என் பெயர் பறவை
தசாவதாரம் படம் பார்ப்பதற்கு முன் எனக்கும் கேயாஸ் தியரியை பற்றி எதுமே தெரியாது. ஆனால் இன்று , நான் எதையெல்லாம் செய்கிறேனோ அல்லது செய்யாமல் விடுகிறேனோ , அதற்கெல்லாம் ஒரு கேயாஸ் தியரி இருப்பதாகவே எண்ண தோன்றுகிறது, எண்ணத்தோன்றலும் கேயாஸ் தியரியோ என்னவோ!
எனக்கு மிகவும் பிடித்த விசயங்களில் ஒன்று, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் பேசுவது, செயல்படுவது, தலை இழந்த முண்டம் தலையை தேடுவதை விட்டு ரயில் இடபக்கமிருந்து வலபக்கம் போனதா அல்லது வலபக்கமிருந்து இடப்பக்கம் போனதா அல்லது ரயில் இன்னும் வரவில்லையா அல்லது வந்து போன மாதிரி ஒரு கற்பனையா ....!
ச்சே .... இப்படிதான் ஒன்றில் ஆரம்பித்து வலி மறந்த சிறகுகளை சுமந்தபடி எப்படியும் பறந்து விட தீர்மானித்து எது எதற்கோ தாவி கொண்டிருப்பேன், சில போது கனவின் தொடர்ச்சியை விடியலில் தேடித் திரிவேன்...
மௌனங்களில் மூழ்கி கிடக்க, பேசுவதை தவமாக செய்வேன், பிறகு ஒருநாள் மௌனம் என்பதை கோபங்களால் வெளிப்படுத்துவேன். ஸ்ப்லிட் பெர்சொனாலிட்டி... கேள்வி பட்டிருப்பீர்கள், அதற்கு நல்ல உதாரணம் நான்தான் . கேயாஸ் தியரி எழுத ஆரம்பித்தது ஒருவன், இதோ இங்கே எழுதி கொண்டிருப்பவன் இன்னொருவன். எனக்குள் ஒருவன், உன்னை போல் ஒருவன், எவனோ ஒருவன், ஒருவன் இதெல்லாம் எனக்கு பிடித்த சினிமா தலைப்புகள்.
இதோ எழுத எழுத மின்சாரம் போய் விட்டது. அது எல்லாம் என்னை தடுக்க முடியுமா? எனக்கு ரெம்ப நாளாக ஒரு விஷயம் மேல் ஈடுபாடு அதிகமாகி அது எப்படி என்று கண்டு பிடிக்க முயற்சிக்கிறேன்.. அதாவது, கனவு வண்ணங்களில் வராதாமே...ஒவ்வொரு கனவையும் உற்று உற்றுதான் பார்கிறேன். இந்த வண்ணங்களின் நினைவு மறந்தே போகிறது ... வண்ணங்களில்லாத உலகம் எப்படி இருக்கும், ரத்தம் கூட கருப்பாகதானே இருக்கும்...
நான் முதன் முதலாக எழுதியது, ஏன் எழுதியது என்று முடித்து கொண்டேன் என்றால், அதை ம் ம் ம் நீங்களே படித்து அதை எது என்று தீர்மானித்து கொள்ளுங்கள்...
விண்ணுக்கொரு கல்பனா சாவ்லா
மண்ணுக்கொரு ஜுகி சாவ்லா
நல்லாருக்கே என்றால் காயத்ரி... விடாது கருப்பு .. அப்படிதான் இன்று வரை விடாமல் இருக்கிறது எழுத்து.. எழுத்தென்பது கடவுள், பூசை, சாமி, விதி, பரிசு அப்படி எல்லாம் ஏதுமல்ல .. அது எழுத்து ... அது என் வழியாக எழுதிக் கொள்கிறது.. எனக்கும் அதற்கும் தொடர்பென்றால் கடைசியில் நான் போட்டுக்கொள்ளும் எனது பேர் மட்டுமே...அது ஒரு சுயநலம். சுயநலத்தில் தானே போது நலம் ஆரம்பிக்கிறது... இப்படிதானே பொருளாதாரம் ஆரம்பிக்கிறது...
வழக்கு எண் படம் பார்த்தேன்.. இரவெல்லாம் நிலவை எட்டி உதைத்தபடியே உலவிக்கொண்டிருந்தேன். பூவே உனக்காக பார்த்து விட்டு அந்த படத்தின் ஹீரோ விஜய்யின் உடல் மொழியில் ஒரு வாரம் திரிந்தது ஞாபகத்தில் குதித்தது, ஆனால் இது வேறு விதமான ஞாபகக் கிளறல். காதலை பறித்துக்கொள்ளும் வித்தையில் வித்தை காட்டுபவன் கோமாளி ஆகி விடுகிறான்,.. காதல் தானாக விழும் பழம் போல, கை விரித்து காத்திருப்பவனே கணவான் ஆகிறான்..
"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.."- விவிலிய கூற்றுப்படி இயேசுகிறிஸ்து என்ன நினைத்தாரோ அதுவாகவே ஆகி இருக்கிறார்...மனம் ஒரு விசித்திர பறவை... அது பறக்கிறது, நடக்கிறது, அமருகிறது, பாடுகிறது, தேடுகிறது, பேசுகிறது, அழுகிறது, சிரிக்கிறது, யோசிக்கிறது,.....ஆம் சில போது ஒரு பறவை போலவும் சில போது இறந்து போன மனிதர்களாகவும்...
நெருங்கியவரின் மரணத்தில் மட்டும்தான் அழுகை நிஜமாகிறது.. ஆழ் மனம் அழுகையில், கண்ணீர் காணாமல் போகிறது. இறந்ததை ஒப்புக்கொள்ளாத மனதில் விடாது கருப்பு, மனித உயிரின் தடுமாற்றம் நிறைந்து வழிகிறது...அங்கே மரணம் மரணிக்க யாகம் நடக்கிறது... யாகங்களில் கடவுள்கள் சபிக்க பாடுகிறார்கள், கொக்கரிக்கும் சாத்தான்கள் சட்டென அமைதியாகிறார்கள்.. மரணங்கள் மறக்கப்படுகின்றன..
இந்த மழை இருக்கிறதே.. இருக்கிறது அதற்கென்ன என்கிறீர்களா ... தாத்தாவின் குடை கொண்டு போகும் போது அது தாத்தாவின் மழை ஆகிறது.. மாமாவின் குடை கொண்டு போகும் போது அது மாமாவின் மழை ஆகிறது. அவள் மழை எப்போது தெரியுமா? குடை மறந்த நாளில் .. ஆனால் வெறும் மழையாவது , அட, மழையை எதிர்பார்த்து வராமல் போகையில்.... இப்போது அது வெறும் மழை .....
எப்படி முடிக்க, இன்னும் வாசல் பெருக்கி கோலம் போடும் முகச்சுருக்கம் விழுந்த பாட்டியின் நாட்களில் மிஞ்சிக்கிடக்கும் மகனும் பேரனும் ஒரு கேயாஸ் தியரிக்குள் வந்து விட வேண்டுகிறது , பெயரில்லாத, முகவரியில்லாத ஒரு பறவை.....
சில போது என் பெயர் பறவை......

