நோன்பு

அருளின் தேவதை
ஆண்டுக்கொருமுறை
கால வீதியில்காலெடுத்து
வைக்கின்றாள் -சாந்தியின் தூதாக !
அவள்தான் ரமழான் !
அவள் புன்னகையில்
ஆயிரம் பூர்ணிமைகள் !கண்களிலே
கருணைச் சுடர்கள் !
அவள்
நான்கு வேதங்களை
ஈன்றளித்தபுனிதத்தாய் !
பாவக் கறைகளை
அவள்பரிவோடு
துடைக்கின்றாள் !
நரகக் கூண்டுகளில்
அடைபட்ட பறவைகளை
விடுதலை செய்கின்றாள் !
பிறைச் சுடர் கொண்டு
அக அகல்களில் எல்லாம்
ஆன்மீக வெளிச்சம்
ஏற்றி வைக்கின்றாள் !
பசியென்ற அமுதம்
பரிமாறிப் பூமியையே
சொர்க்கமாய் ஆக்குகிறாள் !
பணத்தைப்
பகிர்ந்து கொள்ள
ஏழைவரி !
பசியைப் பகிர்ந்து கொள்ள
உண்ணா நோன்பு !
எதுவுமே தேவையற்ற
இறைவன்
நோன்பை மட்டும்
தனக்கென்று கேட்கின்றான் !
தருவதற்குகொடுத்து
வைக்க வேண்டாமா ?

அடடா !
எத்தகைய பெருமை !
இறைவனே நம்முன்
இரக்கின்ற ஏழை !
கொடை வள்ளல்நாமெல்லாம் !
வேலைக்கே கூலியுண்டு !
ஓய்வுக்கு யார் தருவார் ?
ஆனால்-வயிற்றின்
இந்த ஓய்வுக்கு
வல்லோன் இறைவன்
தன்னையே சம்பளமாய்த்
தந்து விடுகின்றான் !
உபவாசம் இருப்போரின்
வாய் வாசம் இறைவனுக்கு
கஸ்தூரி வாசம் !
இதுதான் அவன்
ஆலயத்தின்
நறுமணத் தூபம் !
இல்லாமல் பசிக்கின்ற
ஏழையரின் துயருணர
இருப்பவனைப்
பசிக்க வைக்கும்இணையற்ற
தத்துவமே நோன்பு !அங்க ரதத்தை
அங்கிங்கே அலைகழிக்கும்
ஐந்து குதிரைகளை
அடக்கும் கடிவாளமிது !
மனிதன்ஆசைகளின்
எடுபிடியாய்ஆடாமல்
அவைகளைத்தன்
எவலராய் மாற்றும்
அதிகார வலிமையிது !
உதிர வீதிகளில்
உலா வரும் சாத்தானும்
சிந்தை நடுங்கும்
சிகப்பு விளக்கு இது !
சொர்க்க வாசல்களைத்
திறக்கின்ற சாவியிது !
நரக வாசல்களையோ
அடைத்து விடும் பூட்டும் இது !
ஆன்மாவுக்கு
இதுகூட்டுப் புழு பருவம் !
ஞான மலர்தேடி
தேனெடுக்க உதவுகின்ற
வண்ணச் சிறகுகள்
வளர்வது இதிலேதான் !
பருகாமல் உண்ணாமல்
பட்டினி கிடந்து விட்டால்
நோன்பாகி விடாது !
ஐம்பொறியும் உறுதியுடன்
அனுஷ்டிக்கும் விரதமிது !
புறம்பேசல் என்னும்
இறந்த சகோதரனின்
இறைச்சி உண்ணும்
அநாகரீகம்நடத்தாமல்
இருப்பதேநாவின் நோன்பு !
அழுகிய வார்த்தைகளை
அருந்தாமல் இருப்பதே
செவியின் நோன்பு !
ஆபாசம் கண்டால்
அருவெருப்பதே
கண்ணின் நோன்பு !
ஆசைகள் பரிமாறும்
அறுசுவை விருந்தை
மறுப்பதேமனத்தின் நோன்பு !
இந்த உலகத்தின்
இன்பங்கள் என்னஅந்தக்
கதிர்நிலவைக்
கொண்டுவந்து
கைகளிலே கொடுத்தாலும்
சொர்கத்தின் எல்லாசுகங்களையும்
கொண்டுவந்துகாலடியில்
வைத்தாலும்இறைவா !
உன்அன்பின் முன்
இவையெல்லாம்தூசு என்று
எட்டி உதைக்கின்ற
ஏற்றத்தைப் பெற்றுவிட்டால்
அதுதான்ஆன்மாவின் நோன்பு !
இந்தப் பக்குவம்எய்திவிட்டால்
பின்உறக்கமும்
வணக்கமாகிவிடும் !
சுவாசமே தஸ் பீஹு
ஆகிவிடும் !
பிரார்த்தனை
பிறகுதேவை இல்லை -தனியாக !
ஏனென்றால்-நாமே
பிரார்த்திக்கப்படும்
பொருளாய் ஆகிவிடுகிறோம் !


கவிஞர் : கவிக்கோ அப்துல் ரகுமான்(21-Apr-12, 3:28 pm)
பார்வை : 34


பிரபல கவிஞர்கள்

மேலே