எனக்கிருக்கும் ஆசையெல்லாம்....!
அவன்:-
எனக்கிருக்கும் ஆசையெல்லாம் இதுதான்: கண்ணே!
எள்ளளவும் மாசில்லாப் பொன்னால் செய்த
வனப்புள்ள சங்கிலியை வாங்கி உன்றன்
வாசச்சந் தனக்கழுத்தில் போட வேண்டும்;
பனிமலரே, நீ மிகவும் கவர்ச்சி யாய் என்
பக்கத்தில் வந்தமர வேண்டும்; அந்தத்
தனியழகை நான் உண்ண வேண்டும்; உம்.... உம்...
தைமாதம் பிறக்கட்டும்; வழிபி றக்கும்!
எனக்கிருக்கும் ஆசையெல்லாம் இதுதான்: கண்ணே!
எப்படியும் பளபளக்கும் பட்டுச் சேலை
உனக்கொன்று வாங்கிவந்து கொடுக்க வேண்டும்;
ஒளிவிடியல் அமைதியைப்போல் திகழும் நீ, உன்
இனிக்கின்ற உடலிலதை அணிந்து கொண்டே
என்எதிரில் வந்துநிற்க வேண்டும்; அந்தத்
தனியழகை நான்சுவைக்க வேண்டும்; உம்.... உம்...
தைமாதம் பிறக்கட்டும்; வழிபி றக்கும்!
எனக்கிருக்கும் ஆசையெல்லாம் இதுதான்; கண்ணே!
என்கையில் பணம்நிரம்ப இருக்க வேண்டும்;
உனை அழைத்துக் கொண்டு நகர்ச் சந்தைக் குப்போய்
உனக்குமிகப் பிடித்தமுள்ள பொருள்கள் எல்லாம்
கனிவோடு நான் வாங்கிக் கொடுக்க வேண்டும்;
கண்களினால் நீ சிரிக்க வேண்டும்; அந்தத்
தனியழகை நான்பருக வேண்டும்; உம்....உம்....
தைமாதம் பிறக்கட்டும்; வழிபி றக்கும்!
அவள்:-
எனக்கிருக்கும் ஆசையெல்லாம் இதுதான்.. அத்தான்!
இருவிழிக்கும் இருகைக்கும் இருதோள் கட்கும்
நினைக்கமுடி யாஇனபம் அளிக்கும் பேசும்
நிலாப்பிஞ்சைப் பெற்றெடுக்க வேண்டும்; அன்பு
மனம்துள்ளப் பாலூட்ட வேண்டும்; என்றன்
மார்புக்கும் மதிப்புவர வேண்டும்; அந்தத்
தனியழகில் நாம் மயங்க வேண்டும்; உம்....உம்....
தைமாதம் பிறக்கட்டும்; மகன் பிறப்பான்!