தலைகேட்டான் தம்பி!

"பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என்
நாடுஇழந் ததனினும் நனிஇன் னாது" என
வாள்தந் தனனே, தலைஎனக்கு ஈயத்
தன்னிற் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்;
ஆடுமலி உவகையோடு வருவல்,
ஓடாப் பூட்கைநிற் கிழமையோன் கண்டே."
(புறநானூறு பாடல்கள் : 65 பாடியவர்: பெருந்தலைச்சாத்தனார்)

பொருள் விளக்கம் : பரிசிலன் = பரிசுபெறும் புலவர்
ஆடுமலி உவகை = வெற்றிகரமான மகிழ்ச்சி
ஓடாப்பூட்கை நின் கிழமையோன் = புறங்கொடாத உறுதியுடைய உன் தமையன்.

கரும்பெடுத்துத் தமிழ் பிழிந்து - மலரில்
சுரும்பெடுத்து வருகின்ற தேன் கலந்து
அரும்பெடுத்துச் சிரிக்கின்ற மகளிர் கூட்டம்,
"எறும்பெடுத்துச் செல்கின்ற உணவு கூட
எம்மன்னன் குமண வள்ளல் தந்த" தென்று
எழுச்சி நடை போடுகின்ற கொங்குநாடு.

தமிழ் பாடும் புலவரெல்லாம், குமணன்
புகழ்பாடி வந்திடுவார் -
இமிழ் கடலின் அலைபோலச் சொல் முழங்கும்.
அமிழ்தமெனும் தமிழ்மொழியின் பண் முழங்கும்.
கமழ்கின்ற கவிதை மலர்த் தோட்டம் - அன்பு
தவழ்கின்ற நெஞ்சத்தின் கூட்டம்.

முத்திரைத் தமிழால் கவிதை யாத்திடும் புலவர் - பெருஞ்
சித்திரனார் என்றொருவர் - பேரறிஞர்
பத்தரை மாற்றுத் தங்கம்போல் பத்தினி -
புத்திரச் செல்வம் - புலவரையீன்ற வயிறு - அவர்
இத்தரையில் கண்ட சுகம் வறுமையே என்று
மெத்த இளைத்திட்டார் - நித்த நித்தம் பட்டினியால்!
பூப்போல வாடி வதங்கிடுவாள் துணைவி;
புழுப்போலச் சுருண்டு படுத்திடுவாள் அன்னை;
பூனைபோலப் பானை உருட்டிடுவான் பசியாலே பிள்ளை;
கைபிசைந்து நின்றிருந்த கவிஞருக்குக் கொடையாலே
கை சிவந்த குமண வள்ளல் நினைவுவரக், கிளம்பிவிட்டார்!

" பாரிக்கும் காரிக்கும் பின்னர் கொடை வழங்க
யாரிருப்பார் என நினைத்த நினைப்பறுத்து,
வாரிக்கொள் நான் வழங்குகின்ற செல்வத்தை!
மாரிக்குப் பெயர்தான் குமணனென்று மார்தட்டும் கொங்கு மன்னா!
கோரிக்கை யொன்றுமக்கு! என் குடும்பம் வாழ்வதற்குப் பொன் வேண்டும்"
எனக் கேட்டார்! அள்ளித் தந்தான்! "நான்
வருகின்ற பாதையிலே வாழ்கின்றான் வெளிமான் என்று - அவன்
தருகின்ற பொருள் வாங்க நடந்து சென்றேன்; அந்தோ மன்னா!
அவனிறந்து ஆண்டொன்று ஆனதாலே - அவன் தம்பி
இளவெளிமான் இருக்கின்றான் - கொடை வழங்க மறுக்கின்றான்.
கொடிய பதில் உரைக்கின்றான்.
வளங் கொட்டும் முதிரமலை ஆள்கின்ற காவலனே!
தரங் கெட்ட இளவெளிமான் தருக்கடக்க
ஆனை ஒன்று தரவேண்டும் - அதனை அவன்றன்
காவல் மரத்தில் கட்டி வைத்துக்
கடையனவன் தலைகுனியச் செய்ய வேண்டும்; தருவீர்" என்றார். தந்து விட்டான்.
வீர வெளிமானுக்கொரு தம்பி இளவெளிமான் போல்
வேந்தன் குமணனுக்குமுண்டு ; இளங்குமணன் அவன் வேர்.
"அணிமணிகள் ஆனை சேனை அரண்மனைகள் அத்தனையும்; அள்ளி அள்ளிக்
கவிமணிகள் வாழ்வதற்கே தந்து விட்டால்...
துணிமணியும் இல்லாத ஆண்டி மடம் ஆகிவிடும் நமது நாடு -
இனியுமிதை அனுமதிக்க முடியாதண்ணா!
இப்போதே பிரித்திடுக என் பாகம்" என்றான்.

"கனிகள் உதிர் முதிரமலைத் தருக்கள் கண்டேன் - செங்
காய்கள் உதிர் தம்பியுந்தன் வாயுங் கண்டேன்!
அணிமணிகள் எவை வேண்டும் உனக்கு? அரண்மனையில் எது வேண்டும்?
ஆனையென்ன, சேனையென்ன? அனைத்தையுமே எடுத்துக் கொள்!
அண்ணனுக்குத் தம்பியென்ற அன்பை மட்டும் கொடுத்துவிடு" எனச் சொல்லி
அழுதுவிட்டான் குமண வள்ளல் ... தம்பி நெஞ்சில்
விழுது விட்டு வளர்கின்ற பகை உணர்வோ அடங்கவில்லை!
பழுதுபட்டு போய்விட்ட உள்ளங் கொண்டோன் - "வானில்
உழுது விட்டுப் போன செங்கதிரோன் திரும்புமுன்னே - என் நாட்டைத்
தொழுது விட்டுக் காடேகு" என ஆணையிட்டான்; குமணன் சென்று விட்டான்!
மானினமும் தேன்சிட்டும் மயில் குயில் மாடப்புறாவும்
மனித இனம் காட்டுகின்ற அன்பைவிடத் தூய அன்பை
மன்னனிடம் காட்டியதால் மகிழ்ந்திருந்தான் - காட்டில்
கன்னல் மொழித் தமிழ் வழங்கப் புலவரில்லை; நீங்கா
இன்னல் அஃதொன்றே - வேறில்லை!

