சாயங்கால ராகங்கள்

வயப்படாத காலத்தின்
ஆசைகள் மீட்டிய
புத்தம் புதிய சாயங்காலராகம்,

வருகை தரும்
அனைவர் விரல்களையும்
தொட்டுக்கொள்ளும்
கற்கண்டு துண்டுகள்

வரவேற்பு வாசலோரத்தில்
எச்சங்களையும்
துடைத்துப் போட்ட கைரேகைகளையும்
திண்ணும் குப்பைத் தொட்டி

நீர் அலம்பிய முகத்தை
பார்த்துக்கொள்ளும்
கழிவறைக்கண்ணாடி

ஒரு கூட்டத்தில்
அரங்கு நிறைய
நிரம்பியிருந்தன கண்கள்

அங்கு இருக்கைகளில் உட்கார்ந்திருந்தன ஆளுமைகளோடு
சரிசமமாக சாதனைகள்

தொகுப்பாளினியின்
நாக்கில் ஒட்டிக்கொண்டன சொற்கள்

விழிகளை மறைத்துக் கொடுத்த
பொக்கைகளில் ஓடியொளிந்திருந்தன
ஏதோ ஒன்றுகள்,

நமட்டுச் சிரிப்புக்கு
பல்லிளித்தவாறு
புகைப்படக் கருவிகள்

செவிப்பறையில் செய்திகள்
குளிரூட்டப்பட்டது

வயோதிகளை
அழைத்து வந்த ஊன்றுகோல்கள்
படுக்கக் கிடந்தது
விறைப்பாய் தரையில்,

பின்னிருக்கையில்
குசுகுசு பேச்சூறுகள்

இடையிடையே
குறுக்கும் நெடுக்குமாய்
எழுந்து செல்லும் அவசரம்,

காலந்தோறும் சுமந்து
கொண்டுதானிருக்கின்றன
கலைந்து போன பின் இருக்கும்
அரங்க வெறுமையும்
அடுத்த கூட்டத்துக்கான
வருகையும்.

எழுதியவர் : -வாலிதாசன்- (26-Feb-13, 11:46 am)
சேர்த்தது : mukavaivaalidhasan
பார்வை : 101

மேலே