இதில் என்ன பெருமை?

அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கணினி மென்பொறியாளர் மலேசிய நாட்டு பெண்ணைத் திருமணம் செய்ததாக பத்திரிகைகள்,ஊடகங்களில் செய்தி வெளியானது. இணையதளம் மூலமாக காதலித்து திருமணம் செய்துகொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக பெருமளவில் நடந்து வருகின்றன. நம்மூரைச் சேர்ந்த ஒரு குப்பனோ அல்லது சுப்பனோ வெளிநாட்டிலுள்ள வாயில் நுழையாத பெயரை வைத்திருக்கும் பெண்ணைக் காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும் பெரிய விஷயம்தான். வேறு எந்த துறையில் நாம் முன்னேறியுள்ளோமோ தெரியவில்லை. இந்த விஷயங்களில் நம்மூர் ஆசாமிகள் கில்லாடிகள்தான்.
இதில் தவறேதும் இருப்பதாகக் கருதவில்லை. இருந்தாலும் நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. அதில் காட்டாத அக்கறையை இதுபோன்ற நிகழ்வுகளில் காட்டுவது தேவைதானா என்பதே கேள்வி. வெளிநாட்டுக்குச் சென்றோமா, சம்பாதித்தோமா என்றில்லாமல் திருமணத்துடன் நிற்கும் இளைஞர்கள் பலர்.
இதில் என்ன பெருமை இருக்கிறது என்பதுதான் புரியவில்லை. இதனால் இருநாடுகளுக்குமிடையே ஏதாவது புரட்சி ஏற்படுமா.. அல்லது நட்பு வலுக்குமா என்பதும் தெரியவில்லை. மேலும் நம் நாட்டு கலாசாரத்துக்கு இத்தகைய திருமணங்கள் ஏற்றதுதானா அல்லது ஒரு பெருமைக்காக நடத்தப்படுகிறதா என்று பல கேள்விகள் எழுகின்றன.
பல கிராமங்களில் இந்த நிகழ்வை ஏதோ பெரிய சாதனை போலவே பார்க்கின்றனர். குடிக்க கூழ் இல்லை, கொப்பளிக்க பன்னீர் கேட்குதா என
கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. அதே போல பலரும் இத்தகு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் பிறந்த ஊர், நாடு இதுபற்றி யாரும் கவலைபட்டதாகத் தெரியவில்லை.
கிடைக்கும் ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு ஊரில் வசதி,வாய்ப்புகளுடன் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறுவதுபோல தன்பெண்டு... தன்பிள்ளை... என்ற சுயநலவாதிகளாக மாறிவிட்டவர்கள் பலர். வெளிநாட்டுப் பெண்ணை மணந்து கொண்டதால் என்ன பலன் கிடைத்தது என்பதை உற்றார்,உறவினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்நாட்டில் எத்தனையோ ஏழைச் சகோதரிகள் திருமணமாகாமலும், வறுமையாலும் வாடி வருகின்றனர். ஆனால் படித்த, நன்கு சம்பாதிக்கிற இளைஞர்கள் அதுபோன்றவர்களுக்கு வாழ்வளித்தால் ஒரு குடும்பத்தைக் காப்பாற்றிய பெருமைக்குரியவராகப் போற்றப்படலாம்.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது தனக்கு வரும் வாழ்க்கைத் துணைக்கு மட்டுமே என சிந்திப்பதைத் தவிர்க்கலாம்.
வெளிநாட்டுப் பெண் இந்தியாவுக்கு வந்து தமிழோ, பிற மொழியோ கற்றுத் தேர்வது என்பது உடனே நடக்கிற காரியமாகத் தெரியவில்லை. இதனால் குடும்ப உறவுகள், மாமியார், மாமனாரிடம் பேசும் உற்சாகமெல்லாம் போய்விடும். திருமணத்துக்குப் பிறகு இதுபோன்ற மணமக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா, அந்த மணமகளுக்கு இந்த ஊர் ஒத்துப் போகிறதா என்றெல்லாம் சிந்திப்பதில்லை. கண்டதும் காதல், கொண்டதே கோலம் என்ற ரீதியில் இதுபோன்ற கலாசாரங்கள் அண்மைக் காலமாக அதிகம் பெருகிவருவது யோசிக்க வைக்கிறது.
எதற்கும் இதுபோன்ற கொள்கை முடிவுகள் எடுப்பதில் வெளிநாடு வாழ் இந்திய இளைஞர்கள் சற்று நிதானம் காட்டுவதே சாலச் சிறந்தது. மரபுக்கு மீறிய சில செயல்களால் இளைய சமுதாயம் தங்களின் இதயத்தில் இதுபோன்ற சலனங்களுக்கு இடம் கொடுக்கலாமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
சாதிக்க வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கும்போது இதில் தேவையில்லாமல் தங்களது ஆற்றல், அறிவை வீணாக்கலாமா?.
ARUN

எழுதியவர் : (22-Feb-13, 12:47 am)
சேர்த்தது : S.RAVINDRAN
பார்வை : 98

மேலே