யாத்திரைக்காரன்

ஏடெடுத்து கவிஎழுதத் தாய் சுமந்தாள் - எனை
ஈன்றெடுத்துத் தாலாட்டிப் பால் கொடுத்தாள்
மூன்றெழுத்து படித்தவுடன் பாட்டெடுத்தேன் - என்
மூச்சு ஊஞ்சல் கவிசுமக்க நான் நடந்தேன்.
கூடு விட்டுக் கூடு பாய்ந்து போனதில்லை - நான்
கொள்கை விற்றுக் கோபுரத்தில் ஏறவில்லை!
கூட வந்து கொடி பிடிக்க யாருமில்லை
குடியிருக்க எனக்கு ஒரு வீடுமில்லை!
நாலு பக்கம்போன 'தெப்பம்' கரை ஏறவில்லை - என்
நாடகத்தில் மூடுதிரை .. சபை கூடவில்லை
தூரதூரம் நான் நடந்தேன் தொடுவானமில்லை - என்
ஆடுபுலி ஆட்டத்திலே கோடுமில்லை - நான்
வசந்தகாலப் பூக்களுக்கும் நிறம் எழுதும்
சித்திரக்காரன் - அடிமை
வாழ்வைவிட்டு வெளிநடப்பு செய்துவிட்ட
யாத்திரைக்காரன்!


கவிஞர் : நா. காமராசன்(2-Nov-11, 2:40 pm)
பார்வை : 314


மேலே