கொழுந்து விட்ட துரோகத்தின் விளைவாகக்
கவர்ந்து விட்டான் செங்கோலைத் தன் கையில் - தம்பி!
மகிழ்ந்தானா அந்த மட்டில்? மனத்தில்
அழுந்திவிட்ட பகையுணர்வைக் கிளறிவிட்டார் கொடிய நண்பர்.

"பொறுத்திருந்தேன் இதுநாள் மட்டும் - என்மேல்
போர்தொடுக்க முனைந்து விட்டான் அண்ணன்.
தடுத்திடாதீர்; தம்பியென்னை; அண்ணன் தலை
அறுத்தெடுத்து வருபவர்க்குப் பத்தாயிரம் பொன் பரிசே!" என்றான்.

"தலை யறுப்பதோ? என்ன
குலை யறுக்கும் செய்தி இது!
அலை யடிக்கும் கடல்வெல்லும் பரந்த உள்ளம் - தமிழ்க்
கலை வடிக்கும் புலவர்க்கெல்லாம் கொடை நீருற்று;
முதிரமலை கரைந்து விடும் - முடிமன்னன் தலைகொய்தால் - எம்
உதிரமெலாம் உறைந்து விடும்" எனச் சொல்லிக்
காரி உழிந்தனர் காவலன் காட்டிய பொற்கிழியை!

கோத்திடும் தமிழ்மலர் கொற்றவன் தோளில்
சேர்த்திடும் நினைவுடன் புலவர் வந்தார் -
சாத்தனார் அவர் பெயர் - குமணன்
காட்டினில் இருப்பதை அறிந்து கவன்றார்
பாலையில் சோலையைக் கண்டது போலும்
மாலையில் தென்றலை மணந்தது போலும்
காலையில் கவிஞரைக் கண்டான் குமணன்,
ஓலையில் தமிழை உண்டான் மிகவே!

"அந்தநாள் வந்திலை அருங்கவிப் புலவோய்!
இந்தநாள் வந்து நீ, நொந்தெனை அடைந்தாய்.
தலைதனைக் கொண்டு போய்த் தம்பிகைக் கொடுத்து
விலைதனைப் பெற்றுன் வறுமை நோய் களையே!"
என்றான் குமணன் எடுத்தான் வாளை!

தடுத்தார் புலவர் விடுத்தார் அடவி!
"அடுத்தார் பேச்சால் அழிந்த தம்பி
எங்கே?" என்றார் தொடுத்தார் கணைகள்!

"தம்பியுடையான் படைக்கஞ்சான் என்றிருந்தான் அண்ணன்
நம்பியவன் கழுத்தறுத்தாய்; தலையறுத்துத் தருபவர்க்குப்
பொன்பரிசு தருவதாக வாக்களித்தாய்; அவன்
தலையறுத்த வாள் இதுதான்
தந்திடுவாய் பரிசை" என்றார். அண்ணனின்
வாள் கண்டான்; வாள்முனையில் செங்குருதி தனைக் கண்டான்.
"வீழ்ந்தாயோ அண்ணா!" என்று வீறிட்டு அலறிவிட்டான்,
விஷஉள்ளம் - வெறி உள்ளம் - அண்ணன் உயிர்தந்த செய்தியாலே
வெடிவைத்த மலைபோலச் சிதறிற்று!
வெள்ளையுள்ளம் தம்பியுள்ளம் வாய்விட்டுக் கதறிற்று!
"ஆவி தர நேரிடினும் அருந்தமிழ்க்கே தருவேனென்று
காவியுடைக் குமணனவன் கானகத்தில் உரைத்திட்ட பொன்மொழியைப்
பாவி நீ புரிந்திட்ட பாதகத்தால் யான் கற்றேன்,
தாவி நீ ஓடிச் சென்று அன்னவனின் தாள்பணிந்தால்
தமையன் உயிரல்ல; தமிழுக்கே உயிர் வந்து விடும்!
தயங்காமல் வந்து விடு; தடவிப்பார் வாள்முனையை
இரத்தமல்ல; செவ்வண்ணம்" என்றுரைத்தார்.

ஏன் நிற்பான் இளங்குமணன்?
தேன் விற்பார் தமைச் சுற்றும் ஈக்கள் போல்
வான் தமிழால் கவிதை பின்னும் புலவர் கூட்டம்
வட்டமிடும் குமண மன்னன் காலடியில்
வணங்கி வீழ்ந்தான் - வள்ளல் தழுவிக் கொண்டான்!
தமிழ்ச் சாத்தனார்க்குத் தலையைக் கொடையாய்த் தரச் சம்மதித்தோன்;

தம்பிக்கும் ஒரு மன்னிப்பைக் கொடையாய்த் தந்தான்.
தம்பி, குடையைத் தந்தான்
தனக்கினி வேண்டாமென்று ; அதனை அண்ணன்
தமிழுக் கீந்தான்!


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 7:14 pm)
பார்வை : 765


பிரபல கவிஞர்கள்

மேலே