பிரசவம்

நட்புக்களே ! ஒரு பெண்ணிற்கு பிரசவம் என்பது மறு பிறவி என்பார்கள்.....அந்த பிரசவ நேரத்தில் ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை , என் அனுபவத்தை கொண்டு கட்டுரை வடிவில் இங்கே பகிர்கிறேன்..........

அழகாய்தான் விடிந்தது அன்றைய பொழுதும் ......கருப்பையில் எட்டி உதைத்து விளையாடும் என் சிசுவை தடவிப்பார்த்தபடி! திடீரென புலன்களால் வெளிப்படுத்த இயலாத ஒரு வலி எனை சுண்டி இழுக்க......
முதுகுத்தண்டின் வடம் பிடித்து மூளைகேரிய அந்த வலி.......
இது கருப்பையில் உள்ள சிசுவின் திரும்புதல் முயற்சியின் எதிர்வினை என்பதை உணர்த்தியது!

கடல் நீரில் மூழ்கி வெளிவரக் காத்திருக்கும் சிப்பிக்குள் முத்துபோல ...
என் கர்பத்தின் உதிரத்தில் மூழ்கி வெளிவரக்காத்திருக்கும் என் சொத்தோ இவள்/வன் ? என்று நான் எண்ணிய வேளை......என் எண்ண அதிர்வுகளை புரிந்தவளாய்/னாய்......பனிக்குடம் உடைத்து நீரை வெளியேற்றி சொல்லாமல் சொன்னாள்/ன் ...
"அம்மா நான் உனைக் காண புறப்பட்டுவிட்டேன் பூமியை நோக்கி " என்று!
அதை அறிந்து என் இதயம் பூரித்த நொடியில் .....மீண்டும் தாக்கிய வலி, என் உயிரையே கயிறு கட்டி இழுத்து நொறுக்குவது போல உணர்ந்தேன்!

எனக்கெதிரே சுவற்றில் தொங்கியபடி இருந்த விநாயகர் படம் கண்ணில் தெரிய....இறைவா! ஓர் உடலில் ஈருயிர் சுமக்கும் பாக்கியம் தந்தாய் பெண்மைக்கு மட்டும். அந்த பெண்மையாய் நான் இருப்பதில் மகிழ்கிறேன்.....என்னுயிர் கொண்டேனும் மறு உயிர் நலாமாய் ஜனிக்க அருள்வாயே ! என வேண்டிய தருணம்.........

சிசு எனை உதைத்தபடி உள்ளே வட்டமடித்து சுழன்று திரும்ப .....என் உயிர் நாடியில் வலியின் வன்முறை! மணிக்கொருமுறை ....அறை மணிக்கொருமுறை என்பது மாறி ......நிமிடத்திற்கு ஒரு முறை என வலி......இடுப்புக்கும் .. உச்சிக்குமாய் ராக்கெட் வேகத்தில் சென்று வர.....
மூச்சு திணறி , கண்கள் கலங்கி, இதயம் படபடக்க, கைகள் இறுக்கி, பற்களை கடித்து வலி பொறுக்க நான் முயற்சிக்க.....ஒரு கணம் என் தாயை நினைவு கூர்ந்தேன்....அம்மா நீயும் இத்துனை வலியும் வேதனையும் கண்டு தான் எனை ஈன்றாயோ? ஐயகோ இது அறியாமல் எத்துனை முறை உன்னை மனம் கலங்கச் செய்திருப்பேன் என்னை மன்னித்துவிடு ....என்று எண்ணிக்கொண்டிருக்க.....வலியின் உச்சம் அறிந்தேன்!

தன் தலையால் முட்டி முட்டி வெளிவர முயற்சிக்கும் சிசு.....மேல் நோக்கி நகரும் சிசுவை கீழ்நோக்கி நகர்த்த என் பலம் கொண்டு முயற்சிக்கும் நான்! இப்படியே நேரம் நள்ளிரவை நெருங்க......என் சுவாசத்தை பலமாய் உள்ளிழுத்து நாபிக்கமலம் வழி கர்பத்தில் செலுத்தி சிசுவை வெளித்தள்ள ....அடுத்த கணம்..... ரத்தமும் சதையுமாய்.......தலை கை கால் என வழுக்கிக்கொண்டு வெளி வந்து மூச்சு விட்டாள், தொப்புள் கொடி பிடித்தபடி என் மகள்!

ஒரே நேரத்தில் சுனாமியும் ,பூகம்பமும், சூறாவளியும் தாக்கிய பூமியில்.....அவை ஓய்ந்த பின் வரும் ஒரு அமைதி .... எனக்குள் நிலவ.....ஒரு கணம் கண் மூடி... கை கால்களுடன் , உடலும் உயிரும் தளர்த்தி ..... என்னுள் ஆழமாய் உள்ளடக்கிய பெரு மூச்சை என்னிலிருந்து மெதுவாய் வெளிவிட்டேன்! சிசுவின் பின்சு விரல்கள் எனைத்தீண்ட .... அவள் ரோஜாவண்ண நெற்றியில் உச்சி முகர்ந்தேன்.....!

இப்போது என் கணவர் முகம் தேடினேன்..".நம் அன்பின் அடையாளமாய் ஒரு உயிர் நமக்காய்! என் உதிரத்தில் வார்த்து உயிரில் செதுக்கித் தந்துள்ளேன்"! என்று கூற....
அப்போது ...ஊரெங்கும் பட்டாசுகளும் வான வேடிக்கைகளும் வெடிக்க ... உலகமே இனிப்புக்களும் , வாழ்த்துக்களும் பரிமாற ....
அந்தக்கணம் சிசுவாய் பிறந்தது என் மகள் மட்டுமல்ல.....புத்தாண்டும் தான் ! என்பதறிந்து மகிழ்ச்சியில் திளைத்தேன் !

எழுதியவர் : வெண்ணிலா (8-Jan-13, 4:51 pm)
Tanglish : pirasavam
பார்வை : 201

மேலே