ஆச்சியோடு ஒருபொழுது....

பொங்கல் விடுமுறைக்கு
பூர்வீக கிராமத்துக்கு
அழைத்து வந்தார் அப்பா!

நீச்சல்குள வகுப்பும்
பாடப் பயிற்சி வகுப்புகளும்
இல்லாமல் முதன்முதலாக
துன்பத்தை உணர்ந்தேன்...

செல்லமாய்
முத்தம் கொடுத்த ஆச்சி
வாய்யா ராசான்னு
கூப்பிட்டாள்.....

மிரண்டு நின்றேன்
தூணோரம்....

வீட்டு முற்றத்தில்
சித்தி பொண்ணு
அத்தை பையன்
பக்கத்து வீட்டு சிறுவர்கள்!

எங்கள் வீட்டில்
கேரம் பலகையை சுற்றி
நாங்கள் இருப்பது போல
ஆச்சியைச் சுற்றி
அத்தனை பேர்களும்!

என்ன நடக்கிறது என
மிரட்சியோடு கண்கள்...

வஞ்சக வலையில்
வீழ்ந்த தேசம்...
வஞ்சினம் கொண்டு
இளவரசன் செய்த புரட்சி....

இடையிடையே அவன்
ஆயிரம் குகைகளில்
எதிரிகளை பந்தாடிய வீரம்...

சந்திர மண்டலத்தையும்
செவ்வாய் கிரகத்தையும்
ஊடுருவி
மீண்டு வந்த தீரம்....

ஒவ்வொன்றையும்
காட்சி வடிவமாய்
இசையோடு சொல்கிறாள்!

யோசிக்க வைக்க
இடையிடையே கேள்வி!

கற்பனை பெருக பெருக
குழவியில் இடிபடுகிறது
வெற்றிலை...!

நான் எந்த புத்தகத்திலும்
படிக்காத கதைகள்....
நான் எந்த தொலைக்காட்சியிலும்
பார்க்காத காட்சிகள்...
நான் எந்த ஆசிரியரிடமும்
கேட்காத பாடங்கள்......

ஒருசேர கிடைக்கிறது
ஆச்சியின்
வெற்றிலை இடி ஓசைக்குள்ளே!

எல்லா குழந்தைகளையும் போல்
கதை கேட்கும் ஆசையில்
பக்கத்தில் போனேன்!

என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு
ஆச்சி சொன்னாள்!

இதோ வந்து விட்டான் இளவரசன்!
அடிமை நாட்டை மீட்டு
அரச பதவியோடு
தாய் நாட்டு கொடிதூக்கி
வெற்றி வீரனாய் வந்து விட்டான்
நம் இளவரசன்!

எங்கள் பாடசாலையில்
எந்த ஆசிரியரும்
இப்படி இல்லையே
என்ற ஏக்கம் உடனே வந்தது!!!

எழுதியவர் : க. கார்த்தீசன் (19-Jan-13, 9:37 pm)
பார்வை : 133

மேலே