நல்ல படைப்பாளிகளுக்கு இங்கே முகவரிகள் ஏதுமில்லை...! ஏன்?
ஏனிந்த முரண்போக்குக் கொள்கைகளால்
உங்கள் முட்டியைத் தரையில் நட்டு வைத்துக்
கிடக்கிறீர்கள்...!
பிரபல்யம் இவரென பொய்ச்சாயமும் பூசுவதேன்..
படைப்புகளைக் கொண்டாடிப் போவதை விட்டு
பார்வையாளர் கூட்டத்தைக் கொண்டு
தேர்வுசெய்யும் மடமையும் தமிழுக்குச் சிறப்பாமோ?
காணும் திசை யாவினுமே கண்டது எல்லாம்
கனாப் படமே ஞாலமும் பொய்யோ !
இம்மானுடமும் மெய்யோ!
கேள்விகளாயிரம் தனைத்துவந்த...
ஊணிலிருந்து உயிர்பெறும் வார்த்தை கோர்த்து
வார்த்த வரிகளை எல்லாம் தந்தான் மெய்ஞான்...
எருதுக்கஞ்சி யானையில் வந்து எமன் கொன்ற
என் மெய்யான்...
தொட்டிருக்கவேண்டிய உச்சம் இன்று தொடங்கியதின் கீழேயே குழிபறித்துச் சரிந்துகிடக்கிறதே!...
கவைக்குதவா கூவல்களை
கவிதை என்னும் நிலையுமிங்கே ஏன்?
எதுகை மோனையை ஏறுக்குமாறாய்...
உவமையும் உருவகமும் நேருக்குக்கீழாய்...
எதைஎதையோ எழுதிக்கிறுக்கும்...
அச்சாணியற்ற சக்கரக் கூச்சல்களை கவிதை என்றா கொண்டாடுகின்றீர்..
எம்போலானோர் தாங்கிலன்...
எம்போலானவரோ நிச்சயம் தாங்கிலர்...
மரபுக்கூட்டத்தின் பாமந்தை நடுவே...
”புல்லின் இதழ்” கொண்டு புரட்சிக்கவி செய்த
வால்ட்விட்மனையும் தான் தெரியாயோ!
யாப்பை உடைத்து மணீக்கொடியில்
புதுமைக்கவி பதித்து புதுக்கவிதையின் தந்தையான நாபியைப் புரியாயோ..!
வசனக்கவிகொண்டு வலிமைபெற
கவிப்டைத்து புதுக்கவியின் முன்னோடி என்றான்
எம் மெய்ஞான் பாரதியை அறியாயோ..!
யார் கேட்டார் இவரையெல்லாம் தெரிந்தும்
புரிந்தும்கொள்ள வேண்டுமென...! இல்லைப் புரிந்தாலோ தெரிந்தாலோ அறிந்தாலோ தான் கவிஞனென்றாகுமென...?
கேட்கவில்லைதான்... ஆனால்..
எழுதும் கவியிங்குச் சுமந்து வரும் எம் தமிழ்த்தீண்டலை நீவீர்
என்னவெல்லாம் கொல்கின்றீர்...!
ஓ...புதுக்கவிதையாளர்களே... உங்கள் வலைகளை
கடலுக்கப்பாற் வீசுங்கள்... உங்கள் ஏணிகளை
வானுக்கப்பாற் போடுங்கள்... உங்கள் வார்த்தைகளை உள்ளிருந்து தேடுங்கள்...
போதும் உங்களின் இடைபாட்டு...சலித்துவிட்டது..
எண்ணங்களை விஸ்திரமாக்குங்கள்...
வார்த்தைகளில் புதுமை தேடுங்கள்...
கருவைச் சுமந்து கவி புனையுங்கள்...
அர்த்தங்களை வரிகளாய் திரிக்காமல்
எழுத்துக்குள் அடக்கியாளுங்கள்...!
கோபங்களை கவிதை செய்யுங்கள்...
கவிதையில் புதுமை நெய்யுங்கள்...
உணர்வுகளை உலுக்கிப்போடுங்கள்...
