எட்டுக் கவிதைகள்

1
சாத்துயர் கேட்டுப் போகும்
சுற்றத்தார் சாயல் காட்டிக்
கழன்றது ரத்த வெள்ளம்
குத்துண்ட விலாப்புறத்தில்

அவர் பெயர் ஒன்றினோடு
என்பெயர் ஒன்றிப் போச்சாம்
படுக்கையில் தூங்கும் என்னைக்
கந்தர்வர்கொன்று போனார்

பெயரையே சொல்லிப் பார்த்து
திகைக்கிறேன் எனக்கென் பேரே
எப்படித் துரோக மாச்சு.

2
வெளியில் வந்தான் நடுநிசியில்
ஒன்றுக் கிருந்தான்
மரத்தடியில்
நெற்றுத் தேங்காய்
அவன் தலையில்
வீழ்ச்சியுற்று
உயிர் துறந்தான்

ரத்தக் களங்கம்
இல்லாமல்
விழுந்த நோவும்
தெரியாமல்
தேங்காய் கிடக்கு
போய்ப்பாரும்

3
மூட்டைகள்
அனுப்பக் காத்த
மூட்டைகள்
அவற்றைப் போலப்
பயணிகள்
தூங்கினார்கள்
ஆடைக்குள்
சுருட்டிக் கொண்டு

காரணம்
இல்லாமல் நெஞ்சம்
உணர்த்திய பயத்தைப் போலத்
தொலைவிலே
இரவினூடே
ரயில் முகம்
வைர ஊசி

கிணறுகள்
கால்முளைத்த
கிணறுகள்
இங்குமங்கும்
மூத்திரம்
நின்று பெய்யும்
வியாபாரிப்
பெண்ணைப் போல

ஏணியை
நிமிர்த்துப் போட்டு
ஏறுவார்
அன்றைக் குண்டு
ஏணியைப்
படுக்கப் போட்டு
ஏறுவார்
இன்றைக் குண்டு

4
விழிக்கிறான்
முழங்காலொன்று
காணலை
பொசுக்கப்பட்டு
சதைகளும் எலும்புமாகக்
கிடப்பதைத்
தெரிந்து கொண்டான்

வைக்கிறான்
கூறுகட்டி

அறுவையில்
எடுத்த ஈரல்ப்
பகலவன்
சாய்வதற்குள்
பண்டமும்
விற்றுப் போச்சு

வயிற்றடி
ரோமக் காட்டில்
வருவாயைப்
பொத்தி வைத்துப்
படுக்கிறான்
கனவில் யாரோ
பாக்கியும்
எரிக்கிறார்கள்

5
பெயர் சொல்லிக் கூப்பிட்டாள்
புரண்டு கூடப்
படுக்கவில்லை அஃதொன்றும்
கொள்ளிக் கட்டை
கொண்டு வந்து ஒவ்வொன்றின்
காலைச் சுட்டாள்

ஒவ்வொன்றாய் எழுந்திருந்து
என்ன என்ன
அப்பாவை எழுப்பென்றாள்
பந்தம் தந்தாள்

பந்தத்தால் அப்பாவின்
தாடி மீசை
எல்லாமும் கொளுத்திவிடப்
புரண்டெழுந்தான்
ஆயிற்றா உட்கார
லாமா என்றான்

அப்பாவும் பிள்ளைகளும்
உட்கார்ந்தார்கள்
உடுப்புகளைப் புறம்போக்கிப்
படுத்துக் கொண்டாள்

வள்ளிக் கிழங்கின்
பதமாக
வெந்து போன
அவள் உடம்பைப்
பிட்டுத் தின்னத்
தொடங்கிற்று
ஒவ்வொன்றாக
அவையெல்லாம்

எல்லாக் கையும்
முலைகளுக்குப்
போட்டி போட்டுச்
சண்டையிட
அப்பன் கொஞ்சம்
கீழ்புறத்தில்
கிள்ளித் தின்றான்
அவ்வப்போ

6
முகக்கண்கள் அழுதால் கண்ணீர்
விடுகிறான் என்னும் நீங்கள்
மயிர்க்கண்கள் அழுதால் மட்டும்
வியர்க்கிறான் என்று சொல்வீர்

வேலை செய் என்னும் உங்கள்
வார்த்தைகள் குசுப்போல் நாறக்
கழிவறை உலகம் செய்தீர்

குருடுகள் காலூனங்கள்
பித்துக்கள் பிறக்கும் போதே
வேலையைத் தவிர்க்கும் மார்க்கம்
தெரிந்ததால் பிழைத்துக் கொண்டார்

நானொரு குருடனாக
நானொரு முடவனாக
நானொரு பித்தனாகப்
பிறக்காமல் போய்விட்டேனே

7
உங்கள் எதிரே நான்வரும் பொழுது
என்னைப் பிடித்துக் கொல்லப் பார்க்கிறீர்
‘எப்படி உயிர்க்கலாம் எங்கள் காற்றை நீ’

காற்றை உண்டு வாழ்கிற வழக்கம்
உள்ளவன் இல்லை நான் எனக்கூறி
மூக்கில்லாத முகத்துக்குங்கள்
பார்வையைக்கொணரப் பீயாய் உணர்கிறீர்

நீங்கள் என்னை விட்டுப் போனதும்
ஒளித்து வைத்த மூக்கை எடுத்துப்
பொருத்திக்கொண்டு
உயிர்க்கத் தொடங்கினேன்
தொலைவில் நீங்கள் குலைகிறீர்
காற்றில்லாத பலூனைப் போல

8
தூக்கம் வரைக்கும் யாவரும் சித்தர்
தூக்கத்துக்கப்புறம் யாருடா சித்தர்?
தூக்கத்துக்கப்புறம் என்னான்னு கேளு
தூக்கிக் காட்றேன் தெரியுதா பாரு.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:24 pm)
பார்வை : 0


மேலே