ஏன் என்றால் உன் பிறந்தநாள் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
உலகப் பூக்களின் வாசம்
உனக்குச் சிறை பிடிப்பேன்!
உலர்ந்த மேகத்தைக் கொண்டு
நிலவின் கறை துடைப்பேன்!
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்!
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்!
கிளை ஒன்றில் மேடை அமைத்து
ஒலிவாங்கி கையில் கொடுத்து
பறவைகளைப் பாடச் செய்வேன்!
இலை எல்லாம் கைகள் தட்ட
அதில் வெல்லும் பறவை ஒன்றை
உன் காதில் கூவச் செய்வேன்!
உன் அறையில் கூடு கட்டிட கட்டளையிடுவேன்
அதிகாலை உன்னை எழுப்பிட உத்தரவிடுவேன்
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்!
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்!
மலையுச்சி எட்டி, பனிக்கட்டி வெட்டி
உன் குளியல் தொட்டியில் கொட்டி
சூரியனை வடிகட்டி
பனியெல்லாம் உருக்கிடுவேன்
உன்னை அதில் குளிக்கத்தான்
இதம் பார்த்து இறக்கிடுவேன்
கண்ணில்லா பெண் மீன்கள் பிடித்து
உன்னோடு நான் நீந்த விடுவேன்
நீ குளித்து முடித்துத் துவட்டத்தான்
என் காதல் மடித்துத் தந்திடுவேன்!
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்!
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்!
நூறாயிரம் ஊதுபைகளில்...
என் மூச்சினை நான் இன்று நிரப்பிடுவேன்.
அவை அனைத்தையும் வானத்தில் அடுக்கிடுவேன்
என் மூச்சினில் உன் பெயர் வரைந்திடுவேன்!
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்!
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்!
நெஞ்சத்தை வெதுப்பகமாக்கி
அணிச்சல் செய்திடுவேன்
மெழுகுப் பூக்களின் மேலே - என்
காதல் ஏற்றிடுவேன்
நீ ஊதினால் அணையாதடி
நீ வெட்டவே முடியாதடி
உன் கண்களை நீ மூடடி
என்ன வேண்டுமோ அதைக் கேளடி
கடவுள் கூட்டம் அணிவகுத்து
வரங்கள் தந்திடுமே
இந்நாளே முடியக் கூடாதென்று
உலகம் நின்றிடுமே!
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்!
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்!