வாசகனின் உதிரத்துள் நுழைந்து
தீந்தமிழால் வர்ணம் தீட்டுங்கள்...
இலக்கணத்தை உடைத்து எழுதும் வேளை
எட்டிப்பார்க்கும் போது எதுகை மோனையில்
எச்சம் போட்ட காதல் கூற்றை இன்னும் எத்துனை நாள் சூடு செய்து சமைத்துக்கிடப்பீர்...
உங்கள் வார்த்தை ஜாலங்களை எல்லாம்
மூட்டைகட்டி கடலுக்குள் வீசுங்கள்... ஊரென்ன பேசுமென உணர்வுகளைக் கட்டிப்போடாதேயுங்கள்...
உங்களைச் சுற்றியமர்ந்து
ஆஹா,ஓஹோவெனச் சொல்லி ஹாஸ்யப்பட்டுச் சிரிக்கும் துச்சர்கள்தான் உலகம் என்றெண்ணிக் கொள்ளாதேயுங்களேன்..
உலகம் இன்னும் பெரியது.. அங்கே இவைக்கும் மேலானவையுஞ் சாத்தியம்...
நமத்துப்போன கீதங்களை கழுவிலேற்றுங்கள்...
மரபு வானத்தைத் தகர்த்து பொழியட்டும்...உங்கள் மழை...
நீளம்பார்த்து வாசிக்கும் பேரினால் யாதும் பயனிலை... நீ சொல்லவந்தவை சொல்லிடு சுற்றிவளைக்காமல்..
அஞ்சாதே! அஃறினையும் அழிவென்றால்
அகத்தை முறைத்துக்காட்டும் மறவாதே...!
நல்ல படைபாளிகளாய்
நீங்களும் ஆவீர்; பேச்சைக் குறைக்கக் கடவீர்..
உங்கள் படைப்புகள் பேசட்டும்...
தேங்கிய குட்டைகள் பச்சையேறித்தான் போகும்...
ஓடும் தண்ணீருக்கு பூஞ்சகளோடு உறவில்லை...
****** ****** ******
படைபாளிகளை மட்டும் குற்றஞ் சொல்லி முடிந்ததா?
ரசிக்கும் விழிகளே.. போதும் உங்கள் கண்களால் வாசித்தது... மனதைத் திறங்கள்.. மக்கிப்போன நெகிழிக்குப்பைகளால் மண்ணுக்குப் பயனில்லை.. எரித்துப்போடுங்கள்
கருவில்லாத கட்டியை ஐந்திருமாதம் சுமந்தும் பயனில்லை அறுத்துப் போடுங்கள்...
மோசமென்றறிந்தால் முந்தலையில் குட்டிடுங்கள்... மோதிரக்கை என்றும் உங்களுடையதே...
மழுங்கிய கத்திகளை கூராக்க வேண்டிய கடமை உங்களுக்கிருக்கிறது...
துருவேறிய இரும்பை காய்ச்சலாகாது.. கடாசி எறியுங்கள்...
நல்ல படைப்பாளியை தமிழ்பேசும் நல்லுலகத்தின் முன் மேடையேற்றுங்கள்...
நாளைய தலைமுறைக்கு நற்கவிதனை அடையாளமாக்குங்கள்...
பாதை இன்னும் இன்னும் விஸ்திரமானது... ஆங்கே முட்களில்லை என்றால் அஃது வேறவனது... அவன் கடந்து சென்றது..
உங்களுதல்ல.. தேடிப்பிடியுங்கள்...
அது உங்களால் மாத்திரம் சாத்தியம்...
இல்லை இன்னும்தான் எச்சில் பண்டங்களையே ருசிபார்த்துக் கிடந்தால்.. என் கோபத்தை கொட்டிக் கொண்டே தான் தீருவேன்... என்குரல் உன்க்காயும் தான் தோழா..!
ஏனெனில் நான் முதலில் நல்ல வாசகன்... எனக்கும் கடமையுண்டு தமிழ் என் மூச்சென்பதால்...!
-கவிதைக்காரன்.