பரதேசி சொன்ன தத்துவம்
நாகரீகம் ததும்பும்
நகரத்து வீதிகளில்
வாழும் ஆசையோடு
மண்ணுலகின் ஓர் மைந்தன் ..!
அண்ணார்ந்து பார்க்கும் மாளிகையின்
உச்சத்திலே நின்று கொண்டு
அகலத்திறந்த பாவை என் விழிகள்
அந் நரனையே நோக்கியபடி ..!
பார்த்தே மயங்கும்
பல காட்சி நடுவினிலே
பாதையில் தெரிந்தவனோ
இவள் பார்வைக்குப் பிறழ்வாய் ..!
தாடிக்குள் புதைந்த முகம்
சுருண்டு வளர்ந்த சடை
அகவை அறுபதை
அப்படியே மறைத்துவிட ..!
நீரறியா மேனியும்
அழுக்கினால் நெய்த ஆடையும்
அவன் அடையாளத்தையும்
சேர்த்தே தொலைத்திருந்தது ..!
அத்தனையும் தொலைந்த போதும்
இன்னும் தொலையாத அவன் ஆசைகளை
என் சிந்தைக்கு உணர்த்துவதாய்
தோளில் சுமந்த அவன் மூட்டை ..!
இது மானிடன் அவன்
பாவச்சுமையோ
சில கணம்
சிந்திக்கிறது என் உள்ளம் ..!
வருடங்கள் பலவாய்
பரதேசி வாழ்விற்கு
பழக்கப்பட்டதாய்
அவன் செய்கைகள் ..!
கல்லெறிந்து சிரிப்போரையும்
காறி உமிழ்ந்து ரசிப்போரையும்
துச்சமென நினைத்து சாலையில்
நீள்கிறது அவன் பயணம் ..!
இன்னல் கண்டு
இடிந்து போகும் உள்ளங்களுக்காய்
மாபெரும் செய்தியை விட்டபடி
மானுடன் அவன் தொடர்கிறான் ..!
பார்த்திருந்த என் விழிகளோ
பாதை விட்டு மாறாமல்
அங்கேயே லயித்தன
அவன் தூரம் சென்று மறையும் வரை ..!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
