தொடரட்டும் பயணம்

ஒற்றுமை என்பது வெற்றித்திருமகள்
நெற்றியிலிட்ட திலகம் - தமிழ்ப்
பற்றினைக் கொண்டெழு ஒன்றெனச் சேர்ந்திடு
கிட்டிடும் வாழ்வி லுதயம் - உயர்
நற்றமிழோ உந்தன் நாவில் புரளினும்
இரத்தத்திலே கொண்டவீரம் - அதை
விற்றிடவோ விலைபேசிடவோ உந்தன்
சொத்தில்லை பாரம்பரியம்

வேற்றுமை விட்டணி செல்வாய் அதுவுந்தன்
வாழ்வினுக்கோர் அத்திவாரம் -இன்னும்
சுற்றி மனங்கொண்ட செந்தீ எழுந்துயிர்
கொள்ளும் சுதந்திர தாகம் - வெறும்
புற்றினில் சீறிடும் பாம்பின் விசம்விடப்
பொல்லா வெறியரின் மோகம் - இனி
முற்றும் எனத்துயர் கொள்வதை கண்டிட
முன்னெழுந்தார் இவர் வீரம்

பற்றிஎரியும் அடிவயிற்றி லெழும்
பாசமிகுந் திவர்போலும் - பல
கற்றிடும் நல்லவர் நெஞ்சி னனல்தனும்
காற்றினிலே பெரிதாகும் - தீயைப்
பெற்றிடும் செந்தமிழ் செல்வங்களேஇனி
முற்று மெரிந்திடும் நீசம் - நீவிர்
ஏற்றிடும் தியாகத்தின் தீயும் சுதந்திரம்
வெற்றிவரை தொடரட்டும்

செங்குருதி சிந்தப் பெண்களுயிரைக்
குடித்தவன் பஞ்சணை மீதும் - அவன்
தங்கமுடி தலைகொண்டர சாளவும்
தாழ்ந்து நலிவதோ நாமும் - இனி
சங்கு ஒலித்திடப் பொங்கியெழுந்தவர்
சந்தண மார்பெடு தீரம் கண்ணே
பொங்குமிதற்கொரு பாதைவிடு இது
புத்தொளி காணுமோர் நேரம்
**************

எழுதியவர் : கிரிகாசன் (15-Mar-13, 10:02 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 73

மேலே