வாசித்ததில்…!நேசித்தது…!

வாசித்ததில்…!நேசித்தது…!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாக்தாத் வசப்பட்டு விட்டதால் ஏகத்துக்கும் மகிழ்ச்சி தைமூருக்கு. குதூகலத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தான்.
சுற்றி நிற்பவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.உற்சாகமும் துள்ளலுமாய் ஓடி வருகிறான் அவனது தளபதி. “இங்கிருக்கிற வழிபாட்டுத் தலங்களையெல்லாம் அழித்து விடலாமா மன்னா?”
பொதுவாகவே ஒரு நாடு வெற்றி கொள்ளப்பட்டபின் அங்கிருக்கக் கூடிய புராதன சின்னங்களையும், வழிப்பாட்டுத் தலங்களையும் அழித்து விட்டு செல்வங்களை, அடிமைகளை, அழகு நங்கைகளை, அள்ளிக்கொண்டு போவதுதான் வழக்கம் . எனவேதான் அப்படிக் கேட்டான்.”அவை என்ன செய்தன உன்னை?. இருக்கட்டும் விடு” அழிப்பதற்கான அவனது நீண்ட பட்டியல் ஒவ்வொன்றாய் முற்றாய் நிராகரிக்கப் பட்டபின் கேட்டான்,”அப்புறம் என்னதான் செய்யட்டும் மன்னா?” எதையுமே அழிக்க வேண்டாம் என்றால் பிறகெதற்கு இவ்வளவு சிரமப்பட்டு கைப்பற்ற வேண்டும் என்ற கவலை அவனுக்கு.
“போ, போய் கல்வி நிலையங்கள், நூல் நிலையங்கள், அனைத்தையும் அழித்துப் போடு. கவனத்தில் கொள், பாக்தாத்தில் ஒரு புத்தகம் இருக்கக் கூடாது. கொளுத்திப் போடு.” இதில் என்ன லாபம் மன்னா?” கொஞ்சம் அப்பாவியாய்த்தான் கேட்டான்.”முட்டாளே ! நூல்கள் மனிதனுக்கு புத்தியைத் தரும். புத்தி விடுதலைக்காக அவனைப் போராடத் தூண்டும். பாக்தாத் தொடர்ந்து நமது ஆளுகையின் கீழ் இருக்க வேண்டுமென்றால் இவர்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும் .புத்தகங்கள் இதைக் கெடுத்துப் போடும். தொணத் தொணவென்று பேசிக் கொண்டு நிற்காமல் சொன்னதைச் செய் விரைவாய்.”
தொண்ணூற்றி ஒன்பது விழுக்காடு சரியாய்த் தான் இருக்கும். ஆனாலும் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கமில்லாத காலத்தில் எங்கோ வாசித்தது என்பதால் பெயர் அல்லது இடம் தவறாகவும் இருக்கலாம். இருந்துவிட்டு போகட்டும் அதனால் ஒன்றும் முழுகிவிடாது. விஷயம்தான் முக்கியம்.
ஆக, அடிமைகளாகவே மக்கள் இருக்க வேண்டுமெனில் அவர்களிடமிருந்து புத்தகத்தை அப்புறப்படுத்திவிட வேண்டும். புத்தகங்களை வாசிக்காத மனிதன் தன் அடையாளம் இழப்பான். இதற்காகத்தான் யாழ் நூல் நிலையம் கொளுத்தப் பட்டது. உணர்வுள்ள தமிழ் பேசும் யாவரும் கண்ணீர் விட்டு அந்தத் தருணத்தில் அழுததும் அதனால்தான். ஈழத் தமிழினத்தின் அடையாளத்தை, சுயத்தை, வேட்கையை வேரறுக்கும் முயற்சியாகவே யாழ் நூல் நிலையம் கொளுத்தப்பட்டது.
எனில்,
சுதந்திரமாய் சிந்தித்து தமக்கான அடையாளத்தோடும்,பகுத்தறிவோடும்,எவனுக்கும் பணிய மறுக்கும் சுயமரியாதையோடும், மக்கள் இருக்க வேண்டும் என்று ஒரு அரசும் அரசு இயந்திரமும் விரும்பும் என்றால் அது தன் மக்களின் முன் புத்தகங்களைக் கொண்டு வந்து கொட்ட வேண்டும்…!
(குறிப்பு :- இரா.எட்வின் அவர்களின் எண்ண அலைகளின் மேல் பயணிக்க கட்டுமரத்தோடு தமிழனின் வரலாற்று வாழ்வாதரங்களை சேகரிக்க புறப்பட்டு விட்டேன்…நான்…!)

எழுதியவர் : Anbuselvan (16-Mar-13, 3:20 pm)
பார்வை : 312

மேலே