முருகன் பாட்டு

வருவாய் மயில் மீதினிலே
வடிவே லுடனே வருவாய்
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும். (முருகா) 1

அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்
முடியா மறையின் முடிவே! அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா) 2

சுருதிப் பொருளே, வருக.
துணிவே, கனலே, வருக.
கருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா) 3

அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்! சரணம், சரணம்!
குமரா, பிணியா வையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே, சரணம். (முருகா) 4

அறிவா கியகோ யிலிலே
அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே, வளர்வாய், அடியார்
புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய். (முருகா) 5

குருவே, பரமன் மகனே,
குகையில் வளருங் கனலே,
தருவாய் தொழிலும் பயனும், அமரர்
சமரா திபனே, சரணம், சரணம். (முருகா) 6


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 10:18 am)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே