பொழுதிருந்தால் போராடு
நிலமீது எதுவும் சரியில்லை
நிகழ்வதெல்லாம் இங்கே தவறென்று
கோபம் கொள்ளும்
கொள்கையுடைய தோழர்களே !
மாற்று வழி குறித்து
சிந்தித்ததுண்டா?
திருத்தியமைக்க நீங்கள்
தீர்மானித்தீர்களா?
பூமியை புரட்டிபோட
புறப்பட்டீர்களா?
போராட்டத்தின் புதிய வடிவத்தை
செதுக்கி கொடுக்காமல்
உண்ணாவிரதம் உடன்பாடில்லை
அறப்போராட்டம் அலுத்துவிட்டது என்று
அரசியல் பேசாதே....
நீ என்ன செய்துவிட்டாய் ?
வீட்டுக்குள் அமர்ந்து
விமர்சிப்பதை தவிர....
உன்னால் என்ன செய்ய முடியாது ?
பூமியை புரட்டி போட
வானத்தை இழுத்து போட
சிரிக்காதே தோழா
எதுகை மோனைக்காக
எழுதிவிட்டேன்...
எதார்த்தம் சொல்கிறேன் கேள்..
கூலி வேலைக்கு போகும்
குழந்தைகள் நிறுத்தி
வாரம் ஒரு நாள்
வகுப்பெடு....
பாடத்திட்டத்தை கற்றுகொடுக்க
பள்ளிகூடமிருக்கு
ஆகையால்
அறியப்படதா உண்மைகளை
அவர்களுக்கு அறிமுகப்படுத்து....
மலைவாசிகளுக்கு
மார்க்சியம் சொல்லிக்கொடு
விவசாயிகளுக்கு விஞ்ஞான
விபரங்கள் கற்றுகொடு...
உணவகத்தில்
உண்டமிச்சம் இருந்தால்
உடனே பொட்டலம் கட்டு...
வழியில்
உன் வருகைக்காக
வறுமையில் ஒருவர் காத்திருப்பார்.
வாழைப்பழம் தின்று
தோலை தூக்கியெறிந்து விடாதே....
காகிதத்தை மேய்ந்து கொண்டிருக்கும்
அனாதை பசுக்களுக்கு
அன்பளி....
கிராமபுறங்கள் சென்று
புரியும்படி தொழில் நுட்பம் பேசு..
அனாதை விடுதிகளுக்கு
சோறு இலவசங்களோடு செல்லாதே
சொந்த காலில் நிற்பது பற்றி
சொல்லி கொடு..
நம்மில் ஒருவனை
தலித்தென்று செய்தி வெளியிட
அனுமதிக்காதே...
அவன் என்
உடன்பிறப்பென்று உத்தரவிடு....
மனிதநேயம் மட்டும் போதாது
நண்பா.....
குருவி இனம் அழிகிறது
குரல் கொடு....
பரிணாமத்தில்
மரம் நம் மாதா
அவளை வெட்டுகிறான்
மறியல் நடத்து...
மகள் மகன் போல
மரம் வளர்த்தெடு....
அநீதிக்கு எதிராக
அணிதிரட்டு..
யாரும் வரவில்லையா...?
தனியொருவனாக தர்ணா இரு...
உண்மையிருந்தால்
உலகம் உன் பின் திரளும்...
பொங்கி எழுத்தால்
பொழுது இருந்தால்
வா போராட....
கோபத்தை
செய்யுள் ஆக்காதே
செயலாக்கு...
தாயின் மரணத்தால் - கண்ணீர்
தழும்ப தழும்ப
அழும்
என் தோழா...
கொஞ்சம் எழுந்து நில்...
ஆதரவற்று தெருவில் கிடக்கும்
அத்தனை தாய்மாருக்கும்
இனி
நீதான் மகன்....
வாடா போகலாம்
போராட......
----- தமிழ்தாசன் -----