தபுதாரன்-கே.எஸ்.கலை !
மாங்கல்ய முடிச்சேற்று
மனைவியாய் வந்த ஜோதி
மறலியின் பசி போக்க
மரணத்தை முத்தமிட்டாள் !
நாதியாய் வந்த சொந்தம்
தாதியாய் வாழ்ந்த பந்தம்
பாதியில் போன பின்பு
பீதியால் வெடிக்கும் நெஞ்சம் !
தாரமாக வந்தெனக்கு
தாயாக வாழ்ந்த தோழி- பெண்
பிள்ளையொன்று கையில்தந்து
பிரிந்துப்போன தர்மம் என்ன?
வருடங்கள் ஒவ்வொன்றும்
வாடாமல் நகரும் போது
பூப்படையக் காத்திருக்கும்
பூவுக்கென்ன நான் செய்வேன்?
வாடை காற்று வருடும் போதும்
ஆடை நாற்றம் நெருடும் போதும்
மடைதிறக்கும் இமைவெள்ளம்–அதற்கு
விடை என்ன நான் சொல்ல?
உப்பு காரம் அறிவின்றி
தப்பு தப்பாய் உணவு செய்து
மூவேளை தினம் தின்ன
நான் செய்த பாவம் என்ன?
சமையலறை பக்கம்
சட்டிப் பானை சத்தம்-அது
சஞ்சலத்தின் உச்சம்
சங்கடத்தின் முத்தம் !
அந்தி நேர இருட்டறையும்
அர்த்தஜாம ஒளிர் விளக்கும்
அவலப்படும் என் வாழ்வின்
அர்த்தமற்ற சின்னங்கள் !
மெத்தை மீது விழும் போது
வித்தை காட்டும் கடந்த காலம்
கூடை கூடையாய் குவியும் சோகம்
கொட்டித் தீர்க்க எங்கே போவேன்?
அணைத்து இன்பம் தருவதற்கும்
அதட்டிக் கோபம் தீர்ப்பதற்கும்
ஆளின்றிப் போன பின்பு
அனைத்தும் முடிந்து போனதிங்கு !
நீ எரித்த விறகின்று
உன்னை எரித்துப் போன பின்பு
நான் இருந்து பயனென்ன
நாதியாற்று துடிக்கிறேன் !
புன்னகை மாறாமல்
புகை படத்தில் இருப்பவளே...
உன் கன்னம் என் கண்ணீரில்
கழுவுவதும் சுகம் தானே ?
முகம் பார்த்து உன் அருமை
எப்போதும் பகர்ந்ததில்லை-நிழல்
படம் பார்த்து கெஞ்சுகின்றேன்
அடுத்த ஜென்மம் வேண்டுமென்று !
அடுத்த-ஜென்மத்தில் ஆணாக
நீ பிறந்து வாழ வேண்டும்-உன்
மனைவியாக நான் மாறி
உனக்கு சேவை செய்ய வேண்டும் !

