பவர்ஸ்டார் புத்திசாலிதானே!

நானும் பவர்ஸ்டாரும் படம் பார்க்க சென்று இருந்தோம். சூபர் ஸ்டாரின் மாபெரும் வெற்றிப் படம் ஒன்று.
டிக்கெட் கிடைப்பது அரிதாக இருந்ததால் படம் திரைக்கு வந்து பல நாட்கள் சென்ற பின்பே என்னால் பார்க்க முடிந்தது. அதனால் கிடைத்த இரண்டு டிக்கெடுகளில் ஒன்றை பவர்ஸ்டாருடன் பகிர்ந்து கொண்டேன்.

ஒரு காட்சியில், சூபர் ஸ்டார் எட்டாவது மாடியில் இருந்து குதிப்பது போன்ற காட்சி வர இருந்தது.

சூபர்ஸ்டார் மாடியில் நின்று இருக்க கேமிராவால் அவர் தொலை குவிப்பு (long shot) அண்மை குவிப்பு (close up shot) செய்யப்பட்டு காட்டப்பட்டு கொண்டிருந்தார்.

உடனே நான் இந்த காட்சியில் சூபர்ஸ்டார் மேலிருந்து விழுந்து கால் ஒடித்துக் கொள்வார் என்றேன். அவரோ உடனே இல்லை அவர் சூபர் ஸ்டார் ஆயிற்றே அதனால் அடிபடாமல் தப்பி விடுவார் என்றார்.

இருவரும் பந்தயம் வைத்தோம். நான் நூறு ரூபாய் பந்தயம் என்று சொல்ல, அவரோ இல்லை இல்லை நீங்கள் சொல்வது தவறாக இருந்தால் நூறு ரூபாய் சரி வாங்கிக் கொள்கிறேன். நான் சொல்வது தவறாக இருந்தால் ஆயிரம் ரூபாய் தருவேன் என்றார். பவர்ஸ்டார் ஆயிற்றே மிகவும் நம்பிக்கையுடன் சொன்னார். சரி என்று இருவரும் ஒப்புக்கொண்டோம்.

காட்சி வந்தது. சூபர் ஸ்டாரும் விழுந்தார், நான் சொன்னது போலவே கால் ஒடிந்து போனதாகவே காட்சி அமைந்தது.
உடனே நான் எடுங்கள் ஆயிரம் ரூபாய் என்றேன். அவரும் என்னிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்து “சே, சூபர் ஸ்டார் என்னை ஏமாற்றி விட்டார் என்றார்”.

கையில் ரூபாயை வாங்கிக்கொண்ட நான், உடனே "சூபர் ஸ்டார் உங்களை ஏமாற்றவில்லை. நான்தான் ஏமாற்றி விட்டேன். இந்த காட்சியை நான் பலமுறை சின்னத்திரையில் விளம்பரமாக பார்த்துள்ளேன். ஆனால் முதல்முறையாக பார்த்தது போல உங்களிடம் பந்தயம் கட்டினேன். நீங்களும் ஏமாந்து போய் பணம் கொடுத்து விட்டீர்கள். இந்தாருங்கள் உங்கள் பணம்” என்று அவரது பணத்தை திருப்பிக் கொடுத்தேன்.

அதற்கு அவரோ, “இல்லை அன்பரே, நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் நேர்மையானவர். உண்மையை சொல்கிறீர்கள். அதனால் ஏமாற்றுவது நீங்கள் இல்லை. ஏமாற்றியது என்னை சூபர் ஸ்டார்தான் என்றார்.
சரி திரைப்படத்துறையில் இருப்பதால் தனிப்பட்ட வரவு செலவு சங்கதியாக ஏதோ சொல்கிறார் என நினைத்து அக்கறையுடன் விசாரித்தேன்.

அவரோ, “இல்லை அன்பரே நீங்கள் இந்த காட்சியை விளம்பரத்தில்தான் பார்த்திருகிறீர்கள். அதனால் சரியாகத்தான் பந்தயம் கட்டி இருக்கிறீர்கள். நானோ சூபர் ஸ்டாரின் பரம ரசிகன். இந்த படம் முழுவதுமாக பதினைந்து முறை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு காட்சியும் எனக்கு மனப்பாடமாகத் தெரியும்” என்றார்.

நானோ “தெரிந்திருந்தும் பிறகு ஏன் ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டினீர்கள்?” என்றேன்.

அதற்கு பவர்ஸ்டாரோ, "இத்தனை முறை விழுந்து காலை உடைத்துக் கொண்ட சூபர்ஸ்டார், அனுபவ மிகுதியால், இந்த முறையாவது விழுந்த பிறகு கவனமாக இருந்து கால் ஒடியாமல் தப்பித்து விடுவார் என்று உறுதியாக நம்பினேன், ஆனால் சூபர் ஸ்டார் என்னை ஏமாற்றி விட்டார்” என்றாரே பார்க்கலாம்.

ம்ஹூம் என்ன இருந்தாலும் பவர்ஸ்டார் அல்லவா. நல்ல புத்திசாலிதானே.

எழுதியவர் : மங்காத்தா (19-Feb-13, 11:11 pm)
பார்வை : 378

மேலே