வண்ணத்துப்பூச்சி பிடிக்காதா ?

வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்கள்
கரையக்கூடாதவை
மிதந்து வரும் வண்ணக்கலவையின்
உயிரோவியம் அதற்கு
பயணங்களும் தடைபடக்கூடாதவை

ஆயினும், பல தருணங்களில்
தன் சுதந்திரத்திற்கு
இடையூறற்ற தன்மையை
நிச்சயிக்க முடியாமல் தவிப்பதுண்டு

அமைதியையும் நிம்மதியையும்
நிரந்தரமாக்கும் புகலிடங்களை
சொந்தமாக்க இயலாமல்
திசையற்றுப் பறப்பதுண்டு

நட்பாட வரும் வேளைகளில்
சிலர்
வண்ணத்தை உரசிப் பார்ப்பதையும்
சிலர்
இறக்கைகளை ஒடித்து
விளையாடி மகிழ்வதையும்
சிலர்
வன்மக் கயிற்றில் கட்டி
பறக்கவிட்டு ரசிப்பதையுமான
விசித்திரங்களை
ஒருபோதும் நினைத்துப் பார்ப்பதில்லை
வண்ணத்துப்பூச்சி

தன் சகவாசம்
தனிமையிலென்பதை
யூகிக்கவும் முடியாத இடரில்
யதார்த்தங்களை இழக்காத உறுதியில்
விகல்ப்பமற்று மலராய்
மலர்ந்திருப்பீர்கள் என்று
உங்களையும் நாடுகிறது

மனம் எனும் வண்ணத்துப்பூச்சி !

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (25-Mar-13, 11:04 am)
பார்வை : 114

மேலே