பெண்மை

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்.

அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்.

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்.

பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை!
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா.

சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,
ஓத்தி யல்வதொர் பாட்டும் குழல்கழும்
ஊர்வி யக்கக் களித்துநின் றாடுவோம்.

உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே.

'போற்றி தாய்' என்று தோழ் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே.

'போற்றி தாய்' என்று தாளங்கள் கொட்டடா!
'போற்றி தாய்'என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே.

அன்ன மூட்டிய தெய்வ மணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 11:52 am)
பார்வை : 46


பிரபல கவிஞர்கள்

மேலே