டிக்கெட்...!
அந்த காலை பரபரப்பில் நானும் பேருந்து நிறுத்தமும் கால் கடுக்க காத்திருந்தோம் அவளின் வருகைக்காக..இதோ.. தெருமுனையில் வந்து கொண்டே இருக்கிறாள்
காற்றில் பறக்கும் கேசங்களை கைகொண்டு சரி செய்த படி....
அவள் நெருங்க நெருங்க ஏன் என் இதய துடிப்பு அதிகரிக்க வேண்டும் என்பதுதான் இப்போது கேள்வி என்று கொண்டாலும் அதற்கு பின்னால் காதல் என்ற ஒன்று ஒளிந்து இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவளைக் கண்டும் காணாமலும் நான் நின்று கொண்டிருக்கிறேன்....
அட இவள் கை வீசி நடந்து வருகிறாளா..இல்லை காற்றிலே ஓவியம் செய்கிறாளா? மீண்டும் ஒரு குழப்பக்குளத்தில் நான் விழுந்து நீந்திக் கொண்டிருந்த வேளையில் பேருந்து நிறுத்தம் வந்து சேர்ந்தே விட்டாள் அவள்.
மொத்த ஆக்ஸிஜனும் அவளை மொய்த்துகொண்டு அவளின் சுவாசத்திற்கு உதவிக்கொண்டுதான் இருக்க வேண்டும்....ஆமாம் இல்லையென்றால் எனக்கு ஏன் மூச்சு முட்டுகிறது...தொண்டை அடைக்கிறது.
தூரத்தில் வந்த அவளை ஓரளவு பார்க்க தைரியமாயிருந்த கண்கள் பக்கத்தில் வந்தவுடன் அமெரிக்காவிற்கு பயந்து ஒளிந்த ஒசாமாவாய்.... அந்த பக்கம் திரும்பவே இல்லை...ஆமாம் கண்களை பார்த்தால் கண்டு பிடித்து விடுவாள் நான் காதல் திருடன் என்று...
சில நேரம் இந்த நகரப்பேருந்தின் மீது எனக்கு வரும் கோபம் ஆயிரம் சுனாமிக்கு சமம்...! ஊரில் உள்ள எல்லா இளைஞர்களும் அவளுக்கு காத்திருக்க அவளை காக்க வைக்கும் பேருந்துக்கு எவ்வளவு திமிர் இருக்கும்....அவள் கையிலிருக்கும் கடிகாரத்தை பார்க்கும் போது எல்லாம் அவளுக்கே தெரியாமல் அவளை பார்த்தேன்...அந்த கடிகாரமாயிருந்தால் கூட அடிக்கடி என்னை பார்ப்பாளே என்று நினைத்துக் கொண்டிருந்த சமயம் அந்த திமிர் பிடித்த பேருந்து ஊரையே கூட்டிக் கொண்டு மதயானையைப் போல பிளிறிக் கொண்டு அவளை காக்க வைத்த மமதையில் உறுமிக் கொண்டு நின்றது.
அவள் பாதங்களை சுமக்க வாய்ப்பு கிடைத்த பேருந்தின் படிக்கட்டுக்கள் என் பாதங்களை வெறுப்பாய் தாங்கி என்னையும் வேண்டா வெறுப்பாய் உள்ளே திணித்துக் கொண்ட கடுப்பில் கியர் மாறி சீறியது பேருந்து....!
அவள் நின்று கொண்டிருந்தாள்...இவள் அமரவில்லையென்று எல்லா இருக்கைகளும் சுமைதாங்கிகளாய் வேறு மனிதர்களை தாங்கி அழுது கொண்டிருந்தன.... நானோ....அவளின் உடைகளுக்குள் புகுந்து அட்டூழியம் செய்து கொண்டிருந்த காற்றினை கண்களால் எரித்துக் கொண்டிருந்தேன்...
"எம்மா எங்க போகணும்?" அவளிடம் டிக்கட் கேட்க எவ்வளவு துணிச்சல் இருக்கும் இந்த கண்டக்டருக்கு.... பெட்ரோல் எடுத்து வந்து பேருந்தை கொளுத்த எனக்குள் இருந்த தீவிரவாதி உத்தரவு இட...அதே நேரத்தில் உள்ளே இருந்த வேறு ஒரு அஹிம்சாவாதி அதை அடக்க... இரண்டும் சேர்ந்து பயம் என்ற உணர்வைக் கொடுக்க...கண்டக்டரை ஒரு கேவல பார்வை பார்த்துவிட்டு... என் தேவதை பயணம் செய்ய அவளுக்கு அல்லவா நீங்கள் தட்சணை கொடுக்க வேண்டும்...! ஏ உலகமே! அழகை நீ எப்போது ஆராதிக்கப் போகிறாய்......?
மனிதர்களுடம் கேளுங்கள்...
பயணத்திற்கான கட்டணத்தை...
தேவதைகளை ஆராதியுங்கள்...!
கவிதை ஒன்று சட்டென்று மனதிற்குள் தோன்றி மறைந்த அதே வேளையில்... அவளின் கடைக் கண்ணால் என்னைப் பார்த்தாள்.. நான் பார்வையின் வீச்சில் பற்றி எரிந்து கொண்டிருந்தேன்....! போதும் போதும் கடைக்கண் பார்வையே போதும் நீ முழுதாய் பார்த்தால் நான் பஸ்பமாகி விடுவேன்... என்று நினைத்து கொண்டிருந்த போதே... கண்டக்டரின் லாங்க் விசிலுக்கு பேருந்து அடிபணிந்து நின்றது....
