அவள் துடிப்பு

படித்தும்பந் தடித்தும் இருந்தவள் தானே -- அந்தப்
பாவிஎன் உள்ளம் கவர்ந்தானே!

துடித்தறியாத உள்ளம் துடித்தது -- காளை
தொடுவதெப் போதடிஎன் தோளை?

விடிந்தால் அவன் உருவிலேஎன் விழிதிறக்கும் - என்
வேலைக்கிடையில் நினைவெல்லாம் எங்கோ பறக்கும்
கொடியவன் பிரிந்தான் என்பதால் என்னுளம்
இறக்கும் -- பின்
கொஞ்சவருவான் எனஅது மீண்டும் பிறக்கும்

மறந்திருக்கவோ என்னால் முடிவதும் இல்லை -- அந்த
வஞ்ச வண்டுக்கென் நெஞ்சந்தானே முல்லை!
உறங்கும்போதும் இமைக்குள்ளும் செய்குவான்
தொல்லை -- என்

ஒளிஇதழ் அடையுமா அவன்முத்துப் பல்லை?
காலைக் கதிர்வந்து பலகணி இடுக்கிலே சிரிக்கும் -- அது
காளை எட்டிப் பார்ப்பது போலவே இருக்கும்.
சோலைக் குளத்தில் செந்தாமரை இதழ்விரிக்கும் -- அது
தூயவன் முகமென என்உளம் ஆர்ப்பரிக்கும்!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 7:07 pm)
பார்வை : 24


பிரபல கவிஞர்கள்

மேலே