ரஜினிக்கு வித்தகக் கவிஞர் பா.விஜய் கவிதை

மீண்டு வா… மீண்டும் வா…

கால் நூற்றாண்டு காலம் தமிழ் தேசத்தின்
கருவறை குழந்தை வரை
உயிர் பூத்து உச்சரித்த பெயர்
ரஜினிகாந்த்!

ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரம்
சலூன் கடைகளில் துவங்கி
சட்டசபை வரைக்கும்
அசைத்து பார்த்த மந்திரம்!

இருநூறு கோடி ரூபாய் வியாபாரம்
எட்டுகோடி தமிழர்களின் ரசனை
இரண்டையும் ஏமாற்றாத
ஒரே ரஜினி!

சூரியன் – இலை
இரண்டுக்கும் அருகே இருந்தும்
இலையில் சாப்பாடு உண்டதில்லை ரஜினி
சூரிய குளியல் கொண்டதில்லை ரஜினி!

ரஜினிகாந்த் மட்டும்
ஒரு முடிவெடுத்திருந்தால்
தமிழக அரசியல் கொஞ்சம்
தடம் பெயர்ந்திருக்கும்..
ஜார்ஜ் கோட்டைக்கு – அவர் பெயர்
இடம் பெயர்ந்திருக்கும்!

புகழின் உச்சி அவரை
கைநீட்டி அழைத்தபோதும்
அமைதி பள்ளத்தாக்கில்தான்
அடைக்கலம் புகுந்தது
அந்த காந்தக்காற்று!

சாம்ராஜ்யம் அவருக்கு காத்திருந்தது
ஆனால்
சன்யாசம் அவருக்குள் பூத்திருந்தது

வானமே அவரின்
உயரம் என்ற கட்டத்தில்
தியானமே அவருள்
தேடல் என்றானது.

இந்திய நடிகர்களிலேயே
நடிகர் எனும்
உருவத்தால் ஏற்படும் பிம்பத்தை
உடைத்து நடந்தவர் ரஜினிதான்!
எவரெஸ்ட் அளவுக்கு
வெற்றிகள் உயர்ந்த போது
அதைவிட உயர்ந்து நின்றது
அவர் எளிமை!

கலை தேவதை உழைத்த எல்லோருக்கும்
பூங்கொத்து கொடுத்தாள்
ரஜினிக்கு மட்டும்தான்
தன் சொத்தையே கொடுத்தாள்!

கடவுளுக்கு மூச்சுத் திணறலா என்ற
கண்மூடி ரசிகர்கள் முதல்
அவரொரு யோகி என்ற
அறிவுசால் நண்பர்கள் வரை
ரஜினி ஒரு ஸ்ரீசக்கரம்!

சினிமா என்னும் தீக்குச்சியில்
ரஜினி என்ற
மனிதனுக்கு மட்டுமே தெரிந்தது
மகாதீபம் ஏற்றும் ரகசியம்!

வெள்ளை தாடி
வரண்ட கேசம்
உலர்ந்த சிரிப்பு
பற்றற்ற மனோநிலை
ஒரு சூப்பர் ஸ்டார் என்றால்
2200ல் எவரும் நம்ப மாட்டார்கள்!

ரஜினி மீண்டும்
பழையபடி வரவேண்டும்
அவர் நடிப்பதற்காக மட்டுமல்ல
அவர் எளிமையை இளைஞர்கள்
படிப்பதற்காகவும்தான்!

ரஜினி எனும் தூய மனிதா
மீண்டு வா
மீண்டும் வா!

உழைப்பின் மூலம்
உச்சம் தொடலாம்
நீயே எடுத்துக்காட்டு

இப்பிறவிக்குள்ளே
இன்னொரு பிறவியை
நீயும் எடுத்து காட்டு!


கவிஞர் : பா.விஜய்(3-Feb-12, 3:51 pm)
பார்வை : 105


மேலே