மகளிர் தின வாழ்த்துகள்
நான்
மகளிர் தின வாழ்த்துகள்
சொல்ல விரும்பியது:
"'உணவு தயாரிக்க
நேரமாகிவிட்ட
இரவுகளில்:
உறங்கி விட்ட
என்னை எழுப்பி
உணவு ஊட்டி,
நாங்கள் உண்டதால்
உணவு
தீர்ந்து போய் விட
அடியில் ஒட்டியிருந்த
உணவை
அடியில் தேங்கியிருந்த
குழம்புடன் பிணைந்து -
உண்ண
செல்லும் வேளையில் :
எனக்கு –
என நீண்ட
என் கையில் கொடுத்து
நான்
உண்பதை ரசித்து -
அவள் பசி மறந்த ,
கால் வலியினால்
தூக்கம் வராமல்
புரண்டு படுத்த நேரங்களில்:
என் காலை
அவள் மேல் போட்டு
உறங்க வைத்த,
இன்று வரையில் - என்னை
குழந்தையாய் பார்க்கும்’’
என் அன்னைக்கு தான்..!
நான் அவளுக்கு
மகளிர் தின வாழ்த்துகள்
சொல்ல
என்னடா சொன்ன
என்று
புரியாமல் அவள் கேட்க
என்னை படிக்க வைத்த –
அவள்
படிக்கவில்லையே
என்பது நினைவுக்கு
வர
அமைதியாகி விட்டேன்..!

