தாய்வழி எச்.ஐ.வி பாதித்த சிறுமி நான்...

அண்ணா... அக்கா...

மரணப்படுக்கையில்
இருக்கும்
என்
தாய் தந்தையை
நினைத்து
அழுவதா?
அல்லது
மயானம் நோக்கிச் செல்லும்
மனிதாபிமானம் கண்டு
அழுவதா?
தெரியவில்லை
எனக்கு...

"தீண்டாமை பாவம்"
என போதிக்கும்
ஆசிரியரும்
சற்று
விலகியே நிற்கிறார்...
எங்கே,
தெரியாமல்
என்னை
அவர்
தீண்டிவிடுவாரோ
என பயந்து...

இக்கிருமியை
அழிக்க
ஆய்வாளர்கள்
அல்லும் பகலும்
ஆராய்ந்து கொண்டிருக்கிறார்களாம்
மருந்தொன்று கண்டு பிடித்திட...

அவர்களிடம் போய்
முதலில்
கேட்பீர்களா? எனக்காக...
"மனிதம் வளர்க்க மருந்தேதும் உண்டா?" என்று...

ஒளிப்பதிவு வசதி
நவீன கைப்பேசி
வைத்திருக்கிறீர்கள்...
விரைவில்
மறைந்து போக
உள்ள
என் தாயை
படம் பிடிதுக்கொடுங்களேன்...

நான்
பூப்படைந்ததும்
முதலில்
சொல்வதற்கு
அவள்
நிழற்படம்
ஒன்றாவது
இருந்துவிட்டு
போகட்டும்...

இறைவனை
ஆராதித்த
தீபத்தை
ஒத்திக்கொள்ளக் கூட
அவ்வளவு
ஆசையில்லை...

உங்கள்
வீட்டு
மழலைகளின்
கன்னங்களை
வருடிட
ஆசையுண்டு...
அனுமதிப்பீர்களா?

நன்கு அறிவீர்கள் நீங்கள்...

தொட்டதும்
பரவிடும்
தொற்று நோய்
இது அல்ல...

அன்பு
முத்தம்
கொடுத்தால்
வந்து சேர்வதல்ல...

ஆரத்தழுவினாலும்
சேர்வதல்ல...

உணவைப் பகிர்வதாலும் இல்லை.
ஒன்றாய் படித்தாலும் இல்லை.

அறியாதவர்களிடம்
சற்று
முழக்கமிடுங்களேன்...
உங்கள்
அன்புத் தங்கைக்காக...

இக்கிருமியை
அழிக்க
மருந்தென்ன மருந்து?

உங்கள் அன்புக்கரம் நீட்டுங்கள்...
அது மறைந்து விடும் பாருங்கள்...

இறைவனின்
அன்பும்
எனக்கு
கிடைக்கவில்லை என்று
கோபித்திருந்தேன்...

பழகிய அண்ணா ஒருவர்
புரியாததை எதையோ
முனுமுனுத்துப்போனார்...

இறைவன்
முக்கிய வேலையாய்
தேவலோக
தேவதைகளின்
தேவையில்லாத
ரோமங்களை
நீக்கிக்கொன்டிருக்கிறாராம்...

முடிந்ததும் வந்துவிடுவாராம்.

காத்திருக்கிறேன்.....

எழுதியவர் : தமிழ்ச் செல்வன் (18-Jan-13, 12:18 am)
பார்வை : 346

மேலே