பெட்டைப்பிள்ளை பிறக்க பெண் காரணமல்ல...

மாமியார் மருமகள் முறுகலில் "இவளொருத்தி வந்தாள், பெட்டைச்சிகளையே பெத்துக்கொட்டுகிறாள்." என்று மாமியார் திட்டிக்கொள்ள மருமகள் கண்ணீர் வடிப்பதைக் கண்டிருப்பியள். உங்களை இம்மருமகளாகக் கருதி/எண்ணி; உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றியிருக்குமெனக் கூறமுடியுமா?

தாயின் முட்டையும் தந்தையின் அணுவும் இணைந்தால் கரு உருவாகும். இவ்வுருவாக்கத்தில் ஆண், பெண் குழந்தைகளைத் தீர்மானிப்பதே தாய், தந்தையரின் அணுக்கள் செய்யும் பணி.

ஒவ்வொருவருக்கும் அவர்களது அணுக்களில் 23 இணை(சோடி) குரோமோசோம்கள் உள்ளன. இதில் 22 இணை(சோடி) உடல் நிலைக்கும் ஒரு இணை(சோடி) பால் நிலைக்கும் உதவுகிறது.
அதாவது
பெண்களில் 22+(x+x) குரோமோசோம்களும்
ஆண்களில் 22+(x+y) குரோமோசோம்களும்
காணப்படும்.
கருவுருவாக்கத்தில் பெண்ணிலுள்ள x குரோமோசோமும் ஆணிலுள்ள x குரோமோசோமும் இணைந்தால் பெண் குழந்தையும்; பெண்ணிலுள்ள x குரோமோசோமும் ஆணிலுள்ள y குரோமோசோமும் இணைந்தால் ஆண் குழந்தையும் பிறக்கும்.

ஒரு இணையர்கள்(தம்பதிகள்) அடுத்தடுத்து ஆண் குழந்தை பெற்றுக்கொள்வதற்கோ பெண் குழந்தை பெற்றுக்கொள்வதற்கோ, ஆணிலுள்ள x, y குரோமோசோம்களே காரணம். எனவே, இதிலிருந்து பெட்டைப்பிள்ளை பிறக்கப் பெண் காரணமல்ல என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

இரட்டைப் பிள்ளை, 3 பிள்ளை, 5 பிள்ளை, 7 பிள்ளை, 11 பிள்ளை, 13 பிள்ளை எனப் பெறுவதற்கும்; எங்களுக்கு வந்தாளே ஒருத்தி இவள் தான் எல்லாவற்றுக்கும் காரணமென்றும் உங்கள் மாமியார் உங்களைத் திட்டவும் கூடும். ஏனென்றால், நம்மாளுகள் ஆண்களில் குறைகாணாமல்; அன்று தொட்டு இன்று வரை பெண்களில் மட்டும் குறை காண்பது வழக்கமாயிற்று.

ஆணின் அணுவும் பெண்ணின் முட்டையும் இணைந்தால் கருவுருவாகும் என்கிறோம். உருவான கரு பிளவுறும் நிலையும் ஏற்படுமாம். இவ்வாறு பிளவுறும் கருக்கள் தனித்தனியே குழந்தைகளை உருவாக்குமாம். இதன்படி பிளவுறும் கருக்களின் எண்ணிக்கைக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பிறக்கிறதாம். இதற்கு ஆண், பெண் இருசாரரரிலும் குற்றமில்லையே!

எழுதியவர் : யாழ்பாவாணன் (7-Mar-13, 5:26 am)
பார்வை : 221

மேலே