அவள் நிலமானாள்; அவன் மழையானான்!

*"யாயும் ஞாயும் யாரோ கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்!
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே"

(குறுந்தொகை:பாடல்:40 பாடியவர்:செம்புலப் பெயனீரார்)

பொருள் விளக்கம்:
யாய்=தாய். ஞாய்=தாய். எந்தையும் நுந்தையும்= என் தந்தையும் உன் தந்தையும்.
செம்புலம்=செம்மண் நிலம். பெயல்நீர்=மழை

"நட்சத்திரங்கள் முகம்பார்த்து மினுக்கிக் கொள்
நாளெல்லாம் தேடித் தொங்கவிட்ட நிலவென்னும் கண்ணாடியில்,
நம்மிருவர் முகம் பார்க்க முடியாதெனினும்; கண்ணே!
நான் உன் முகத்தை நிலவாகவே பார்க்கின்றேன்!
மெய்யாகவே நிலவைப்போல் இருக்கவேண்டுமென்றுதான் - நீ
மைகொண்டு கண்ணெழுதி, கன்னத்தில் புள்ளியொன்றும் கருநிறத்தில் வைத்துக் கொண்டாய்!
தேங்காய்க் கீற்று போன்ற பிறை காட்டு எனக் கேட்டால்
பாங்காய் உன் முகத்தை என் முகத்தில் பதித்துப் பைங்கிளியே!
நேர்வகுடுக்குக் கீழுள்ள உன் நெற்றியினைக் காட்டிடுவாய்!
நேரிழையே! நீ எனக்கு விளக்க வேண்டும்;
நிலவைக் கறுப்பாக்கும் "அமாவாசை" ஒன்று வருமே!
நீ அதற்கு விதிவிலக்கா? என நான் கேட்டபோது
என் மடிமீது முகமுழுதும் புதைத்துக்கொண்டு,
உன் கருங்கூந்தல் மட்டுமே நான் காணப் படுத்துக் கொண்டாய்!
அதனை நான் அமாவாசையென எண்ணிக்கொள்ள வேண்டுமென;
அழகோவியமே! நீ உன் விரல் கொண்டு சுட்டிக்காட்ட,
கார்குழலே நான் கோதிக்கொண்டே
கண்மணியே உன் உச்சிமீது முத்தமீந்தேன்!
பாம்பு; நிலவை விழுங்குகின்ற பழம் புராணக் கதையொன்றை
ஆம்பற் கொடியிடையாளே! நம்புவதற்கில்லை யென்றேன்; நீயோ,
மறுத்துரைத்து வாதிட்டு "இதோ, இந்த நிலவின் கன்னத்தை
அறுத்தெடுக்காமல் வாய்க்குள் விழுங்குகின்ற உமது செயலுக்கு என்ன பெயராம்?" எனக்கேட்டு,
"பழம் புராணப் பாம்பு விழுங்கும் கதை பொய் எனினும்;
பழம் போல எனை விழுங்கி விழுங்கி விடுவிக்கும் இந்தப் பள்ளியறைக் கதை மெய்தானே" என்றாய்!
உன் கவிதை நடைப் பேச்சில் மயக்கமுற்று
ஒரு நூறு முத்தங்கள் உடனே தந்தேன்! நீயும் திருப்பித் தந்தாய்!
அதையெல்லாம் மறந்துவிட்டு; உனைப் பிரிந்து
அயலூரில் நெடுநாள் தங்கிவிட்டேன் என்று
ஆருயிரே! அகம் நொந்து நீ ஊடுவது நியாயம்தானா?
ஊடல் புரிவதிலும் ஓர் அழகைத்தான் காணுகின்றேன்.
பாடல் பிறப்பதற்கு இசை கூட்டல் வேண்டுமன்றோ! அதுபோலக்

கூடல் விழா தொடங்குவதற்கு,
ஊடல்தான் கொடியேற்றி வைக்க வேண்டும்!

அதனாலே உன் ஊடல் கண்டு உவகை மிகக் கொள்கின்றேன்!
ஆனாலும் அளவுக்கு மீறிவிட்டால் அமுதமும் நஞ்சாகிவிடுமன்றோ!
தொட்டால் நெருங்காமல் நீ எட்டி விலகும்போது
தொலைவிலிருந்து உன் முழு எழிலைப் பருகுகின்றேன்!
மொட்டாய்க் குவிந்து நிற்கும் மார்பகத்து ஆடையினை நான் நகர்த்த - அது
கட்டோடு பிடிக்காமல் இழுத்துப் போர்த்தி - வாய்
மொழியால் "விடுங்கள்" என்று நீ வெடுக்கென்றுரைத்தாலும் - உன்
விழி மட்டும் ரகசியமாய் ஓர் உடன்பாட்டுக்கு வருதல் கண்டு; இதயம்,
பொழிகின்ற இன்ப மழைச் சுகத்தை நான் என்னென்று சொல்வேன்!
வழிகின்ற தேனருவிப் பக்கம் போவோம் வா! - வீணாய்க்
கழிகின்றதே பொழுது என; நம் வரவுக்காகக்
காத்திருக்கும் மலர் மெத்தையினைப் பார்!
கோத்திருக்கும் முத்தாரப் பல்வரிசைப் பேழையின்
மூடியினைப் புன்சிரிப்புத் திறவுகோலால் திறந்துவிட்டு
ஊடியது போதுமென என் தோளில் ஊஞ்சல் ஆடிடுக!
வாடியதோ என வண்ணத் தமிழ்க்கிளியின் நெஞ்சம்?
தேடியதோ? தேடிப்பின்னர் திகைத்ததோ? ஒருவேளைத்
திரும்ப வருவேனோ, மாட்டேனோ என்று
இரும்படிக்கும் உலைவீழ்ந்த புழுவாகத் துடித்ததோ?"

