புவி சுற்றும் வரிகள்..(அகன் )
என்
கவிதை ஒன்றோடு
புவி சுற்றி வந்தேன்....
குவிந்து கிடக்கும்
மலர் நெளியும்
பூங்காவினுள்
நான்
திரும்பி வந்தப் போது
வெற்றுத்தாளாய்
என் கவிதை ....
செடியின் பூக்களுக்கு
முட்களாய்
எனது கவிதையின் சொற்கள்..!!
அலை ததும்பும்
நிலைக்கொள்ளா
கடலுக்குள்
நான்
மூழ்கி வெளி வந்தேன்
வெற்றுத்தாளோடு...
கரை தொடும்
நுரைகளாய் என் வரிகள்..!!
பறவை
நீந்தி
கானம் பாடும்
வானம் பறந்தேன்
நான்
சிறகை விரித்து முடித்து
கீழ் வந்தேன்
வெற்றுத்தாளோடு
விழு எரிநட்சத்திரங்களாய்
என் சந்தங்கள்..!!
உடுக்கை
உணவு
உணர்வு
விடுதலை
உயிர்
இழந்த மண்ணில் நுழைந்தேன்
என் கவிதையோடு நான்..
கண்டவை என்னுள்
குருதி வெளித்தள்ள
மீண்டேன்...
கவிதைத்தாளும் கவிதையும்
அங்கேயே...
புண் துடைக்கும் பஞ்சாய்
என் கவிதைத் தாள்
அடிமை இருட்டு
அழிக்க
குரல் எழுப்ப
உரிமையும் திராணியும் அற்ற
தொண்டைகளின் முழக்கமாக
என் சொற்கள்...
பாயில் விழுந்து
நோயில் புகுந்து
வாயில் மொழியடைத்துப்போன
உரை வீச்சென
என் வரிகள்...
இழந்தோரின் இதழ்களில்
இனிய புன்னகைக் கீற்றுகளின்
உதயமாய்
இருக்கட்டும் நம் கவிதை...!!!
மக்கள் பற்றி
அவர் துயர் தொற்றி
எழுத மட்டும்
இனி குவியட்டும்
நம் விரல்கள்..
"மண்ணின் சோகத்தையும்
மக்களின் இழப்பையும்
பண்ணில் பதிய........"
-இதோ
என் முதற் கவிதை
தொடங்குகிறது.
-அகன்