அட...என்ன இது என் தேவதை இங்கே இறங்குகிறாள்....! இது க்யூன் மேரீஸ் காலேஜ் என்று என் கேள்விக்கு அருகில் நின்றவர் பதில் சொல்லி முடிக்கும் முன் தேவதை படிகளை கடந்து கீழே இறங்கி மீண்டும் காற்றில் மிதக்க ஆரம்பிக்க.. நானும் இதோ இறங்க..போக............அட யார் இவர்கள் என்னை இறங்க விடாமல் மேல தள்ளுவது.. 4 பேர் என்னை மறித்து ...டிக்கட் எங்க எடு என்றார்கள்.....
‘
‘
‘
கொஞ்சம் பிரெக் விட்டுக்கோங்க.. எல்லோரும்....
இது வரைக்கும் கவிதை நடையா வந்துச்சுல்ல மக்கா...இப்போ பாருங்க.. என்ன நடக்குதுன்னு………...
ஹலோ யாருங்க நீங்க....? கேள்விக்கு பதிலாய்.. நாங்க தான் செக்கிங்க் இன்ஸ்பெக்டர்....எங்க போறீங்க நீங்கனு கூட்டத்தில் ஒருவர் கேட்டர்.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அடையாறுங்க.. என்று சொன்னேன்..எங்க ஏறுன.. மீண்டும் கேள்வி! ஸ்டெர்லிங்க் ரோடு பக்கம்...என்று மெதுவாய் சொன்னென்...!
எல்லாம் சரிதான் தம்பி.. அதுக்கு இன்னாத்துக்கு....பாரிஸ் போற பஸ்ல ஏறினே....? செக்கிங்க் இன்ஸ்பெக்டரின் கேள்வியில் அதிர்ந்து போன நான்.. என்னது இந்த பஸ் அடையாறு போகலையாயாயா... ?????!!!!! சத்தமாய் கேட்டதை செக்கிங்க் இன்ஸ்பெக்டரின் பார்வை வால்யூமை குறைக்க வைத்தது...! திக்கித் திணறி...சார்... அவ... அந்த பொண்ணு ....அவ.. தேவதை..சத்தியமாய் உளறினேன்...
" ஹூ இஸ் செல்லாத்தா................" அப்டீன்ற ரேஞ்சுக்கு யாருய்யா தேவதை.....னு
செவுள்ள அறையிற மாதிரி சத்தம் கொடுத்தார் செக்கிங்கு....சரி சரி டிக்கட்ட எடுன்னு சொன்னாரு....! நாம எங்க டிக்கட் எடுத்தோம்...சரின்னு டிக்கட்டுக்குதான இவ்ளோ பில்டப்பு.. திமிரா பர்ஸ்ல இருந்து 10 ரூபாய் எடுத்து கொடுத்தேன்... ஒரு டிக்கட் கொடுங்க சார்னு சொன்னேன்...!
தம்பி..முன்னாடியே எடுத்திருந்த ஒரு டிக்கட்டு.. இப்படி சாகவாசமா எடுத்தா... 200 அப்டின்னு படபடன்னு சீட்டெழுதி கையில கொடுத்துட்டு காச எடுன்னு சொன்னதும்..தான் அட இது நிஜமாவே சீரியசா போகுதுன்னு...சுத்தி முத்தி பாத்தா எல்லோரும் என்னயவே பாக்குறானுவ...
அதுவும் கூட்டத்துல ஒருத்தர் " அவன அப்ப புடிச்சே பாத்துகிட்டுதான் சார் இருந்தேன்.. லூசு மாதிரி.. நின்னுகிட்டு ஏதேதோ பேசி சிரிச்சுகிட்டு இருந்தான்..." என் காதுல விழுகுற மாதிரியே சொன்னாரு.. அந்த அறிஞர்!
200 ரூபாய செக்கிங்கு கையில கொடுத்துப்புட்டு வேக வேகமா கீழ இறங்கிட்டேன்......
என் காலக்கிரகமா இது.. உச்சி வெயிலு மண்டைய பொளக்குது... அடையாறு போறவன் பீச்சோரமா அனல்ல காஞ்சு கிட்டு இருக்கேன்....ஏற்கனவே ஆபீசுல இருந்து போன் மேல போனு ....! இன்னிக்கு முக்கியமான அசைன்மெண்ட் சப்மிட் வேற பண்ணனும்... நல்லா இருக்கு பாட்டு.... போனதும்
ங்கொய்யாலா..கவித...பாட்டு... காதல்...
எனக்கு வேணும்! எனக்கு வேணும்...! அவ… பாட்டுக்கு வந்தா.. நின்னா.. போயே போய்ட்டா…!
இப்ப கையில் இருந்த காசும் போச்சு ...கத்தி கத்தி குரலும் போச்சு....சொக்கா.......சொக்கா....!
எனக்கு வேணும் எனக்கு வேணும்.... கொஞ்சம் சத்தமாவே புலம்பிட்டன் போல சார்.. கையில் இருக்க பத்து பைசாவ ஒரு நாதாறி போட்டுட்டு போகுது.. எல்லாம் தலை எழுத்து...
நீங்க ஏன் சார் என் கூட வெயில்ல நின்னுகிட்டு..போய் மத்த வேலைய பாருங்க....... நான் ஏதாச்சும் பஸ் புடிச்சி போயிக்கிறேன்...ஒரே ஒரு விசயம் சொல்லிக்கிறேன்....
" கவிதை கண்களோடு எதார்த்த சாலையில் பயணிக்காதீங்க.. சார்.....அடி பயங்கரமா விழும்...."
பஸ் வந்துருச்சு சார் அப்போ...வர்ர்ர்ட்ட்டாடாடா!