கலாச்சாரத்தில் கலப்படம் காதலர் தினம்...
கலாச்சாரத்தில் கலப்படம்
காதலர் தினம்...
தமிழ்க் கலாச்சாரத்தின்
தற்கொலை முயற்சி!
இந்தியப் பண்பாட்டின்மீது
இறங்கிய இடி!
வெள்ளைக்கார வேடன்
விரித்து வைத்த வலை
இதன்
கண்ணியில் சிக்கினால்
கற்புதான் விலை!
இந்த
மேனாமினுக்கிக் கலாச்சாரத்தின்
மீதான மோகம்
சுதந்திர இந்தியனின்
அடிமைக் காலத்து
சோம்பேறிச் சுகத்தின்
மிச்சம் மீதி!
பார்த்தும் ரசித்தும்
தொடுத்தும் முகர்ந்தும்
வருடியும் சூடியும்
கொண்டாடிய ரோஜாக்களைக்
கசக்கிப் பிழிந்து
குப்பையில் வீசிடும்
காமக் கொடூர தினம்!
உறியில் தொங்கும்
கட்டுச் சோற்றுக்கு
காவல் பாவனை செய்யும்
கள்ளப் பூனையின்
கிளுகிளுப்புத் திருநாள்!
இத்தினம்
இன்ப மென் றெண்ணி
இன்னலை விலைபேசும்
இளைமையின்
அறியாமை தினம்!
களவியல் ஒழுக்கத்தை
பேசுபொருளாக்கிக்
காப்பியங்கள் படைத்தவர்
நம் முன்னோர்!
நிலவும் பனியும்
இரவும் உறவும்
தனிமையில் கிடைத்தும்
எல்லை மீறாத
இல்லறம் கண்டவன் தமிழன்!
ஒவ்வொரு நாளிலும்
உரிமையுள்ள துணையைக்
காதலிக்கக் கற்ற
நம்மவனுக்கு...
ஓராண்டுக்கு ஒருமுறை
ஒழுக்கங்கெட்டு உய்ப்பதும்
போதையும் புணர்ச்சியுமாய்
வீணாவதன்றோ
அந்நியன் கொணர்ந்த
காதலர் தினம்!
இந்தியனே!
எல்லாவற்றிற்கும்
காந்திகளை எதிர்பார்க்காதே
அடிமைப்பட்டுத் தொலையாதே!
அன்புக்கும் பாசத்திற்கும்
நட்புக்கும் நேசத்திற்கும்
நாட்களை வகைப்படுத்தும்
நாகரிகம் நமதல்ல!
அன்பையும் பாசத்தையும்
அனுதினமும் பகிர்பவர் நாம்!
இந்தக்
கள்ளத்தனமான ஊடுருவலும்
கலாச்சாரத் தீவிரவாதமும்
கிழக்கிந்தியக் கம்பெனியின்றி
மேற்கத்தியன் செய்யும் சதி!
காதலர் தினம்
குடும்பவியல் கலாச்சாரத்தில்
குண்டுவைக்கும் கலப்படம்.
சிக்கிக்கொள்ளாமல் சிந்தி!