ராஜி

'பதினேழு பதினெட்டு வருடத்திற்கு அப்புறம்கூட அவள்தான் என்று அனுமானிக்க இடம் தந்தது அவளுடைய பற்கள் தான்.
மேற்பக்கம் நடுவில் நான்கு பற்களும் பஸ் ஸ்டாண்டில் அல்லது கல்யாண வீட்டில் நாலு பேர் நின்று பேசிக் கொண்டிருப்பது போல திரும்பி இருக்கும்.'

அலங்கார உலகின் வர்ண விளக்குகள் போன்றதல்லாமல் அன்றாட வாழ்வின் அவசர தருணமொன்றில் இயல்பாக நாம் கண்டடையக் கூடிய ஒரு ரசனையில் ஒரு சரம் (சாரம்) இவ் உவமை!

ஆண்டுகள் பல கடந்தும் நண்பனின் தங்கையாக அவளை அடையாளப்படுத்துகிறது துருத்திய பற்களுடனான மேவாயும் அவள் பூஞ்ஜையான உடல்வாகும்.
அவள் தோற்றம் பற்றியே அவளுடைய உலகை நிர்மாணித்து விட்டனர் குடும்பத்தினரும் சுற்றமும், இருந்தும் அதையனைத்தையும் இலட்சியம் செய்யாமல் தன்முனைப்புடன் இயங்கும் ஒருத்தி.

ராஜி!

குடும்பத்தில் மூன்று சகோதரர்களில் இளையவள். மனதில் அவளுக்கு தன்னை யாரும் கவனிக்கவில்லை என்ற கவலை.

இருந்தும் தன்னையுணர்ந்து கொள்ளும் ஒருவரை ஒரு பெண் இலகுவில் கண்டுணர்ந்து கொள்கிறாள். தன் திறன் யாருடன் பகிரப்பட வேண்டும் எனவும் தீர்மானித்து விடுகிறாள்.

இக்கட்டான சூழ்நிலையில் ஏற்படும் சங்கடத்தைக் கூட யாருக்கும் பாதகம் ஏற்படாதவாறு கையாண்டு, அதனை நிதானத்துடன் அணுகும் ஒருவரிடம் ஒப்பித்துவிடுகிறாள்.

'நீங்களாவது என்றைக்கும் ஒரே மாதிரி இருக்கணும்!'
என்று சுருக்கமாக அவள் ஒப்பித்துவிடும் இறுதி வார்த்தைகள்; வாழ்வில் அவள் கண்டும் கடந்தும் வந்த மனிதர்கள் பற்றிய சித்திரத்தின் துல்லியம்!

அன்றாட வாழ்விலும் நாம் வாழும் சூழலிலும் அனேகமாக நம் வீட்டிலும் கூட கண்டு விடக் கூடிய உண்மையான தருணங்களின் சித்திரம் இக்கதை!

அடர்ஆழ் கருநீலக்கடலில் முகிழ்ந்த முத்தொன்று கணத்தில் மேலெழுந்து மொட்டவிழ்ந்து மலர்வதைப் போல, தொகுப்பான கதைகள் அனைத்திலிருந்தும் மேலெழுந்து நிற்கின்றது மனதில்.

'அப்பால் ஆன... ' என்ற இக்கதை

எம்வாழ்நாளில், எம் குடும்பத்திலும் கூட உருவம் பற்றிய கேலிகளால் நாம் அறிந்தும் அறியாமலும் பலரைக் காயப்படுத்தியிருப்போம். இதற்கு வயது வேறுபாடில்லை; நம் குடும்பத்தில் வயதில் மூத்தோர் கூட இத்தவறைச் செய்வதை தடுக்க முடியாமல் தயங்கி நின்றிருப்போம். அத்தகைய தருணங்களில் சங்கடத்தால் குறுகும் ஓர் பேதை உள்ளத்தின் பெருந்தன்மையை உணர்த்துவதாக இருந்தது இக்கதை.

அழுத்திப் பாடமெடுக்கவில்லை அர்த்தத்திற்கும் அர்த்தமின்மைக்குமான ஒரு கண்டடைதலின் நிறுவலை உருவாக்கியிருக்கிறார் கதாசிரியர்

திரு. வண்ணதாசன் அவர்கள்

நன்றிகள்!

💐

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (4-Feb-25, 4:55 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 4

மேலே