இலக்கணமில்லா இலக்கணம்.

"வலிமிகும்" வாழ்க்கையில்
"வலிமிகா" விதி
"புணர்ச்சி" புரியாதோ.?
.....................................................
"சீர்" மிகும் வாழ்வைப் பெற
"அசை" போடும் ஆசைகளில்
"தளை(லை)" தட்டுவது எது.?
..........................................................
"மோனை"யாகவே நான்
"எதுகை" எதிர்ப்படவே இல்லை-பிறகு
"சந்தம்" எப்படி சொந்தமாகும்.?
...........................................................
"குறிலா"கவே கூவுகிறேன்
"நெடிலா"ன வாழ்க்கைப் பாவில்
"மாத்திரைகள்" அளவு தெரியவில்லை.!
..........................................................................
"வல்லினமா"கவே பொழுது போகிறது
"மெல்லினமா"க ஒரு சுகம்
"இடையினமா"க வாராதோ.?
.........................................................................
"எச்சமாய்" போன எண்ணங்களாலே
"தொடுப்பு" இயலாமை தோற்றங்களில்
"அடுக்குத் தொடரான" தோல்விகளில்
"இரட்டைக் கிளவியாய்" உலகம் நகைக்கிறது.!
...................................................................................
"செய் வினைக"ளால் ஆன
"செயற்பாட்டு வினை"கள் தாம் எல்லாம்
"முற்று" என்பது இல்லாமல் போகுமோ.?
..................................................................................
"மெய்"யில் தான் "உயிரும்" உள்ளது
"உயிர் மெய்" ஆவது ஒன்னுமோ.?
...............................................................................
இலக்கணமே இல்லாமல்
இலக்கணம் பேசுகிறது
இதுவும்
"இலக்கணப் போலி"யோ.?
என்னைப் போல.....!!!!
...........................................................................

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (11-Jan-13, 7:53 am)
பார்வை : 485

மேலே