அவன் நிரபராதியாய் இறக்கக் கூடாது!

"அவன் நிரபராதியாய் இருக்க கூடாது!
சித்திரவதைக் கூடத்திற்கு
தள்ளிவாருங்கள் அவனை
குறி மறைத்த 'கோமணம்'போக
அவிழ்த் தெறியுங்கள் ஆடைகளை
செய்யாத ஒன்றை வினவும்போது
தெரியாது என்றுதான் சொல்வான்
இனி அவனை பேசவிடாது
குப்புற கிடத்தி மேசையில்
நாக்கை இழுத்து கொக்கியிட்டு கட்டுங்கள்
நகங்களை பிடுங்குவது சிரமமென்றால்
விரல்களை வெட்டுங்கள்

கசாப்பு கடைகளில்
கருணை பற்றி கேட்பது கேலிக்குரியது
தர்மங்கள்,நியாயங்கள் பற்றியெல்லாம் பேச
நீதி மன்று நடத்தவில்லை நாம்

இது நமது உலகம்
இங்கு கேள்விகள் கேட்கும் வலிமையும்
பதில்கள் கூறும் புலமையும்
நமக்கு மட்டுமே உரித்தானது"என

மூன்று நட்சத்திரங்களை கோர்த்து
தோளில் தொங்கவிட்டிருந்த
அதிகாரி அரங்கதிர
உரை நிகழ்த்தி ஓய்ந்தார்.

கரகோசத்தொடு கைதட்டல்கள்
லாவகமாய் குண்டு பொதியை
அவனுக்குள் ஒளித்துவைத்த சீப்பாய்
பாராட்டுக்குரியனாகி பரிசுகள் பெற்றான்
நன்றியுரை,,,,,.

சரி வாருங்கள்.....,
வேறொருவன் நம்மிடம் வந்து
விழும் வரை
போதியை நோக்கி
புத்தனை தரிசிக்க!
......................................,
இறுதியாக இன்றைய தீர்மானத்தின்படி
அவன் குற்றவாளியாகி இறந்திருப்பான்.


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (15-Feb-13, 1:28 pm)
பார்வை : 171

மேலே