கனகா...!!!
நான் கனவிலும் கூட நினைக்கவில்லை; இத்தனை வருடங்கள் கழித்து உன்னை இப்படி ஒரு தருணத்தில் அதுவும் இந்த உறவுமுறையில் சந்திப்பேன் என்று.
நான் உணர்ந்துகொண்டேன் என்னைக் கண்டதும் நீ அப்படியே ஒரு பத்து விநாடிகள் ஏதும் புரியாதவளாய் அப்படியே நின்றுகொண்டாய்.
ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன் நீ என்னை இன்று கூட மறக்கவில்லை. சுருங்கிப்போன என் முகத்தோல், முகத்தை மறைக்கும் அளவுக்கு முடி, அத்தனையும்தாண்டி பார்த்த மருகணமே நீ என்னை அறிந்துகொண்டாய். உனக்கென்ன அப்படியே இருக்கிறாய் ஓரிரு நரைமுடி அவ்வளவு தான்.
இருபத்தெட்டு வருடங்கள் முன்பு; எனக்கு நீ, உனக்கு நான் அற்புதமான காலப்பொழுது, நாங்கள் இருவரும் சந்தித்து பேசிக்கொண்ட புளியமர மறைவு. எங்கள் கடைசிச்சந்திப்பும் அந்த மர
மறைவிலேயே நடந்தது. நீ என் கைபிடித்த முதன்னாளும் கடைசி நாளும் அதுதான், என் கைபிடித்து நீ சொன்ன வார்த்தைகள்...
"ரவி என்னைக் கைவிட்டுடாதீங்க, நீங்க இல்லைனா நா செத்துடுவேன், எத்தனை வருசமெண்டாலும் உங்களுக்காய் நீங்க வரும்வரை காத்திருப்பேன்.."
மறுநாள் காலை நான் வெளியூர் பயணப்படப்போகிறேன் அதற்க்காகத்
தான் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. உன் கண்ணீரைப்பார்த்த முதன்னாள் அது மறக்கமாட்டேன்.
விமானத்தினுள் ஆயிரம் கேள்விகளுக்கான விடைகளை சிந்தித்தபடி காத்திருந்தேன்; திருமண வயதில் என் தங்கை, பல்கலைக்கழகத்தில் என் தம்பி, வாழ்வாதாரம் போதாமல் என் அக்கா குடும்பம், குடும்பத்துக்காக உழைத்து வலுவிழந்து போன என் அப்பா, என் குடும்பமும் ஓர் நாள் வாழும் என்ற நம்பிக்கையில் என் அம்மா, அத்தனையும் தாண்டி எனக்காக காத்திருக்கும் நீ...
வெளியூர் சென்றடைந்ததும் என் வீட்டுக்கு காகிதம் போட முதல் உன் விடுதி முகவரிக்கு எழுதியவன் நான்.. காகிதத்தில் ஓடியது இரண்டு வருடங்கள், திடீரென ஒருநாள் எல்லாம் முற்றாக தலைகீழாக மாறியது; அதுதான் நீ எனக்கு எழுதிய கடைசிக்காகிதம்... இன்னும் என் கண்களுக்குள் படம்பிடித்தாற்போல் அப்படியே நிற்கிறது அந்த வரிகள்....
" என்னை மன்னித்துவிடுங்கள் ரவி!! எல்லாம் கைமீறிப் போய்விட்டது,
என்னால் தடைப்பட்டுக்கொண்டிருக்கும் என் தங்கையின் திருமணம், என்னைப்பார்த்து முகம்வாடும் என் அப்பா, குடும்ப நிலையையை அடிக்கடி எனக்குச் சொல்லி அழும் என் அம்மா, பெருமூச்சு விட்டபடி படுக்கைக்குப் போகும் என் அண்ணன். அத்தனைபேரின் ஆதங்கங்களுக்கும் ஒரே விடை என் திருமணம்..
உங்களை கேட்க முடியாது உங்கள் குடும்ப நிலை நானறிவேன், நான் முடிவெடுத்துவிட்டேன் என் விதி இது தான் என்றால் அப்படியே நடக்கட்டும்..
இன்னும் இரண்டு வாரத்தில் என் கழுத்தில் தாலி ஏறிவிடும். உங்களுடன் சேர்ந்து வாழும் பாக்கியம் எனக்கில்லை ரவி, என்னை மன்னித்துவிடுங்கள்...
இந்த காகிதத்தை பார்த்தவுடன் தயவுசெய்து பதில் எழுதும் முடிவுக்கு வந்து விடாதீர்கள்.
இப்படிக்கு நீங்கள் நேசிக்கும் நான். "
செத்தே போய்விட்டேன், நான்கு நாட்கள் ஏதும் புரியாதவனாய் இருந்தேன், ஊருக்கு ஓடிவந்து உன்னை மணந்து கொள்ளும் அளவுக்கு அந்த நேரத்தில் எனக்கு வலு இருக்கவில்லை, அமைதியாகிவிட்டேன். அன்று என் குடும்பத்துக்காக வாழத்தொடங்கியவன் தான் இன்னும் தேய்ந்து கொண்டிருக்கிறேன் என் குடும்பத்துக்காக....
இன்று என் அக்காவின் மூத்த மகனுக்கு திருமணம் அதற்காக தான் ஊருக்கு வந்தேன், ஆனால் அவன் மணக்கப்போவது என்னவளின் மகளை என்று எனக்குத்தெரியாது..!!
உன் மகளும் உன்னைப்போலவே இருக்கிறாள், மெல்லிய அடக்கமான புன்னகை, பொறுப்புணர்ந்த முகம்.. அம்மா நீயாயிற்றே...!!!
எனக்குத்தெரியும் உன் நிலைமை அது, உன் மீது கோபமில்லை, சின்ன வருத்தம் தான்.. உன்னை வாட்டுவதற்காக நான் முகத்தில் முடி வளர்க்கவில்லை, என்னை கண்ணாடியில் பார்க்கும் போது உன் நினைவு வரவேண்டும் என்பற்காகவே வளர்க்கிறேன்..
நீ எதிர்பார்த்திருக்க மாட்டாய் இன்றும் உனக்காக இருப்பேன் என்று; நீ சொன்ன வார்த்தைகள் அவை "எத்தனை வருடங்களானாலும் உங்களுக்காய் காத்திருப்பேன்" என, ஆனால் உன்னால் முடியவில்லை, என்னால் இன்னொருவரை மணக்க முடியவில்லை.
"பெண் திருமணம் செய்யாமல் இருந்தால் அது குடும்பத்துக்கு பாரம், ஆனால் ஆண் திருமணம் செய்யாமல் இருந்தால் அது குடும்பத்துக்கு
பணம்.."
இது தானே நம் நாட்டு வளமை.. போகட்டும் அத்தனையும் என்னோடே போகட்டும்..
என்னை நினைத்து நீ இனி வருந்தக்கூடும், வருந்தாதே எனச்சொல்லி உன்னைத் தேற்ற எனக்கு அதற்கான உறவுமில்லை உரிமையும் இல்லை.
போகிறேன்...!!! இனி ஒரு தடவை இப்படி ஒரு தருணம் வேண்டாம் என்று என் கடவுளை பிராத்தித்துக்கொண்டு மீண்டும் போகிறேன் தேய்வதற்கு....!!!