செத்த நாள்

ஆடா மயிலாய் அசையா இளங்கொடியாய்
ஓடா நதியாய் ஒரு புதிராய்
நாடெல்லாம்....
வீசாத தென்றலாய் வீசும் தமிழ்ப் பெருமை
பேசாத வாய் பிணத்தின் வாய்!

புறமும் அகப்பாட்டும் காப்பியனால் பூத்த
இறவா இலக்கணத்தின் ஏடும்
குறள் மொழியும்
ஆர்க்கும் சிலம்பின் அழகு தமிழ் நடையும்
பார்க்காத கண் பாவக்கண்!

கத்து கடல்பறித்தும் கல்லாதார் தீவைத்தும்
குத்து வடமொழியின் கூர்பட்டும்
இத்தனைக்கும்....
வாடாத செந்தமிழின் வரலாறு கேட்டபின்
ஆடாத கால் ஆனைக்கால்!

வானம் அளவு வளர்ந்து மொழிக்கெல்லாம்
தானம் கொடுத்த தமிழேட்டில்
ஈனம்
படைக்க வந்தாரா? அவர் பல்லை ஓங்கி
உடைக்காத கை உலக்கை!

ஆளிருந்தால் என்ன? அழகிருந்தாலும் என்ன?
நீள்விழியார் நெஞ்சில் நிறைந்ததென்ன?
கேள் தோழா!
வையம் புகழும் தமிழ்க்கவிதை என் வாழ்வில்
செய்யாத நாள் செத்த நாள்!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:42 pm)
பார்வை : 26


மேலே