நானே என் முதல் கவிதை

தேவதை வம்சமே
தேர்ந்தெடுத்த அம்சம் - நான்
பூக்களின் புன்னகையையே
பூணரமாய் பூண்டவள் - நான்

வானிலிருந்து வடியும் முதல்
வான்மழை துளி வேண்டும் - என்
நெற்றிக்குப் பொட்டாய் - நான்
நெய்தெடுக்க வேண்டும்

மேகத்தின் மென்மையிலும்
மேலானதொன்று வேண்டும் - என்
பாதத்தின் அடியில்
பாதணியாய் நான் படிவிக்க வேண்டும்

பூவாலே ஓர் படுக்கை
பூவினிலே வேண்டும் - எந்தன்
மலர் பந்தையொத்த மார்பு
மறைவாய் சாய வேண்டும்

காம்பில் வடியும் தேன்- வெயிலில்
காய வடிக்க வேண்டும் - என்
தேனிலும் இனிய என்றும்
தேக்காத இதழதை பருக வேண்டும்

கவரிமான் புள்ளி எல்லாம்
கலையாமல் அள்ளி வர வேண்டும் - என்
வாசமிகு வாசலெல்லாம்
வண்ண வண்ணமாய் கோலமிட வேண்டும்

தோகை மயில் ஆடுமொரு
தோரணை இங்கு வேண்டும் - நான்
ஒய்வெடுக்கும் நேரமெல்லாம்
ஓயாமல் ரசிக்க வேண்டும்

இத்தனை அழகும்
இனிமையாய் நிறைந்திருக்கும்
என் கற்பனை உலகமிது
எனினுமொரு உண்மை இறுதியாய்


போதி மரமாய் என் கண்கள்
போதனை கூறுமென் பார்வை
ஆயிரம் கவியாத்திருப்பினும்
நானே என் முதல் கவிதை

எழுதியவர் : ரொசானா ஜிப்ரி (5-Mar-13, 7:14 pm)
பார்வை : 167

சிறந்த கவிதைகள்

மேலே