முழக்கம்

தடித்த சிங்களத்தின் தறுக்கனே! மூடா!
தமிழன்யான் உனைக்கண்டு தலைதாழ்த்தவோடா?
துடிப்புள்ள தமிழ்வீரர் தோள்வீரம் அறியாய்...
துள்ளுகின்றாயடா! நில்! எங்கள் மண்ணில்
வெடிக்கின்ற குண்டுக்கும் அசையாத வீரர்
விளைந்துள்ள காலம் நீ வி€ளாயடுகின்றாய்!
இடிக்கின்றாயா? சரி... இடித்துப்பார் என்றன்
எலும்போடு தசைமோதித் தமிழென்றே கூறும்!

செந்தமிழ்க் கனலூறி வளர்ந்த இம்மேனி
சிறுத்தையின் எழில்மேனி வளையுமோ கூனி?
மந்திரமான செந்தமிழோடு வாழ்ந்தோம்!
மலைமோதினாலும் நிலைதாழுவோமா?
தந்தை இராவணன் ஆண்ட பொன்னாடு!
தமிழீழ நாடென்றன் தாய்நாடு கண்டாய்!
இந்தமண் மீட்பதே என் முதல்வேலை!
ஏன் மோதினாய்? என்முன் நீ எந்த மூலை!

வெறியாடும் சிங்களர் படைவீரா! இதுகேள்!
விடுதலை வீரரைத் தொடுதலை நிறுத்து!
பொறிகக்கும் விழியோடு புலிகள்யாம் நின்றோம்!
பொன்னீழம் உயிரென்றோம்... போராடுகின்றோம்!
சிறிதடா நின்பாய்ச்சல்! பெரி தெங்கள் மூச்சு!
செந்தமிழ் வீரரை என்செய வந்தாய்!
அறிக! இங்கோர் புயல் விரைவில் வெடிக்கும்!
அந்நாள் உன்சிங்களம் பாடம் படிக்கும்!

நில்லா இம்மண்மிசை அநீதிகள் நில்லா!
நிறைவெறி யாளனே! நின்படை வெல்லா!
செல்லாதடா நின்றன் செருக்கிந்த நாட்டில்!
செந்தமிழன் கதை படித்துப்பார் ஏட்டில்!
எல்லார்க்கும் இம்மண்ணில் இடமுண்டு கண்டாய்!
எதிரியின் உடல்மட்டும் விழும்துண்டு துண்டாய்!
பொல்லார்க்குப் பொல்லாத நாடெங்கள் நாடு!
புரிந்து கொண்டாயா நீ இப்போதே ஓடு!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 10:38 pm)
பார்வை : 111


மேலே