தொலைந்து போகிறேன்...!
கோவிலில் பஜனையும், பாடல்களும் கேட்கவில்லை
ஆலய மணியும் என் காதில் ஒலிக்கவி்ல்லை
புள்ளினங்களின் கீச்சொலிகளும் கேட்கவில்லை
அலைபேசி ஒலியும் எனக்கு கேட்கவில்லை...!
மலர்களின் நறுமணமும் நுகரவில்லை
மண்வாசனையும் நான் அறியவில்லை
மழைத்துளியின் இனிமையும் தெரியவில்லை
சூரியனின் அனலும் என் மேல் படவில்லை...!
உணவும் எனக்கு சுவைக்கவில்லை
தென்றலும் என் அருகில் வரவில்லை
கோபமும் என்னை துரத்தவில்லை
கண்களும் கண்ணீரை சிந்தவில்லை...!
தொலைந்து போக தான் நினைத்தேன்
தொலைதூரமே தெரிந்ததெனக்கு
தொலையும் தூரத்திற்காய்
காத்திருந்தேன்....!
நான் தொலையும் தூரமும்
என் அருகில் வந்தது
அமைதியான நந்தவனத்திற்குள்
தொலைந்து போகிறேன் நான்...!
“மௌனம்” என்னும் கருவறைக்குள்
மீண்டும் தொலைந்து போகிறேன்
மௌனம் கலையும் காலம் வரை
இன்னல்கள் என்னை தீண்டாது...!
புதிராய் வந்தேன் நான்
புதிராகவே தொலைந்தும் போகிறேன்
மௌனம் கலையும் போது என் உயிர்
இந்த உடலை விட்டு பிரிந்திருக்கும்...!