சைவப்பற்று
இரும்புப் பெட்டியிலே - இருக்கும்
எண்பது லக்ஷத்தையும்,
கரும்புத் தோட்டத்திலே - வருஷம்
காணும் கணக்கினையும்,
அருந்துணையாக - இருக்கும்
ஆயிரம் வேலியையும்
பெருகும் வருமானம் - கொடுக்கும்
பிறசொத்துக்களையும்,
ஆடை வகைகளையும் - பசும்பொன்
ஆபரணங்களையும்
மாடு கறந்தவுடன் - குடங்கள்
வந்து நிறைவதையும்,
நீடு களஞ்சியம்கள் - விளைந்த
நெல்லில் நிறைவதையும்,
வாடிக்கைக் காரர்தரும் - கொழுத்த
வட்டித் தொகையினையும்,
எண்ணிஎண்ணி மகிழ்ந்தே - ஒருநாள்
எங்கள் மடாதிபதி
வெண்ணிறப் பட்டுடுத்திச் - சந்தனம்
மேனியெலாம் பூசிக்
கண்கவர் பூஷணங்கள் - அணிந்து
கட்டில் அறைநோக்கிப்
பெண்கள் பலபேர்கள் - குலவிப்
பின்வர முன்நடந்தார்!
பட்டுமெத்தைதனிலே - மணமே
பரவும் பூக்களின்மேல்
தட்டினிற் பக்ஷணங்கள் - அருந்திச்
சைவத்தை ஆரம்பித்தார்;
கட்டிக் கரும்பினங்கள் - சகிதம்
கண்கள் உறங்கிவிட்டார்;
நட்ட நடுநிசியில் - கனவில்
நடந்தது கேளீர்.
நித்திரைப் பூமியிலே - சிவனார்
நேரில் எழுந்தருளிப்
புத்தம் புதிதாகச் - சிலசொல்
புகல ஆரம்பித்தார்.
'இத்தனை நாளாகப் - புவியில்
எனது சைவமதை
நித்த நித்த முயன்றே - புவியில்
நீளப்பரப்பி விட்டாய்.
மடத்தின் ஆஸ்தியெல்லாம் - பொதுவில்
மக்களுக்கு ஆக்கிவிட்டேன்!
திடத்தில் மிக்கவனே - இனிநீ
சிவபுரி வாழ்க்கை
நடத்துக!' என்றே -சிவனார்
நவின்றுபின் மறைந்தார்.
இடிமுழக்க மென்றே - தம்பிரான்
எண்ணம் கலங்கிவிட்டார்!
தீப்பொறி பட்டதுபோல் - உடலம்
திடுக்கிட எழுந்தார்
'கூப்பிடு காவலரை' - எனவே
கூச்சல் கிளப்பிவிட்டார்;
'காப்பளிக்க வேண்டும் - பொருள்கள்
களவுபோகு' மென்றார்
'மாப்பிளை என்றனுக்கே - இத்ததி
மரணம் ஏதுக்' கென்றார்.
சொப்பனத்தை நினைத்தார் - தம்பிரான்
துள்ளிவிழுந்து அழுதார்!
ஒப்பி உழைத்ததில்லை - சிறிதும்
உடல் அசைந்ததில்லை!
எப்படி நான்பிரிவேன் - அடடா!
இன்பப் பொருளையெல்லாம்;
தப்பிப் பிழைப்பதுண்டோ - எனது
சைவம் எனத்துடித்தார்!