இவ்வாறு
பிரிந்திருந்த காதலனின் வரவு பார்த்து - மனம்
வருந்தி வீழ்ந்த பெண்மான் ஒன்று - அவன்
வந்தபின்னும் ஊடலுற்றுச் சினந்தபோது, அவளைத் தன்
வசமாக்க வாரியிறைத்திட்டான் வர்ணனைப் பூமாரி!

அவளோ;
இன்னும் ஏனவன் பேசிக்கொண்டு நிற்கின்றான் -
இழுத்தணைத்துப் பசும்புல் தரையில் படுக்கவைத்து
கன்னம் சிவக்க, கனியுதடு மெல்ல வீங்க - முன்போல்
கணக்கென்ன நூறு? முன்னூறு நானூறு முத்தங்கள் கொடுத்திட்டால்
கசக்குதென்று கழுத்தைப் பிடித்துத் தள்ளியா விடுவேன்?
கட்டியணைக்கவே அவன் கரம் தாவாதோ தன்மீதென்று,
தணலைப் போல் கொதிக்கின்ற காதல்தனை
தன் நெஞ்சுக்குள் அடைத்து வைத்துத் தத்தளித்தாள்!

"அன்றென்னை அமளியிற் கிடத்தி
அன்றிலடி நாமிருவர் அரைநொடியும்
பிரிவதில்லை! ஆணையடி அன்பே என்று
விரிவுரைகள் ஆற்றினீரே - என்ன பயன்?
விடிந்தால் ஒரு திங்கள் முடிந்துவிடும் - இவள்
மடிந்தால் மடியட்டுமென்றுதானே கவலையற்று
மறுநாளே வருவதாய்ச் சொன்ன சொல்லை மறந்து போனீர்!
மறப்பது ஆடவர்க்கு இயற்கையெனக் கூறிவிடும்! நானும்; உயிர்
துறப்பதும் மகளிர்க்கு எளிதேயென்று காட்டுகின்றேன்."

இவ்விதம்

சொற்களுக்குச் சோக இசை சேர்த்து - அந்தச்
சொர்ணத்தின் வார்ப்படம் சுளையிதழ்கள் மூடுமுன்பே,
ஓடிவந்து கட்டிக் கொண்டான்! "நான்
தேடிநின்ற தெள்ளமுதே!" என அவளும் ஒட்டிக் கொண்டாள்!
வானூர்ந்த நிலவழகி; முகில் கொண்டு முகம் மறைத்தாள் வெட்கத்தாலே!
மானொன்று நாணமுற்று புதர் மறைவில் ஒதுங்கிற்றாங்கே!
கிள்ளைகளும், புறாக்களும் இணை இணையாய்க்
கிளைகளில் இருந்தெழுந்து "சிறிதேனும் இந்தப்
பிள்ளைகட்கு வெட்கமிலையோ! இத்தனைபேர் நம் மத்தியிலே
வெள்ளை மலர்ப் படுக்கையிலே காம விளையாட்டா? சிச்சி" எனக்கூறிப் பறந்தனவே!

ஊடலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு - இன்பக்
கூடல் முடித்து எழுந்தபோது - "இனியொருமுறை
"வாடல்" என்பது வாழ்க்கையில் வாராதே" என்று
ஆடல் தீர்ந்து தோகை மூடிய மயில் கேட்டாள்!

அவன், அவளைப் பார்த்து:
*"உயிரே! ஒன்று கேள்! உன்னையும் என்னையும்
உலகில் பிரிக்கின்ற சக்தி எதுவுமில்லை!
உனைப்பெற்ற தாய் யார் என்றோ
எனையீன்ற தா யார் என்றோ
உன் தந்தைக்கும் என் தந்தைக்கும்
உறவுமுறை என்னவென்றோ
இருவர் நாம் எவ்வழியில் வந்தோர் என்றோ
அறிந்திட விரும்பாமலே அறிமுகமானோம்!
எங்கிருந்தோ வந்தாள் என உன்னை நானும்,
எங்கிருந்தோ வந்தான் என என்னை நீயும்
ஏற்றுக்கொண்டோம்! இதயத்தில்;
ஏற்றிக்கொண்டோம்! இனியவளே!
செம்மண் நிலத்தில் மழை பொழிந்தால் - அந்த
நிலத்தொடு கலந்த நீரில்
சிவப்பு வண்ணத்தைப் பிரிக்க முடியாதன்றோ!
அஃதேபோல் நமது
நெஞ்சங்கள் இரண்டும் இணைந்துவிட்டன!
எனவே பிரிவு எனும் நினைப்பை
இக்கணமே அகற்றிவிடு!"

இந்தக் குறுந்தொகைப் பாடலை
இளங்குமரன் எளிமையாக்கிச் சொன்னவுடன்
மங்கைநல்லாள், மீண்டும் நிலமானாள் - அவன்
மழையானான்!


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 7:12 pm)
பார்வை : 1000


பிரபல கவிஞர்கள்

மேலே