பெண்ணாகப் பிறந்தேனா?

பிறந்ததுதான் பிறந்தேன் நான்
பெண்ணாகப் பிறந்தேனா?

துகிலுக்குள் மூடுபடாத்
தூயமுகம் காட்டித்தான்
முகிலுக்குள் போய்நிலவை
முகம்மூடச் சொன்னேனா?
பிறந்ததுதான் பிறந்தேன் நான்
பெண்ணாகப் பிறந்தேனா?

முள்ளில்லாத முல்லைப்பூ
முறுவலிக்கும் போதில்என்
வெள்ளைப்பல் வெளிச்சமிட்டு
‘வெவ்வெவ்வே’ என்றேனா?
பிறந்ததுதான் பிறந்தேன்நான்
பெண்ணாகப் பிறந்தேனா?


தீந்தேனைச் சிந்துகின்ற
தென்னாட்டுப் பூக்களைஎன்
கூந்தலிலே சிறைவைத்துக்
குதூகலம்தான் அடைந்தேனா?
பிறந்ததுதான் பிறந்தேன் நான்
பெண்ணாகப் பிறந்தேனா?

பலாச்சுளைபோல் மின்னும்என்
பாதநடம் பார்த்துமயில்
கலாபத்தை விரித்தாடக்
கற்றுத்தான் கொடுத்தேனா?
பிறந்ததுதான் பிறந்தேன்நான்
பெண்ணாகப் பிறந்தேனா?

மரக்கிளையில் அமைர்ந்திருக்கும்
மாங்குயில்கள் மயக்கும்என்
குரல்கேட்டுப் பின்கூவக்
குருவாய்நான் ஆனேனா?
பிறந்ததுதான் பிறந்தேன்நான்
பெண்ணாகப் பிறந்தேனா?

நள்ளிரவு நாடகத்தில்
நகைச்சுவையாய் வந்துதித்த
பிள்ளைக்குப் பாலூட்டும்
பெரும்பேறு பெற்றேனா?
பிறந்ததுதான் பிறந்தேன்நான்
பெண்ணாகப் பிறந்தேனா?


கவிஞர் : மீரா (கவிஞர்)(9-Mar-12, 6:32 pm)
பார்வை : 50


மேலே