விக்கல்

ஆயிரங்களை அள்ளி விடும் ஆசையில் ஐநூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அவசர நகரத்திற்கு என் கிராமத்தைப் பிரிந்து வந்து ஆண்டுகள் சில ஓடி விட்டன.
அவ்வப்போது சென்று வரும் சில நாட்களே மனதிற்கு மகிழ்ச்சியாய் இருக்கும். இறுதியாய் சென்று இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை, இந்த நேரத்தில் வேலையின் போதும் மற்ற நேரங்களிலும் அடிக்கடி வந்தது விக்கல்.
உணவு உண்ணும்போதும் ஓயவில்லை,,.
உறங்கச் செல்லும் போதும் நிற்கவில்லை இந்த விக்கல்.
அடுத்த அறை அண்ணன் சொன்னார் ப்ரியமானகவர்கள் என்னைப் பிரிந்து மனதிற்குள் நினைத்துக்கொண்டே இருப்பதால்தான்
இந்த விக்கல் என்று.
மூடநம்பிக்கை என்று வாய் சொன்னாலும் உள்மனதில் ஊரை விட்டுக்கிளம்பும்போது உற்சாகமின்றிக் கையசைத்த மாமன் மகளின் முகம் வந்து போனது.
எதையோ பறிகொடுத்தது போல் தோன்றிய அவள் பார்வையின் காரணம் இதுவாகத்தான் இருக்குமோ என்று நினைத்தேன்.
அடுத்தநாள் அவசரமாய் விடுப்பு சொல்லி அப்பொழுதே கிளம்பினேன் என் அழகு கிராமத்துக்கு.
பேருந்துப் பயணத்தின் போதும் நிற்கவில்லை இந்த விக்கல். மனதிற்குள் சிரித்துக்கொண்டே மங்கை அவளுடன் கற்பனையாய் பேசிக்கொண்டு வந்தேன். ஊருக்கு அருகில் வந்ததும்தான் என் கனவில் இருந்து வெளிவந்து பேருந்திலிருந்து இறங்கத் தயாரானேன்.
அடிமனதில் ஆயிரம் கனவுகளுடன் அன்னை மண்ணில் அடியெடுத்து வைத்தேன்.
அரசுப்பேருந்திலிருந்து இறங்கிய கால்கள் அத்தை வீட்டுப்படிகளை நோக்கி அசுர வேகத்தில் நடந்தன.
வீட்டின் முன்னறையில் அமர்ந்திருந்தாள் என்னவள்.
என்னைப் பார்த்ததும் ஆச்சர்யமான புன்னகை அவள் முகத்தில்.
நலம் விசாரிப்புகளுக்கு நெகிழ்வுடன் பதில் சொன்னேன்.
மற்றவர்களிடம் மனதே இல்லாமல் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவள் தன் அறையை நோக்கி அவசரமாய் நடந்து சென்றாள்.
அடுத்த நிமிடம் கையில் ஒரு காகித உறையுடன் வந்து, அதை என்னிடம் தந்து. வெட்கத்துடன் தலைகுனிந்து...
"அப்பா எனக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை "
என அடிக்குரலில் சொன்னாள் அவள்.
என் மனம் ஆகாயத்தில் பறந்தது.
ஆவலுடன் அதைப்பிரித்தேன் புகைப்படத்தில் என் முகம் காண,
அட்டகாசமான சிரிப்புடன் அதில் ஒருவன்., அது நானல்ல..!
அதிர்ச்சியாய் அவள் முகம் பார்த்தேன்..
வெட்கத்தால் அவள் முகம்சிவக்க வேதனையில் என் முகம் கறுக்க...
ஆசையாய் அவள் கேட்டாள்"அவர் எப்படி இருக்கிறார்" என்று.
"உனக்கேற்ற ஜோடிதான்" என்றேன், உடைந்த மனதுடன். சிறகொடிந்த பறவையாய் என் மனம் ஆகாயத்திலிருந்து தரை இறங்கியது.
அவளிடம் விடைபெற்று
விரக்தியாய் என் வீட்டை நோக்கி நடந்தேன்..
இன்னும் நிற்கவில்லை இந்த விக்கல்.
வாடிய முகத்துடன் வீடு வந்து சேர்ந்த போது
"வா! ராசா வா! உன்னைத்தான் நினைச்சுகிட்டே இருந்தேன்" என்று வாஞ்சையாய் வரவேற்றார் வீட்டுத்திண்ணையில் வெற்றிலை இடித்துக்கொண்டிருந்த
பாட்டி...!

எழுதியவர் : ராஜதுரை மணிமேகலை (19-Feb-13, 1:21 am)
பார்வை : 228

மேலே