கண் துப்பும் உப்பு நீர் !
![](https://eluthu.com/images/loading.gif)
புருவமெனும் பந்தலுக்குக் கீழ்
இமைகளின் கதகதப்பில்
இளைப்பாறும் - மனிதனின்
தானியங்கிப் புகைப்பட கருவி...
உணர்வுகளை உள்வாங்கி
உலராமல் உருக்குவதால்
ஊறுவது கண்ணீர் !
எல்லா கண்ணீரும்
அழுகையின் விளைவன்று !
கண்ணீர் சுரக்காத
அழுகைகளும் உண்டு !
ஒவ்வோர் பிறப்பின்போதும்
ஒரு குடும்பமே அழுகிறது...
அம்மாவின் வலி...
அப்பாவின் ஆனந்தம் - வெளிச்சம்
கண்ட குழந்தையின்
இருட்டு துறந்த இன்பம் !
கண்ணின் காலடியில்
கருவாகி - லாக்ரிமல்
குடுவையில் தேங்கி...
உணர்வுகள் வீங்கையில்
கன்னக் காடுகளில்
கடுகென இறங்கிவிழும் இவை
சாதிக்காததில்லை - இவற்றை
சந்திக்காதவருமில்லை !
ஆணுக்கு அரியதாகவும்
பெண்ணுக்கே உரியதாகவும்
பேச்சுண்டு இதைப்பற்றி...
பாலினங்களுக்கு அப்பாற்பட்டது !
பெண்களின் பேராயுதம்
ஆண்களின் அங்குசம் !
காதலும் காதலியும்
அடிக்கடி தருமிதை...
வெங்காயமும் தருவதுண்டு !
தகுதியற்ற யாருக்காகவும்
சிந்தாதீர்கள் - உப்புடன் கூடிய
உயர் திரவமது, உயிர் துறக்குமது !
மனம் பூண்ட மங்கைகளும்
பிடித்த ஒருவரின் பிரிதலும்
புரிதலின் கடையிலும்
துக்கத்தின் நடையிலும்
இன்பத்தின் இடையிலுமென
எப்போது வேண்டுமானாலும்
வந்து விழும் - இக்கண்ணீர்
திவலைகளை - விரும்பிக் குடித்து
பெருத்துப்புவது - தலையணைகளே !
கண்ணீர்
உணர்வுகளின் வெளிப்பாடு !
கனவுகளின் தடைக்கோடு !
வரும் கண்ணீரை - ஆவியாக்கி
வரும் வெப்பத்தில்
வெற்றி சமைப்போம் !
வென்று குவிப்போம் !
அன்பு காணாததால்
எப்போதாவது எட்டிபார்க்கும்
என் கண்ணீர் - அன்புக்கானது !
எதிரிகளைவிட - அதிக
கண்ணீர் குடிப்பது நம்மவர்களே !