உனக்காக உளறியவை-3

என் உயிர் இங்கே
ஏங்கிக் கிடக்கிறது
உன்னிடம்
மூச்சை இரவல் வாங்கி
மூச்சு விட..
..................................................
அடியேனின்
மெளனத்தில் கூட
அசரீரியாய் கேட்கிறது
உன் பெயர்.!
............................................................
சிரிப்பை தந்த காதல்
சில நாட்களே வாழும்
அன்பிற்காக அழுத காதல்
ஆயுள் வரை வாழும்
நான் அழுகிறேனே...!?
........................................................
காலையில் வருகிறாய்
காதலில் நனைக்கிறாய்
மாலையில் வருகிறாய்
கண்ணீரில் நனைக்கிறாய்
இரவில் வருகிறாய்
காதலை முறிக்கிறாய்
கரும் பலகையில் எழுதி எழுதி
அழித்து விடும் சிறுமி போல....!!!
...................................................................
உணர்வை முறுக்கி
உயிரை உருக்கி
உனக்காக கவிதையெழுதி
உன்னிடம் தருகிறேன்
நீயோ வேறொருவன்
கவிதையை என்னிடம்
வாசித்துப் புகழ்கிறாய்...
என் காதலைப் போல்
என் கவிதையும்
உன்னிடம் ஏமாந்து போகிறது.!
.........................................................
என்னையே நினைத்துக் கொண்டு
உன் குடும்ப நபர்களையும்
என் பெயர் சொல்லி
அழைப்பதாக சொல்கிறாய்..
உன் மனதுக்கு தெரிகிறது
நான் யாரென்று.!
உனக்கு..!?
........................................................................
ஒரு நாள் கூட
நீ என் கனவில் வரவில்லை
என்கிறாய்...
நிஜமாக நானிருக்கையில்
நிழல் எதற்கு என்கிறேன்...
இப்போதும்
நாணத்தை நளினமாய்
மறைத்து விடுகிறாய்
உன் மனதை மறைப்பதைப் போல்.
.........................................................................
உன் சிறு துன்பத்திற்கும்
என்னுள் பெருவெடிப்பு
நிகழ்கிறதே
நான் கொண்ட அன்பு
சிறிதா? பெரிதா?

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (16-Mar-13, 8:16 am)
பார்வை : 196

மேலே