கவிஞர்களே இவ்வருஷம்

கவிஞர்களே ! இவ்வருஷம் குறைத்துக் கொள்வோம்
கவிதைகளில் தேன்தடவல் நிறுத்திக் கொள்வோம்
செவிகளுக்கு இனிமைதரும் செய்யுள் வேண்டாம்
சினிமாவுக்(கு) எழுதிவரும் பொய்கள் வேண்டாம்
உவமைகளைத் துப்புரவாய் நீக்கிப் பார்ப்போம்
உலகத்தைத் திருத்துவதைப் போக்கிப் பார்ப்போம்
சிவபெருமான், சீனிவாசர் முருகன் மீது
சீர்தளைகள் தவறாத கவிகள் போதும் ...

அரசியலில் மாறுதலைச் சாட வேண்டாம்
ஆளுநர்கள், முதல்வர்களைப் பாட வேண்டாம்
பரிசுதரும் தலைவர்களைத் தேட வேண்டாம்
பட்டிமன்றம் கவிராத்திரி கூட வேண்டாம்
வரிச்சுமைகள், பெண்ணுரிமை, தமிழின் இனிமை
வாரொன்று மென்முலைகள், வளையல் சப்தம்
முரசறைந்த பழந்தமிழர் காதல், வீரம்
முதுகுடுமிப் பெருவழுதி எதுவும் வேண்டாம் ...

இத்தனையும் துறந்துவிட்டால் மிச்சம் என்ன
எழுதுவதற்கு என்றென்னைக் கேட்பீர் ஆயின்
நித்தநித்தம் உயிர்வாழும் யத்த னத்தில்
நேர்மைக்கும் கவிதைக்கும் நேரம் இன்றி
செத்தொழியக் காத்திருக்கும் மனுசர் நெஞ்சின்
சிந்தனையைக் கவிதைகளாய்ச் செய்து பார்ப்போம்
முத்தனைய * சிலவரிகள் கிடைக்கா விட்டால்
மூன்றுலட்சம் ' ராமஜெயம் ' எழுதிப் பார்ப்போம் ..!


கவிஞர் : சுஜாதா (எ) ரங்கராஜன்(21-Apr-12, 1:11 pm)
பார்வை : 134


மேலே