திக்கிறேன்.

இதில் வியப்பான விடயம் யாதெனில், என் மீது விழும் வெப்பக்கதிர்கள் உன்னுள் தெரிவதில்லை, அதுபோல மழை வரும் நாட்களில் நீ வெளிவருவதில்லை. இப்பிரபஞ்சத்தைப் பற்றிய உன் புரிதல் என்னூடே நிகழ்கிறது, என்னை நீ ஓரு ஊடகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாய்! நான் வெவ்வேறு கணங்களில் அணியும் முகத்திரையின் இரகசியத்தை நம்மிருவரைத் தவிர வேறெவரும் அறிந்ததில்லை. என் போல் நீ முகமூடியேதும் அணியாமல் நிர்வாணமே போதும் என்கிறாய், வெட்கங்கெட்டவனே! விந்தையாக உள்ளது - உன் தோற்றத்தில் நீ எவ்வித வண்ணமும் பூசிக்கொள்ளாமல் இருப்பது. கருப்பு நிறத்தில் இருப்பதில் அப்படி என்ன கர்வம் உனக்கு?

இந்த முகமூடி இரகசியத்தைத் தொடர்ந்து காத்துவருவதால் உன்னிடம் தோழமை ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக உன்னுடன் பலமுறைப் பேச முயன்றேன், ஆயினும் காண்பவர்கள் சந்தேகிக்கக் கூடுமென்பதால் அவ்வெண்ணத்தை நிறுத்திக்கொண்டேன். உன்னுடனான இந்நெருக்கம் அவளுடனான என் நட்பில் விரிசல் விழச் செய்யுமா? குழம்பி நிற்கிறேன். அதோ அவள் வரும் ஒலி கேட்கிறது, என்னை விட்டுச் சற்று ஒதுங்கி நில்; இன்று இரவு வெளிச்சத்தில் நம் சம்பாசணையை மீண்டும் தொடரலாம்.

உன் பால் பலவித வெறுப்புகள் இருந்தாலும், இறுதியில் என்னை அதிகம் புரிந்துகொண்டவன் நீ தான், என்னை நீ என்றும் வெறுத்தது கிடையாது. உன்னை பிரியும் நாளே இம்மண்ணுலகில் நான் வாழும் கடைசி நாளாக இருக்கும்! நம்மிருவருக்குமிடையே நீளும் இந்தப் புரிதலையும் நெருக்கத்தையும் அவளிடம் சொல்லாதே!

பதிவு : அருண்
நாள் : 1-Jan-19, 6:01 pm

மேலே