கோடுகளும் சித்திரங்களே

என்
பாதங்களுக்குக் கீழே
பூக்கள் இல்லை
மொய்த்துக் கிடந்தவை
முட்களே.
எனினும்
ரத்தம் துடைத்து
நடந்து வந்தேன்.

என்னைத்
தடவிச் சென்றது
தெற்கே குளித்து வந்த
தென்றல் அல்ல
நுரையீரல்களை -
கார்பன் தாள்களாய்க்
கறுக்க வைக்கும்
கந்தகக்காற்று
இருந்தும்
சுடச்சுடவே
நான்
சுவாசித்து வந்தேன்

ஆண்டு முழுவதும் இருந்த
அக்கினி நட்சத்திரத்தில்
எரிந்து போயிற்று
எனது குடை
ஆயினும்
என்
நிழலின் நிழலிலேயே
நீண்டதூரம் ஒதுங்கிவந்தேன்

என்
தலைக்கு மேலே
பருந்துகள் எப்போதும்
பறந்துகொண்டிருந்ததால்
நான் இன்னும்
செத்துவிடவில்லை
என்பதை
நித்தம் நித்தம்
நிருபிக்க வேண்டியதாயிற்று

என் நிர்வாணத்தை
ஒரு கையால்
மறைத்துக்கொண்டு
என்
அடுத்த கையால்
ஆடை நெய்து
அணிந்து கொண்டேன்

இன்று-
என்
பிரவாகம் கண்டு கரைகள்
பிரமிக்கலாம்
ஆனால் -
இந்த நதி
பாலைவனப் பாறைகளின்
இடுக்கில் கசிந்துதான்
இறங்கி வந்தது

தனது
சொந்தக் கண்ணீரும்
சுரந்ததால்
இரட்டிப்பானது
இந்த நதி

இந்த விதை
தன்மேல் கிடந்த
பாறைகளை
முட்டி முட்டியே
முளைத்துவிட்டது

இன்று என்
புண்களை மூடும்
பூக்களினால்
நான்
சமாதானம் அடைவது
சாத்தியமில்லை
இந்தச்
சமூக அமைப்பு
எனக்குச்
சம்மதமில்லை

சரிதம் என்பது
தனி ஒரு
மனிதனின்
அறிமுக அட்டையோ...?
அல்ல
அது
முடிவைத்தேடும்
ஒரு சமூகத்தின்
மொத்த விலாசம்

இதுவோ...
ரணத்தோடு வாசித்த
சங்கீதம்...
எனது
ஞாபக நீரோடையின்
சலசலப்பு...
நசுங்கிய
நம்பிக்கைகளுக்கு
என்
பேனாவிலிருந்தொரு
ரத்ததானம்

இதில்
சில நிஜங்களைச்
சொல்லவில்லை என்பது
நிஜம்.
ஆனால் -
சொன்னதெல்லாம் நிஜம்

நான்
வரைய நினைத்தது
சித்திரம்தான்.
வந்திரப்பவை
கோடுகளே
ஆனால் -
கோடுகளும்
சித்திரங்களே!

மனித நேசம்தான்
வாழ்க்கை என்பதை
அறிய வந்தபோது
என்
முதுகில் கனக்கிறது
முப்பது வயது.


கவிஞர் : வைரமுத்து(19-Mar-11, 6:26 pm)
பார்வை : 234


மேலே